ஒரு அரசாங்கத்தின்- ஆளும்கட்சியின் பொருளாதார- தத்துவக் கோட்பாடு, அதன் செயல்பாடு, வலது சாரியா? இடதுசாரி ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்திவிடும்.
ஒன்றிய பா.ஜ.க. கட்சியின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ சந்தை பொருளாதார போட்டி பொருளாதாரம் ஆகும். அதாவது, பொருளாதார உற்பத்தி, பகிர்வு சாதனங்கள் அனைத்தும் தனியார் துறையில் இருக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை பொருளாதாரக் கொள்கை. பா.ஜ.க. கட்சி ஆர்.எஸ். எஸ்.ஸின் இந்துத்துவா தத்துவத்தை ஏற்றுள்ளது. அதன்படி இந்தியாவின் அரசு மதம் இந்து என்று அறிவிக்க வேண்டும் என்ற கொள்கை உடையது. இது சமயச் சார்பற்ற ஜனநாயக கொள்கைக்கு எதிரிடையாகும். ஆக, பொருளாதாரத்தில் முதலாளித்துவ அங்காடி போட்டி, பொருளா தாரத்தையும் அரசியலில் ஒற்றை ஆட்சி முறையையும் பண்பாட்டில் வேத சனாதனத்தையும் கொண்டுள்ளதால் பா.ஜ.க. அரசு வலது சாரி என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. சனாதனம் என்ப தற்கு மாறாதது என்று பொருள்.
வறுமை, வேலையின்மை, பொரு ளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஒழிப்பதற்கு கொள்கை வழி செயல் பாடுகளை மேற்கொண்டு வரும் ஆட்சியை ‘இடது சாரி’ என்று மேலெழுந்தவாரியாகக் கூறலாம். ஆக, பணக்காரர்களுக்காக முழுக்க, முழுக்க செயல்படும் கட்சி ஆட்சியை ‘வலது சாரி’ என்றும், ஏழைகள் வாழ்விற்கும், வளத்திற்கும் பாடுபடும் அரசு, கட்சியை ‘இடது சாரி’ என்றும் அழைப்பர்.
பா.ஜ.க. அரசை ‘வலது சாரி’ என்றும், கம்யூனிஸ்டு கட்சிகளை ‘இடது சாரி’ என்று இருபெரும் பிரிவுகளைக் காணலாம்.
காரல் மார்க்ஸியத்தின் மூன்று கூறுகள்:
1. காரல் மார்க்ஸ் ஜெர்மன் நாட்டில் பொருள் முதல்வாத தத்துவத்தையும் (Philosophy)
2. பிரான்ஸ் நாட்டில் சோசலிச சமதர்ம கோட்பாட்டையும் (Socialism)
3. இங்கிலாந்து நாட்டில் மிகை மதிப்பு (Surplus Value) என்ற சுரண்டல் பொருளாதாரத்தையும், அடுத்து,
வரலாறு என்பது பொருளாதாரப் போர் தொழிலாளிக்கும், முதலாளிக்கும் வர்க்க போராட்டம் ஏற்படும் என்ற நிகழ்வே தீர்மானிக்கின்றது என்றார். சுருங்கக்கூறின், பொருளியலே வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகும்.(History is Economics in Action) ) என்று அறுதியிட்டுக் கூறினார்.
மார்க்சின் தத்துவம் வென்றது:
1917-ல் லெனின் தலைமையில் தொழிலாளர் புரட்சி ஏற்பட்டு உலகில் முதல் சோசலிஸ்ட் ஆட்சி ஏற்பட்டது. தனியார் வசம் இருந்த நிலம், தொழிற்சாலைகள் அதாவது உற்பத்தி சாதனங்களும், பகிர்வு நிறுவனங்களும், அரசுடைமையாகப் பட்டன. ஆக, உற்பத்தி, பகிர்வு அரசின் சொந்த கட்டுப்பாட்டில் இருப்பதே ‘இடதுசாரி’ அரசாங்கத்தின் அம்சமாகும். இங்குதான், சோசலிசப் பொருளியல் தத்துவம் மற்ற முதலாளித்துவ நாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது.
உலகப் பொருளியல் தத்துவப் பிரிவுகள்:
பொருளியல் அறிஞர்கள் உலக நாடுகளை மூன்றாகப் பிரித்துள்ளனர்.
1. முதல் உலக நாடுகள்:
அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலாளித்துவ அங்காடிப் பொருளாதாரத்தைக் கொண்ட, ‘போட்டி’ சந்தைப் பொருளாதாரத்தைக் கடைப்பிடிக்கின்றது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இவற்றில் அடங்கும். மிகப் பணக்கார, தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய முதலாளித்துவ செல்வ நாடுகள். முதல் உலக முதலாளித்துவ பணக்கார நாடுகளில் அனைத்தும் தனியார் துறையிடமே ஒப்படைக்கப்படும். இங்கு திட்டமிட்ட பொருளாதாரம் கிடையாது. சேமிப்பு, முதலீடு, விலை, வட்டி போன்ற அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் சந்தையே தீர்மானிக்கும். இதில் அரசு தலையிடக் கூடாது.
2. சோசலிசப் பொருளாதார நாடுகள்:
இரண்டாவது உலக நாடுகள் எனப்படும் ‘சோசலிசப் பொருளாதார’ நாடுகளில் சந்தைப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு அல்லது அரசால் கட்டுப்படுத்தப்பட்டு உற்பத்தி, பகிர்வு சாதனங்கள் செயல்படுத்தப் படும். இந்நாடுகளில் பொதுத்துறையே முதன்மையாக பொருளாதார வழி நடத்துநராக இருக்கும். உற்பத்தி, பகிர்வு சாதனங்கள் அரசுடைமையாக இருக்கும். இதுவே, முதல் உலகப் பொருளாதார முத லாளித்துவ பணக் கார நாடுகளுக்கும், சோசலிச வளரும் ஏழை நாடுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும்.
முதல் உலக முதலாளித்துவ சந்தைப் பொருளாதார போட்டிப் பொருளியலை, ‘வலதுசாரி’ நாடுகள் என்பர். இரண்டாவது, உலக சோலிசப் பொருளாதாரத்தை தனியார்த் துறை முதன்மை பெறாத பொதுத்துறை பொருளியலை ‘இடதுசாரி’ நாடுகள் என்பர். இதற்கு முதன்மை எடுத்துக்காட்டாக இருப்பது சீனப் பொருளாதாரம் ஆகும்.
3. மூன்றாவது உலக நாடுகள்:
முதல் இரண்டு உலக நாடுகளுக்கு இடையில் வருவதுதான், ‘அர்த்தநாரி-’ அதாவது கலப்புப் பொருளாதாரம். முதல் உலக நாடுகள் தனியார்த் துறை, சந்தைப் பொருளாதாரம் கொண்டவை. இரண்டாவது, உலக நாடுகள் சோசலிசம் கொண்ட அங்காடி இல்லாத அல்லது பொதுத்துறையை முதன்மையாகக் கொண்ட இடதுசாரி நாடுகள்.
ஆனால், மூன்றாவது நாடுகள் என்பதில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்ளன. இந்நாடுகளை வலதுசாரி என்றோ, இடதுசாரி என்றோ அழைக்க இயலாது. இந்நாடுகளில், அரசுத்துறை, தனியார்த் துறை, இரண்டும் இணைந்த துறை, கூட்டுறவுத் துறை என்று பல்வேறு பொருளாதார நிறுவனங்கள் உள்ளன. இதை கலப்புப் பொருளாதாரம் (Mixted Economy)என்பர்.
4. சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?
1776-ல் இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக ஆடம் ஸ்மித் என்ற மாபெரும் பொருளியல் அறிஞர் ‘நாட்டின் செல்வம் (Wealth of Nation)’ என்ற நூலை வெளியிட்டார். இதுவே, பொருளியலை ஒரு தனிப் பாடப்பிரிவாக உருவாக்கக் காரணமாக இருந்தது. அதனால் இவர் ‘பொருளாதாரத் தந்தை’ என்று அழைக்கப் பட்டார்.
இவரது தத்துவமே, போட்டிப் பொருளாதாரம் என்ற அங்காடிப் பொருளியல் தத்துவத்தை நாட்டின் செல்வச் செழிப்பிற்கு அடிப்படை இயக்க சக்தி இயந்திரமாகும் என்றார். தனியார்த் துறை போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தி செய்தால், உற்பத்தி அதிகரிக்கும். நாட்டின் செல்வம் பெருகும். விலை குறையும். மலிவு விலையில் அனைத்து மக்களும் பொருட்களை நுகர்ந்து மகிழ்வர்.
1. எனவே, உற்பத்தியாளர்கள் ஏராளமாக இருக்க வேண்டும்,
2. அதைப் போலவே, வாங்குவோர் எண்ணற்றவர்களாக இருக்கவேண்டும்,
3. அங்காடியில் யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம், வாங்கலாம், விற்கலாம்.
4. பொருளாதார நட வடிக்கைகளில் சுதந்திரமாக தடையின்றி யார் வேண்டுமானாலும் செயல்படலாம்.
5. எவரும் வெளியேற லாம், எவரும் உள்ளே வரலாம். இதுவே கட்டுப்பாடற்ற சுதந்திர அங்காடியாகும்.
இவ்வாறு உற்பத்தியாளர் களிடையே போட்டி இருந்தால், உற்பத்தி பெருகும், நாட்டின் செல்வம் அபரிதமாகும். இதுவே, ‘தடையில்லா வாணிபம் (எழ்ங்ங் பழ்ஹக்ங்) என்றார் ஆடம்ஸ்மித்.
1990-இல் புதிய பொருளாதாரம்:
ஆடம்ஸ்மித் கூறிய தத்துவம்தான் உலகிலும், இந்தியாவிலும் புதிய பொருளாதாரம் என்றனர். அவை, 1. தாராள மயமாக்கல், 2. தனியார் மயமாக்கல், 3. உலக மயமாக்கல்.
இரஷ்யாவில் கோர்ப்பசேவ் என்ற அதிபர் ‘திறந்தவெளி’ பொருளாதாரம் என்று முதலாளித்துவ தனியார்கள் தலைமை கொண்ட ‘தடையில்லா வாணிபத்தை’ சோசலிச பொருளாதாரத்தில் இருந்து வேறுபட்டு இதைப் புகுத்தினார்.
இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் ‘தாட்சர்’ ஆடம்ஸ்மித்தின் தடையில்லா வாணிபத்தைப் புதிய பொருளாதாரம் என்று புகுத்தினார். முதலாளித்துவ பணக்கார போட்டிப் பொருளாதாரம் உலகை புரட்டிப் போட்டது. பெரும்பாலான நாடுகள் இந்தியா உட்பட 1990-ல் ‘வலதுசாரி’ அங்காடிப் போட்டிப் பொருளா தாரத்தை பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் கொண்டுவந்தது. இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருந்தவர் சிக்காக்கோ பொருளாதார பள்ளியின் தலைவர் மில்டன் பிரைடுமேன் ஆவார்.
1990-ல் இராஜிவ்காந்தி இறந்த பின்னர், அவர் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளையின் சார்பில் ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் ‘ரீஸ்மாக்’ என்பவர், “மாறிவரும் வரலாற்றுக் காலக்கட்டங்களில் பல்வேறு தத்துவம் தோல்வி அடைந்து வருகிறது என்பது நிரூபணமாகி விட்டது. ஆனால், ஆடம்ஸ்மித்தின் பொருளியல் சந்தைப் போட்டிப் பொருளாதாரம் சரியானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது” என்று பறைசாற்றினார். அதே நேரத்தில் காரல் மார்க்ஸின் அறிவியல் சோசலிசக் கோட்பாடு வரலாற்றுரீதியில் தோல்லி அடைந்து விட்டது என்பது அவரது உரையில் காணப்படும் முக்கிய குறிப்பாகும். அவரது கருத்தை ஒட்டியே பல்வேறு அறிஞர்கள் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து கருத்துகளையும், நூல்களையும் வெளியிட்டனர். இவற்றுள் பிரான்ஸிஸ் பொக்கியாமா முக்கியமானவர்.
இவர் ஜப்பான் நாட்டவர். ஜப்பான்- அமெரிக்க பொருளியல் அறிஞர். இவர் ரீஸ்மாக்கைப் போலவே, சோசலிசம் தோற்று விட்டது. காரல்மார்க்ஸின் தத்துவம் தவறானது என்றாகி விட்டது என்றார். 1992-ல் ‘வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்’ என்ற உலகப் புகழ்பெற்ற நூலில் எழுதினார் (The End of History and the Last Man). பின்னர் அவரே, 2012-ல் மறு பதிப்பில் தான் கூறியது தவறு என்றார். ஏனெனில், உலகப் பொருளாதார முதலாளித்துவ பொருளாதார நாடுகள் 2008-ல் பெரும் மந்தத்தால் பாதிக்கப் பட்டனர். இங்கு சந்தைப் பொருளா தாரம் தோற்றுவிட்டது. அதனால் இவர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசும்; தமிழ்நாட்டின் தி.மு.க அரசும்:
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் சனாதன பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்து சனாதன கொள்கையை எதிர்த்த அம்பேத்கர் இந்தியாவின் இருபெரும் சாத்தான்கள் என்று குறிப்பிட்டவை: 1. முதலாளித்துவம் 2. பார்ப்பனியம் (வருணாசிரம தத்துவ சாதி அடுக்குமுறை) என்றார்.
இவர்களது பொருளியல் தத்துவம் சனாதன முதலாளித்துவம். சந்தைப் போட்டிப் பொருளாதாரமே அவர்களது முழு விருப்பம். நில உடைமைக் காலத்தை, அதாவது கி.பி. 5-லிருந்து கி.பி.15-ஆம் நூற்றாண்டு காலத்திய வருணாசிரம ஆண்டான்- அடிமை சாதி அடுக்குக் கட்டமைப்பை 2014-ல் இருந்து தனது ஆட்சியில் புகுத்தி வருகின்றனர்.
தனியார்த் துறையை முதன்மைப் படுத்தி, பொதுத்துறையை ஒழித்து, மேல்சாதி ஆளும் வர்க்கமாக மாற்றி, இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்துவருகிறது. புதிய பொரு ளாதாரம் வறுமை, வேலையின்மை, போன்றவற்றை ஒழிக்காதது மட்டுமல்ல; பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நிரந்தரமாக அதிகமாக்கிவிடும். இதனால், பசி- பட்டினி போன்ற கொடுமைகள் பல மடங்கு பெருகும். சாதி- மத கலவரத்தைத் தூண்டிவிட்டு பொருளாதரப் பிரச்சனைகளை திசைதிருப்பி பின்னுக்கு தள்ளிவிடுவர். முத லாளித்துவ சந்தைப் போட்டிப் பொருளாதாரத்தை ஆதரிப்பதால் பா.ஜ.க. அரசு வலதுசாரியாகும்.
தி.மு.க.வின் பொருளாதாரக் கொள்கை என்ன? முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள பொரு ளாதார வல்லுநர்கள் குழு மூலம், ‘திராவிட மாடல்’ பொருளாதாரத்தை கட்டமைக்க நினைக்கிறார். திராவிட மாடல் என்பது என்ன?
(வரும் இதழில்)