ஒன்றிய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்து, சாதாரண சுயதொழில் செய்யும் உள்நாட்டு நிறுவனங்களை ஒடுக்கிவரும் இந்த சூழ்நிலையில், "திராவிட மாடல்' ஆட்சியின் புதிய முயற்சியாக, பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு "ஸ்டார்ட் அப்' அமைப்பு, 'தொழிலணங்கு' என்ற மாபெரும் நிகழ்வை நடத்தியது. அதில், சிறுகுறு தொழில் செய்யும் தமிழகத்தின் தொழில்முனைவோர்களோடு பெரிய நிறுவனங்களை ஒன்றிணைத்து, இருவரின் புரிந்துணர்வுடன் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, மகளிர் சுய உதவிக்குழு பெண்களைத் தங்கள் நிறுவனத்திற்காகப் பொருள்களைத் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்த அடையாளச் சான்றிதழை வழங்கியதோடு, அவர்களுக்கான பணிப் பயிற்சியும் அளித்தது பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இந்நிகழ்ச்சி, ஸ்டார்ட் அப் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்துப் பேசும்போது, "ஸ்டார்ட் அப்' ஸ்மார்ட் மகளிர் குழு ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதிலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத் துவம் அளித்துவருகிறது. 23 வருடங்களுக்குமுன் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு, தற்போது கொஞ்சம் தொய்வாக உள்ளது. இவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தன் சொந்த மண்ணைச் சேர்ந்த சாதாரண சிறுகுறு தொழில் செய்யும் மக்களை, பெருநிறுவனங்களோடு ஒன்றிணைத்து உலகளவில் சிறுசிறு தொழில்கள் செய்யும் தமிழக நிறுவனங்களோடு இணைத்து, மிகப்பெரிய தொழிற்புரட்சியை உருவாக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. எங்கெல்லாம் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப் படுகிறதோ, அந்தச் சமூகம் முன்னேறிய சமூகமாக இருக்கும் என்பதற்கு தமிழ்நாடே ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. முதன்முதலில் பெண்களுக்கான வாக்குரிமை பெற்றுத் தந்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி. அதேபோல கட்டாயக் கல்வியை ஆண் பெண் இருபாலரும் பெற வேண்டும் என்று சட்டமாக இயற்றியது நீதிக்கட்சியின் மற்றொரு சாதனையாகும்.
1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் பெண் களுக்கு சொத் துரிமை வேண்டும் என தந்தை பெரியார் கொண்டுவந்த தீர்மானத்தை, ஆண் களுக்கு மட்டும்தான் சொத்துரிமை என்ற இந்து வாரிசு சட்டத்தைத் திருத்தி, சட்டப்படி பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என 1989-ஆம் ஆண்டு அதை சட்டப்பூர்வமாக்கி சாதனை படைத்தவர் அப்போதைய முதல்வர் கலைஞர். தொடர்ந்து, அவர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதுதான் உள்ளாட்சி அமைப்பு களில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி, பின்னாளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார். பெண்கள் எந்த ஒரு நிலையிலும் தொய்வடைந்து விடக்கூடாது. அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு, மகளிர் சுய உதவிக்குழுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்ததோடு, மதுரையில் 'பூமாலை வணிக வளாகம்' பெண்களுக்கான பிரத்தியேக மகளிர் சுய உதவிக்குழு மையமாகச் செயல்பட்டது. தற்போது முதல்வராக உள்ள மு.க. ஸ்டாலின், ஒரே மேடையில் சுமார் 7 மணி நேரத்திற்குமேல் நின்று, பல லட்சம் ரூபாய் சுழல் நிதி வழங்கியது வரலாறு. தமிழ்நாடு அரசு, 700 கோடி ரூபாய் அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் திட்டங்கள் வழங்கி சாதனை படைத்தது. அத்தகைய திராவிட மாடலின் நீட்சியாக, மதுரையில் ஸ்மார்ட் மகளிர் குழுக்களைத் தொடங்கி, அவர்களை தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோராக மாற்றும் இத்திட்டம், ஒரு முன்மாதிரித் திட்டமாக உள்ளது. தமிழகப் பெண்களின் முன்னேற்ற வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல் கல்லாகும்'' என்றார்.
இதுகுறித்து ஸ்டார்ட் அப் இயக்கத்தின் செயல் அதிகாரி சிவராஜா இராமநாதன், "தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கம் சார்பாக "தொழிலணங்கு' என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களை தொழில்முனைவர்களாக உருவாக்கிடும் நோக்கில் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். இதில் மாவு, அப்பளங்கள் தயாரிப்பு, மசாலாப் பொருட்கள் தயாரிப்பு, தேனீ வளர்ப்பு எனச் சிறு குறு தொழில் தொடங்கி, பிரிண்டிங் பேக்கேஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். பல தயாரிப்பு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்களை தங்கள் நிறுவனத்திற்காகப் பொருட்களைத் தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தச் சான்றிதழை வழங்கியதோடு, அவர்களுக்கான பணிப் பயிற்சியும் கொடுப்பதால், பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும்'' என்றார்.
உலக அரங்கில் எலக்ட்ரானிக்ஸில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்வதற்கு காரணம் தன் மக்கள் அனைவரையும் தொழில் முனைவராக ஆக்கியதுதான். அதுபோன்ற முன்னெடுப்பைத் தொடங்கி உள்ளது திராவிட மாடல் அரசு!