"தமிழக காவல்துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம், வருகிற ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம்வரை நடக்க இருக்கிறது' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே தலைமைச் செயலாளர் இறையன்பு மாற்றப்படுவார் என்கிற செய்தி பெரிய அளவில் அடிபட்டது. அவர் மாநில தகவல் ஆணையராக பொறுப்பேற்பார் என சொல்லப் பட்டது. இப்பொழுது அது மாற்றப்பட்டு, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.யான ஷகில்அக்தர் அந்தப் பதவியில் அமர்த்தப்படுகிறார். தலைமைச் செயலாளர் மாற்றம் தற்பொழுது வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவரான கந்தசாமி ஓய்வுபெறுகிறார். ஏற்கனவே ஷகில்அக்தர் ஓய்வுபெற்றுவிட்டார். 2 டி.ஜி.பி. பதவிகள் தமிழகத்தில் காலியாக உள்ள நிலையில் அந்த பதவிகளுக்கு பதவி உயர்வு பெற்று வரப் போகிறவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யான சைலேந்திரபாபு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக, 3 டி.ஜி.பி. பதவிகளுக்கு புதிதாக ஆட்களை புரமோஷன் கொடுத்து, கொண்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் காவல்துறையில் எழுந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், ராஜீவ்குமார் ஆகியோர் புதிய டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் சைலேந்திரபாபுவின் இடத்திற்கு யார் வருவார் என ஏற்கனவே டி.ஜி.பி.க்களாக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன், சஞ்சய்அரோரா, பி.கே.ரவி, சங்கர்ஜிவால், ஆபாஷ்குமார், சீமா அகர்வால் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், சென்னை மாநகர கமிஷனராக இருக்கக்கூடிய சங்கர் ஜிவாலுக்குமிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் சஞ்சய் அரோரா மத்திய அரசுப் பணியில் இருப்பதால் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆபாஷ்குமார், சீமா அகர்வால் ஆகியோர் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கான போட்டியில் இல்லை. இதில் சங்கர் ஜிவால் மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக வருவது உறுதி செய்யப்பட்ட விவகாரம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
சங்கர்ஜிவால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யானால் அவர் வகிக்கும் சென்னை நகர காவல்துறை கமிஷனர் பதவி காலியாகும். அதை யார் பிடிக்கப் போகிறார்கள்? என்கிற போட்டி அடுத்த கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் ஆபாஷ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால், சங்கர் அமல்ராஜ் மற்றும் அருண் ஆகியோர் போட்டியில் இருக்கிறார்கள்.
ஆபாஷ்குமாரும், சங்கர்ஜிவாலும் ஒரே பேட்ஜ் மேட்டுகள் என்பதால் ஆபாஷ் குமார் சென்னை நகர கமிஷனராக வருவதை சங்கர் ஜிவால் ஆதரிக்கிறார். ஆனால், ஆபாஷ் குமார் கலைஞரை கைது செய்தவர். முரசொலி மாறனை தலைகீழாகத் தூக்கிக் கொண்டு போய் கைது நடவடிக்கையில் ஈடுபட்டவர். அந்த கைதின் போது முரசொலி மாறனுக்கு இதயத் தில் பாதிப்பு ஏற்பட்டது என மாறனின் மறைவுக்குக் காரணம் ஆபாஷ்குமார்தான் என தி.மு.க. மனித உரிமை கமிஷனில் புகார் கொடுத்தது. ஆபாஷ்குமார் சிவில் சப்ளை சி.ஐ.டி. துறையின் தலைவராக இருந்தபோது அரசு கொடுக்கும் மானியத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்தார் என்பதால், அவரை தி.மு.க. அரசு அந்தப் பணியில் இருந்து மாற்றியது. சந்தீப்ராய் ரத்தோரும் தயாநிதி மாறனும் நெருக்கமான நண்பர்கள். தயாநிதி மாறன் ஏற்றம் பெறும் போதெல் லாம் சந் தீப்ராய் ரத் தோர் நல்ல பதவியில் அமரு வார்.
மகேஷ்குமார் அகர்வால் பா.ஜ.க.வுக்கு நெருக்கமானவர். அவரது சகோதரர் மத்திய பா.ஜ.க.வின் ஐ.டி. விங்கில் செயலாளராக இருக்கிறார். இந்த ஒட்டுமொத்த ரேஸில் அமல்ராஜ் மற்றும் அருண் ஆகிய இருவரும்தான் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள். மற்ற அனைவரும் வெளிமாநிலத் தைச் சேர்ந்த அதிகாரிகள். டி.ஜி.பி.யாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த சங்கர்ஜிவால் நியமிக்கப்படும் வேளையில், சென்னை மாநகர கமிஷனராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வரவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை தலைவர் பதவியில் தற் பொழுது உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசிர் வாதத்தை நியமிக்கலாமா? என்கிற சர்ச்சையும் கோட்டை வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி பதவி உயர்வுகள், மாற்றங்கள் என காவல்துறையின் அடி முதல் நுனிவரை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.