அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களை உருவாக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2026 தேர்தல் யாருக்கு எப்படியோ, எடப் பாடிக்கு இது வாழ்வா சாவா போராட்டம் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இந்தத் தேர்தலில் அவர் தன்னை நிரூபிக்காவிட்டால் பா.ஜ.க. அ.தி.மு.க.வை கபளீகரம் செய்துவிடும். அ.தி.மு.க.வின் வாக்குகளை நடிகர் விஜய் பெருமளவில் எடுத்துச் சென்றுவிடுவார். இந்த ஆபத்துகளை சமாளிப்பதற்கு எடப்பாடி வியூகங்கள் அமைத்து செயல்படுகிறார். எடப்பாடியின் சுற்றுப் பயணம் என்பதே அமித்ஷாவின் வருகையை தவிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டது. கூட்டணி ஆட்சியில் பங்கு விவகாரத்தில் அமித்ஷாவுக்கும் எடப்பாடிக்கும் இருந்த கருத்து மோதலில் அவரை நேரடியாக சந்தித்தால் பிரச்னை வரும் என்பதற்காகவே எடப்பாடி தனது சுற்றுப்பயணத்தை அறி வித்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட சுற்றுப்பயணம் எடப்பாடிக்கு ஒரு பெரிய நல்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

Advertisment

அ.தி.மு.க.வின் குறுநில மன்னர்களாக முன்னாள் அமைச்சர்களால் அக்கட்சி நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களை கட்டுப்பாட்டில்  வைத்துக் கொண்டு எடப்பாடியை மிரட்டிக்கொண்டிருந்தார் கள். இந்த மிரட்டல்களின் பின்னணியில் ஓ.பி.எஸ்., சசிகலா என ஒரு கும்பலே இருந்தது. சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும், ஓ.பி.எஸ்.ஸுக்கு பொருளாளர் பதவி கொடுக்கவேண்டும் என ஏகப்பட்ட டிமாண்டுகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் செங்கோட்டையன் நேரடியாகவே எடப்பாடியை மிரட்டினார். அத்துடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்மலா சீதாராமனை பார்ப்பது.. அமித்ஷாவிடம் பேசுவது, பியூஷ் கோயலிடம் கெஞ்சுவது என வெளிப்படையாகவே எடப்பாடிக்கு எதிராகக் கலகம் ஆடினார்கள். அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி ஆட்சி, எடப்பாடி அல்லாத ஒருவர் முதலமைச்சர், இரண்டரை வருடம் பா.ஜ.க. ஆட்சி.. இரண்டரை வருடம் அ.தி.மு.க. ஆட்சி என்றெல்லாம் டீல் பேசப்பட்டது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த எடப்பாடி இதற்கெல்லாம் முடிவு கட்ட இந்த சுற்றுப்பயணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். குறுநில மன்னர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களிடம் சுற்றுப் பயணப்  பொறுப்பை ஒப்படைக்காமல், அவர் களால் நசுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளிடம் பொறுப்பையும் பணத்தையும் கொடுத்தார். முன்னாள் அமைச்சர்களில் பலர் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு தலைகாட்டாமல் இருந்தாலும், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அடுத்த எம்.எல்.ஏ. சீட் தங்களுக்கு கிடைக்கும் என அ.தி.மு.க.வினரை திரட்டிக்கொண்டு வந்தார்கள். 

உளுந்தூர்பேட்டையில் மாவட்ட மாஜிக்கள் சண்முகமும், தங்கமணியும் எடப்பாடியின் பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார்கள். ஆனாலும் பெருங்கூட்டத்தை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கூட்டினார். கடலூரில் எம்.சி.சம்பத் என்கிற முன்னாள் அமைச்சரை மீறி சத்தியா பன்னீர்செல்வம் என்கிற மாவட்ட நிர்வாகி மாநாடுபோல் கூட்டத்தைக் கூட்டினார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு பெரிய டீமுடன் செல்லும் எடப்பாடி, லோக்கல் பிரச்னைகள் அனைத்தையும் அந்த டீம் வழியாகத் திரட்டி அதை தனது உரைகளில் புகுத்தியதோடு, பக்கத்தில் உள்ள தொண்டர்களைக் கேள்வி கேட்டு, பதில் சொல்ல வைத்து வித்தியாசமாக தனது உரைகளை வடிவமைத்தார். நான் பழைய பழனிச்சாமி அல்ல புதிய பழனிச்சாமி என்கிற வீச்சில் அமைந்தன அவரது உரைகள். அத்துடன் ஒவ்வொரு பகுதி யிலும் உள்ள அ.ம.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களை அ.தி.மு.க.விற்கு கொண்டுவரும் வேலைகளையும் செய்தார். டி.டி.வி. தினகரனிட மும், ஓ.பி.எஸ்.ஸிடமும் இருவருக்கும் நெருக்கமான வர்கள் மூலம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். 

எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி கும்பலை தலைமைதாங்கி வழிநடத்தி வந்த பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரைக் கட்டுப்படுத்த அமித்ஷாவிடம் பேசினார். அமித்ஷா,  பா.ஜ.க.வின் மு.மா. தலைவர் வாயாலேயே எடப்பாடியை புகழவைத்தார். ஓ.பி.எஸ்.ஸும், டி.டி.வி.யும் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை என்கிற உறுதியை எடப்பாடிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். நான் அ.தி.மு.க.வை ஆதரித்துதான் ஓட்டு கேட்பேன் என விஜய்யை விமர்சித்து ஓ.பி.எஸ். பேசிய பேச்சு, எடப்பாடி நடத்திய பேச்சுவார்த்தைகளின் எதிரொலி என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ஆனால், பா.ஜ.க.வினர் எங்களுக்கு நூறு சீட்டுகள் வேண்டும் என அடம்பிடிக்கிறார் கள். அவர்களின் அந்த எண்ணிக்கையை கரைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் எடப்பாடி. எந்த சூழ்நிலையிலும் அ.தி.மு.க. தனது சுய தகுதியை இழந்துவிடாது என, தனக்கு நெருக்கமானவர் களிடம் சொல்லிவரும் எடப்பாடி, 75 வயதிலும் அதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டி ருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வர்கள். இந்த முயற்சியில் எடப்பாடிக்கு பின்னடைவுகள் இல்லாமல் இல்லை. 

Advertisment

பா.ஜ.க. நூறு சீட் கேட்டு அடம்பிடிப்பதை, கூட்டணி ஆட்சி என்று ஆட்சியில் பங்கு கேட்பதை எப்படி சமாளிக்கப் போகிறார் எடப்பாடி என்பதை அ.தி.மு.க.வினரே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதேபோல் எடப் பாடிக்கும் சசிகலாவுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடியை வீழ்த்தியே தீருவேன் என சசிகலா கொக்கரிப்பதை எடப்பாடி எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்துதான் அ.தி.மு.க.வின் வெற்றி, தோல்வி அமையும் என்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்.