வடியில் அரசு மின்ஊழியர் ஒருவர் தன் அடையாள அட்டையைக் காட்டியும் அவரை வெளுத்து வாங்கியது போலீஸ். சென்னையின் பல பகுதிகளிலும் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் பணியாளர்களை நிறுத்தி- மிரட்டி- விரட்டி- கை வைக்கவும் செய்தது காவல்துறை. இ-பாஸ் எனும் பெயரில் நடக்கின்ற அத்துமீறல்கள் தனி ரகம். இவை எல்லாவற்றையும்விடக் கொடுமையின் உச்சத்தை சாத்தான்குளத்தில் நிகழ்த்தியிருக்கிறது காவல்துறை.

கடந்த ஜூன் 18 இரவில் தொடங்கியது அந்த விவகாரம். சம்பவ இடத்திலிருந்த ஒருவர் தன் பெயர் வேண்டாம் என்ற தயக்கத்துடன் பேசத்தொடங்கினார்.

tuty

""சாத்தான்குளம் அரசரடித் தெருவைச் சேர்ந்த பென்னிக்ஸ் நடத்தி வரும் செல்போன் கடையில் வியாபாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார் அவரது அப்பா ஜெயராஜ். இரவு எட்டுமணிவாக்கில் கடைக்கு வந்த சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் உள்ளிட்டோர், ""என்னலே.! இன்னும் கடையைப் பூட்டாமல் இருக்கே.! ஊர்ல பெரிய மனுசனா இருக்கே.! உனக்கு அறிவில்லையா? உங்களையெல்லாம் உள்ளே புடிச்சுப் போட்டாத்தான் அடங்குவீங்க!'' என மிரட்ட, ""தம்பி வந்துடுவான்... மூடிடுறேன்'' என்று ஜெயராஜ் சொல்ல, போலீஸ் மீண்டும் அதட்ட லேசான வாய்த்தகராறாகி அங்கிருந்து நகர்ந்துள்ளனர் போலீசார்.

Advertisment

அப்போது பென்னிக்ஸ் வந்ததும் அசாதாரண சூழ் நிலையை புரிந்துகொண்டு அப்பாவிடம் விசாரித்திருக்கிறார். ""இவிங்க பேசுனா பயந்துடுவோமா... நீ கடையை கட்டுற சோலியபாரு.. நேரமாவுது'' என்றிருக்கிறார் ஜெயராஜ். இது, "எஸ்.ஐ கையை வெட்டியிருக்கணும்' எனச் சொன்னதாக, தலைமைக்காவலர் முருகன் மூலமாக எஸ்.ஐ. தரப்பிற்கு போயிருக்கிறது. மறுநாள் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் கூப்பிட்டு விட்டாங்க போலீஸ் காரங்க.! அதற்கப்புறம் இப்ப பிணமாத்தான் இருவரையும் பார்த்தேன்'' என்றார் படபடப்பு குறையாமல்.

முதல் நாள் செல்போன் கடையில் நடந்த பேச்சும், அதன் பின் நடந்த போட்டுக் கொடுக்கப்பட்ட பேச்சுக்களும் எஸ்.ஐ.யை உஷ்ணப்படுத்தியிருக்க ஸ்டேஷனிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் ஜெயராஜும், பென்னிக்ஸும்.!

மணிமாறன், ராஜாராம் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நண்பர்கள் புடைசூழ தனது தந்தையுடன் வந்த பென்னிக்ஸ் ஸ்டேஷன் வாசலிலேயே நின்றுகொண்டிருக்க, கையை நீட்டி சைகையால் ஜெயராஜைக் கூப்பிட்டுள்ளார் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன். இருப்பினும் அந்த சைகையை காணாத ஜெயராஜ் எஸ்.ஐ. பக்கம் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த எஸ்.ஐ. எழுந்து வந்து, ஜெயராஜின் சட்டையைப் பிடித்திழுக்க, தனது தந்தையை தன் கண்முன்னே அடிக்கின்றனர் என பென்னிக்ஸ் பாய, உடனிருந்த மூன்று நண்பர்களையும் வெளியே அனுப்பிவிட்டு ஒட்டுமொத்த போலீசும் ஒன்றிணைந்து பென்னிக்ஸையும், ஜெயராஜையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது.

Advertisment

tt

அந்தக் கொடூரத்தை நம்மிடம் விளக்கினார், சம்பவத்தை நேரில் பார்த்த பென்னிக்ஸின் தாய் செல்வராணி, ""எம் மகன் காவல் நிலையத் திற்குள் அடிபட்டு ஜட்டியோடு ரத்தக் காயத்துடன் கிடக்கிறான் என அவனோட நண்பர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். நான் ஸ்டேஷனுக்குப் போன நேரம் ஸ்டேஷன் கதவை சாத்தி வைச்சுட்டு எம் புருஷனையும், எம் புள்ளையையும் அடி அடின்னு அடிச்சிட்டு இருந்தாங்க. வலி தாங்காமல் எம் புள்ளை அலறுன சத்தம் அந்த தெருவுக்கே கேட்டுச்சு. நானும் எனது தம்பியும் சேர்ந்து காவல் அதிகாரிகளிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் என் கணவரையும், மகனையும் விடவில்லை, விடாமல் அடிச்சுட்டிருந்தாங்க.

அவனுக்கு வரும் டிசம்பரில் திருமணம் பேசி முடிப்பதாக இருந்தது. என் மகனை இன்று உயிரோடு இல்லாமல் ஆக்கி விட்டார்கள். அடிச்சே கொன்னுட்டாங்கய்யா'' என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியமான பென்னிக்ஸின் தாயான செல்வராணி. (அவரது விரிவான பேட்டி தனியாக உள்ளது)

சம்பவத்தின்போது காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்களான வேலுமுத்து, சாமத்துரை, ஜேசுராஜ், பாலா மற்றும் போலீஸ் ஃப்ரெண்ட்ஸ்களான கணபதி, கண்ணன், ஜேக்கப் மற்றும் எலிசா உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து அடித்தும், ஆத்திர வெறிகொண்டு, ஆசன வாயில் லத்தியினை உள்செலுத்தியதாகவும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தலைமைக் காவலர் முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ""கொரோனா காலத்தில் அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தும், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்த அரசரடி தெருவினைச் சேர்ந்த பனைமர வியாபாரி ஜெயராஜையும், அவரது மகன் பென்னிக்ஸையும் கைதுசெய்து 312/2020 என்ற எப்.ஐ.ஆரின்படி 188, 269, 294(க்ஷ), 353, 506(ண்ண்) ஐபிசி என்று ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, இரவு நேரத்தில் மாஜிஸ்டிரேட்டிடம் ஆஜர்படுத்தி, வேனிலிருந்த அப்பாவையும் மகனையும் வீடியோ மூலம் பார்த்து ரிமாண்ட் செய்துள்ளனர். பக்கத்தில் உள்ள சிறைகளைத் தவிர்த்து, கோவில்பட்டி கிளைச் சிறைச் சாலைக்கு அவசரம் அவசரமாக அனுப்பிவைத்த னர் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார்.

tt

கிளைச்சிறையில் அனுமதிக்கப்படும்போது, பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் பின் பகுதியில் பலத்த காயம் உள்ளதென குறிப்பெழுதிவிட்டே விசாரணைக் கைதிகளை அனுமதித்துள்ளார் சப்ஜெயில் கண்காணிப்பாளர் சங்கர். எனினும், அடுத்த நாட்களில் இரு விசாரணைக் கைதிகளையும் பரிசோதித்த அரசு மருத்துவர் குழுவோ காயம் பின்பக்கம் மட்டுமல்ல. கணுக்கால் மட்டும் மூட்டுப்பகுதிகளிலும் காயம் உள்ளதென குறிப்பெழுதியதும் கசிந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு 7 மணி வாக்கில் கோவில்பட்டி கிளைச் சிறைச் சாலையிலிருந்த பென்னிக்ஸ் தனக்கு உடல் நிலை சரியில்லை என சப் ஜெயில் கண்காணிப்பாளர் சங்கரிடம் கூற, அவசரம் அவசரமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப் பட்டவர் ஆண்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் இடதுப்பக்க 20 படுக்கைகள் கொண்ட பகுதியில் படுக்கை இருந்தும், வலது பக்கத்தில் அனைத்துப் படுக்கைகளும் காலியாக இருந்த பகுதியில் தன்னந்தனியாக அனுமதிக்கப்பட்டு சரியாக 08.30 மணியளவில் உயிரிழந்திருக்கின்றார். மகன் இறந்த தகவல் சிறையிலிருந்த தந்த ஜெயராஜிடம் தெரிவிக்கப்பட, அவரது உடல்நிலையும் மோசமடைந்த நிலையில் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அதிகாலை 04.15 மணியளவில் உயிர் பிரிந்திருக்கின்றது.

பெயர்கூற விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர், ""கிளைச் சிறைச் சாலையில் இருந்த பென்னிக்ஸிற்கு 7 மணியளவில் அதிகமாக வியர்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். டூட்டி டாக்டர் பாலசுப்பிரமணியனும், சிறப்பு மருத்துவர் ஆனந்தும் இஜிசி உள்ளிட்டவைகளை எடுத்து சிகிச்சையளித்த நிலையில் அவரின் உயிர் பிரிந்திருக்கின்றது. அதுபோல்தான் ஜெயராஜின் நிலையும். இரவு 10 மணிக்கு சிகிச்சைக்காக வந்தவர் அதிகாலை 03.30 மணி வரைக்கும் ஆக்டிவாக இருந்திருக்கின்றார். அதற்கு சாட்சியும் உண்டு. ஆனால் ஏனோ அவரின் உயிரும் பிரிந்திருக்கின்றது. இருவரின் உயிரும் பிரிந்ததிற்குக் காரணம் போலீசார் அடித்த அடியே. மருத்துவ ரீதியாக கூற வேண்டு மானால் இதற்கு பெயர் பெயின் ஷாக்'' என்கிறார்.

மக்கள் கண்காணிப்பகத்தின் மோகன், ""சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் வணிகர்கள், குற்ற வாளிகள் அல்ல. முதல் தகவல் அறிக்கையில் உள்ள தில் ஒரு பிரிவைத் தவிர அனைத்துக் குற்றங்களும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடியவை. இவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.

tt

மாஜிஸ்ட்ரேட்டிடம் வீடியோ மூலம் காட்டாமல், நேரில் ஆஜர்படுத்தியிருந்தால், இருவரும் தாங்கள் போலீசாரால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதைக் காயங்களுடன் காட்டி வாக்குமூலம் அளித்திருக்க வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் காலத்தில் கொலை போன்ற பெருங்குற்றச் செயல்கள் செய்தோரைத் தவிர, மற்றவர்களை சொந்த பிணையில் விடுவிப்பது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. கோவில்பட்டி சிறைச்சாலைப் பதிவேடும், பிணக்கூராய்வு அறிக் கையும் இருவரின் படுகொலைக்குச் சாட்சியமளிக்கும்'' என்கிறார். இதுகுறித்து கருத்தறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரைத் தொடர்புகொண்டோம். ""இதோ கூப்பிடுகிறேன்'' என அழைப்பினைத் துண்டித்தவர், பலமுறை தொடர்பு கொண்டும் இறுதிவரை பதிலளிக்கவில்லை.

காவல்துறை தாக்கியதாலே இருவரும் உயிரிழந்தனர் என்பதையறிந்த உள்ளூர் மக்கள் செவ்வாய்க்கிழமையன்று சாத்தான்குளம் சாலையில் குவிந்து போராடிய நிலையில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சண்முகநாதன் மற்றும் கன்னியாகுமரி எம்.பி. வசந்த்குமார் ஆகியோரும் ஆஜராகினர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் உள்ளிட்டோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த் தையின் முடிவில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தலைமைக் காவலர் கள் 2 பேர் பணி யிடைநீக்கமும், ஆய் வாளர் உள்ளிட்ட அனைவரும் கூண் டோடு மாற்றமும் செய்யப்பட்டனர். ஆனாலும் மக்களின் கோபம் தணியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடங்கி பலரும் கண்டன அறிக்கை வெளியிட, எம்.பி. கனிமொழி உடனடியாக டி.ஜி.பி.யிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, புதன்கிழமையன்று முதல்வரின் அறிவிப்பில், இருவருக்காகவும் தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றும் அறிவித்தார். இருந்தும், நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது சாத்தான்குளம் மக்கள், வியாபாரிகளின் கோபம்.

அடித்துக்கொன்ற போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யாதவரை போஸ்ட் மார்ட்டத்தை ஏற்கமாட்டோம், உடல்களை வாங்கமாட்டோம் என செல்வராணியும் உறவினர்களும் உறுதிபடச் சொல்லிவிட்டு புறப்பட்டனர். இந்நிலையில், கோர்ட் உத்தரவுப்படி போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தரப்பு, ஜெயராஜின் ஒரு மகள், இரண்டு மருமகன்கள் தாய்மாமன்களை அங்கே இருக்கச் சொல்லி, கூராய்வுக்கு புதன் இரவு தயாரானது. போஸ்ட்மார்ட்டம் செய்தாலும் வழக்கு பதிவாகாமல் உடல்களை வாங்க மாட்டோம் என் பதை அவர்களும் உறுதி யாகத் தெரிவித்து விட்டனர்.

- நாகேந்திரன்

______________

என் புருசனையும் புள்ளையையும்

அடிச்சே கொன்னுட்டாங்கய்யா!

ஜெயராஜின் மனைவியும் பென்னிக்ஸின் தாயுமான செல்வராணி, கலெக்டர்- டி.எஸ்.பி வரை புகார் கொடுத்தார். அப்போது நம்மிடம் அவரது கருத்தை ஆடியோவாக பதிவு செய்தார்.

tt

""எனக்கு தகவலே சொல்லல. என் பிள்ளையை பஜாரில் இருந்தே கூட்டிட்டு போயிட்டாங்க. அங்கங்க கேட்டு தெரிஞ்சு நான் போயி பாக்குறதுக்குல்ல, போலீஸ் ஸ்டேசனை பூட்டி, உள்ளே என் பிள்ளையை அடி அடியின்னு அடிச்சுருக்காங்க. என் பிள்ளை 'அம்மா அம்மா'ன்னு அலறும் சத்தம் அந்த தெருப்பூராவே கேட்டது. போன் போட்டு போட்டு பார்த்தேன். யாரும் உதவி செய்யல. ஜெயிலுக்கு முன்னாடி நின்ன அவ்வளவு பேரையும் விரட்டிவிட்டு என் பிள்ளையை அடிச்சிருக்காங்க. என் பையன் ப்ரண்டுங்க கொஞ்ச பேரு நின்னாங்க. அவுங்களையும் அடிச்சி விரட்டிட்டாங்க.

'நாங்க கேஸும் போடல, ஒன்னும் போடல, நாங்க எதுக்கும் போக மாட்டோம், என் பிள்ளையை, என் புருஷனை விட்டுடுங்க, நாங்க எங்கேயாவது ஆஸ்பத்திரியில வச்சி பார்த்துக்கிறோமுன்னு கெஞ்சினோம். அந்த ரத்தம் பட்ட வேட்டியெல்லாத்தையும் ஸ்டேஷனுக்கு வெளியே தூக்கிப் போட்டுட்டோம். சாட்சிக்குக்கூட எதையும் நாங்க எடுக்கல. எல்லோரும் சொன்னாங்க 'போலீஸ் ஸ்டேஷன் பூட்டியிருப் பதை போட்டோ எடுத்து வையுங்க'ன்னு. நாங்க அதை செய்யவேயில்லை. எங்களுக்கு என் புருஷனையும் பிள்ளையையும் விட்டா போதுமுன்னு இருந்தோம். "நாங்க ஒரு கேஸும் போட மாட்டோமுன்னு' என் தம்பி கால்ல விழுந்து கேட்டான். கெஞ்சினான்.

எத்தனையோ அதிகாரிகளுக்கு போன் போட்டோம். யாரும் உதவி செய்யல. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு போன் போட்டோம். அவரும் உதவி செய்யல. சண்முக நாதனுக்கு போன் போட்டோம். அவரும் உதவி செய்யல. இன்னைக்கு இவ்ளோ ஜனம் வந்திருக்கே. அன் னைக்கு ஒரு பத்து பேரு வந்திருக்கக்கூடாதா என் பிள்ளைய காப்பாத்த.

சாப்பாடு கொடுக்கணும்னு சொன்னப்பக்கூட உள்ளே விடல. எங்க வீட்டுக்காரருக்கு சுகர் இருக்குது, மாத்திரை கொடுக் கணும் என்று சொன்னதற்கும் உள்ளே விடல. எப்படியாவது அடுத்த நாளு விடுவாங்கன்னு பார்த்தேன். விடல. அந்த டாக்டரும் எதையும் பாக்காம குனிஞ்சே கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டாரு. என்ன எழுதுனாங்களோ.

tuty

அவ்வளவும் ரத்தம். சட்டை வேட்டியில அவ்வளவும் ரத்தம். வெள்ளைச் சட்டை வேண்டாம், கலர் சட்டை கொடுங்கன்னு கேட்டாங்க. கோர்ட்டுலேயும் ஜாமீன் கிடைக்கல. ஆஸ்பத்திரியில் வைச்சிருந்தப்பக்கூட பேசவிடல. சம்மந்தி மட்டும் நோய்க்கு பார்க்கப்போறேன்னு சொல்லி பார்த்து பேசிட்டு வந்தார். 'சாப்பாடும் கொடுக்காம, தண்ணியும் கொடுக்காம வெறும் ஜட்டியோட போட்டு அடிச்சி தரையில் போட்டுருக்காங்களாம்'. சம்மந்திக்கிட்ட எங்க வீட்டுக் காரரு சொல்லி அழுதுருக்கிறாரு. 'என்னையை நூறு அடி அடிச்சாங்க. என் பிள்ளையை 250 அடி இருக்கும். என் எதிர்க்கவே அடிச்சாங்கன்னு' சொல்லி அழுதுருக்காரு.

எங்களுக்கு சொத்து சுகம் எதுவும் இல்ல. அந்தக் கடையும் வாடகைக் கடைதான். எனக்கு மூன்று பெண் பிள்ளைக, ஒரே மகன். எம்.எஸ்.டபிள்யூ படிச்சவன். சமூகத்துக்காக இருந்தான். மூன்று பெண் பிள்ளைகள நல்லப்படியா படிக்க வைச்சி கல்யாணம் பண்ணிக்கொடுத் துட்டோம். கொரோனாவா இருக்கு. டிசம்பரில் பையனுக்கு கல்யாணம் வைக்கலாமுன்னு பேசிக்கிட்டு இருந்தோம். இப்படி கொன்னுட்டாங்களே. ஒரு கெட்ட பழக்கம்கூட கிடையாது, ஒரு வழக்கும் கிடையாது, யாரையும் கோபமா பேசவும் மாட்டான். என் பிள்ளையை அடிச்சே கொன்னுட் டாங்களேய்யா. இதுக்கு நீதி கிடைக்கணும் என கதறினார்.

ஜெயராஜின் மகள் பெர்சி நம்மிடம், எங்க குடும்பத்தின் ஆணி வேரே எங்க அப்பாவும், எங்க தம்பியும்தான். என் தம்பி 7.50க்கு போன் அடிச்சான். அப்பாவ 'அரெஸ்ட் பண்ணிட்டாங்க'ன்னு சொல்லி போனை வச்சான். திரும்பி நான் கூப்புடுறதுக்குள்ள அவனையும் கூப்பிட்டுப்போய் உள்ள வைச்சுட்டாங்களே. அய்யோ... ஏசுவே... ஆண்டவரே... ரத்த காயம்... உடம்பு முழுசும் ரத்தம். விடிய விடிய ஒன்றரை மணி வரை அடிச்சிருக்காங்க. என் தம்பி இறந்த போட்டோவ நான் பாக்குறேன். அவனுக்கு நெஞ்சு முடி அவ்ளோ இருக்கும். அதயெல்லாம் புடுங்கியிருக்காங்க. ரெண்டு, மூனு வேட்டி மாத்தியிருக்காங்க. அவ்ளோ ரத்தம்'' என கதறினார்.

________________

போலீஸ் அடியை அம்பலப்படுத்திய மருத்துவக் குறிப்பு! EXCLUSIVE

அப்பாவையும் மகனையும் ரிமாண்ட் செய்வதற்கு முன், அரசு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும் இருவருக்கும் லேசான சிராய்ப்புக் காயம் என்று மட்டுமே மருத்துவக் குறிப்பில் பதிவு செய்த நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் ஜெயராஜூம் பென்னிக்ஸூம் போலீசாரால் எந்தளவு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மருத்துவர் பதிவு செய்துள்ளார். அந்த மருத்துவக் குறிப்பினை நக்கீரன் இங்கே Exclusiveஆக வெளியிட்டுள்ளது.

TUTY

அதில் உள்ள காய விவரம்

பென்னிக்ஸ்: Gluteal region - mulitiple marks present பின்புறத்தில் புட்டம் பகுதியில் அடித்ததினால் ஏற்பட்ட அதிகளவில் (பத்துக்கும் மேற்பட்ட) காயங்கள்.

right knee contusion வலது கணுக்காலில் அடித்ததினால் ரத்தக்கட்டு இதுபோக சுகர் மற்றும் பிபி இருப்பதாகவும், மறு நாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே எடுக்க வரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயராஜ் : Gluteal region - mulitiple marks present பின்புறத்தில் புட்டம் பகுதியில் அடித்ததினால் ஏற்பட்ட அதிகளவில் (பத்துக்கும் மேற்பட்ட) காயங்கள்.

இதுபோக சுகர் மற்றும் பிபி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

___________

நக்கீரன் பெற்ற தீர்ப்பை கடைப்பிடித்திருந்தால்...

TUTY

கவர்னர் மாளிகை அளித்த புகாரின் பேரில் போலீசார், நமது நக்கீரன் ஆசிரியரை கைது செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், 7 வருடத்திற்கு உட்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களில் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 41லிஆன்படி குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு நோட் டீஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனையும் மீறி கைதுசெய்தே தீரவேண்டும் என்றால் அதற்கான காரணத்தை காவல்துறையினர் நியாயமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சட்டத்தை நிலைநாட்டும் கீழமை நீதிமன்றங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் 2019 ஜனவரியில் தீர்ப்பு அளித்திருந்தார். மேலும் இந்த தீர்ப்பை தமிழக காவல்துறை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி இனிவரும் காலங்களில் போலீசார் மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகளில் இந்த தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டும் சாத்தான்குளத்தில் கைது-கஸ்டடி தாக்குதல்-ரிமாண்ட் என வரம்பு மீறியதுதான் இரட்டை உயிர்ப்பலிக்கு காரணமாகிவிட்டது என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மாஜிஸ்ட்ரேட் பின்பற்றியிருந்தால் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று மூத்த வழக்கறிஞர் பி.டி.பெருமாள் தெரிவித்தார்.