தமிழ்நாடு காவல்துறையின் மிக முக்கிய பிரிவான உளவுத்துறைக்கு இதுவரை ஒரு காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) இடம் மட்டுமே இருந்து வந்தது. அந்த பதவியில் இருப்பவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களின் உளவுப்பிரிவு அலுவலகத்திலிருந்து தகவல்களை வாங்கி அதில் முக்கியமானவற்றை உளவுத்துறை ஐ.ஜி வழியாக ஏ.டி.ஜி.பி.க்கு அனுப்புவர். அதில் மிக முக்கியமானதை பிரித்தெடுத்து முதலமைச்சர் பார்வைக்கு தினமும் இரண்டு முறை அனுப்பி வைப்பது வழக்கம்.
தமிழ்நாடு முழுமைக்குமான உளவுத் தகவல்களை திரட்டும் மிக முக்கியமான இந்த எஸ்.பி. பதவியில் இதுவரை ஒருவர் மட்டுமே இருந்தார். தற்போது அது இரண்டாக உயர்த்தப்பட்டு எஸ்.பி.யாக அரவிந்தன், சரவணன் என இருவர் உள்ள னர். இதற்கு சொல் லப்படும் காரணம், மக்கள் தொகை பெருக்கத்தால் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. அதனால் உளவுப்பணிக்கு கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளைக் கூடுதலாக நியமித்தால் வேலைப்பளு குறையும், குற்றங்கள் குறைந்துவிடுமா என கேள்வி எழுப்புகிறார்கள் நேர்மையான கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சில அதிகாரி கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறைக்கென தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் பெரிய டீமே உள்ளது. இவர்களின் பணியென்பது குற்றவாளிகளை, அரசியல் கட்சிகளை, எதிர்க்கட்சி பிரமுர்கள், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து துறை அதிகாரிகள், அரசியல் சாராத இயக்கங்களை கண்காணிப்பது உட்பட இன்னும் மிக முக்கிய பணிகளும் உண்டு. உளவுப்பணி யென்பது காவல் துறை தலைமைக் கும், ஆட்சியாளர் களுக்கும் மிக முக்கியமானது. உளவுத் தகவல் மூலம் பல குற்றச் சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன, பல அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளது.
தகவல் வைத்துள்ள சோர்ஸ்கள் நம்பகமான உளவுத்துறை காவலர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்வார்கள் எனச் சொல்லி, நீண்ட வருடங்களாக அந்தப் பிரிவில் 90 சதவிகிதம் இடமாற்றம் என்பதேயில்லை. மாவட்டங்களில், மாநகரங்களில் பணியாற்றும் கீழ்நிலை உளவுத்துறை அதிகாரிகள் பலரும் பல ஆண்டுகளாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் மீண்டும் அதே பிரிவி லேயே பணியாற்றுபவர்கள். அரசுத் துறையில் பணியாளர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யவேண்டும் என்பது விதிமுறை. தேர்தல் காலத்தில் இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்படும். ஆனால் அந்த உத்தரவுகள் எதுவும் அமல்படுத்தாத பிரிவு உளவுத் துறைதான். மீறி சிலர் இடமாற்றம் செய்யப்பட்டாலும் உளவுத்துறை உயரதிகாரிகள் தங்களுக்கு சொம்பு அடிப்பவர்களையும், ஜால்ராக்களையும் சிறந்த உளவுப்பிரிவு காவலர் எனச் சொல்லி மீண்டும் அதே இடத்துக்கு அனுப்பிவைப்பது சிக்கல்களை உருவாக்குகின்றன.
இதனால் நாட்டில் குற்றங் கள் அதிகரிக்கவும் செய்கின்றன. தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியில் அதுவும் உளவுத்துறையில் இருப்பதால் சாராய வியாபாரிகள், கஞ்சா வியாபாரிகள், சூதாட்ட விடுதிகள், கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளிகள், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுடன் நட்பாகிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு மாமூல் போவது போல் மாதாமாதம் இவர்களைத்தேடியும் மாமூல் போகிறது. மாமூல் தரவில்லையெனில் உன்னைப் பத்தி ரிப்போர்ட் போட்டுடுவேன் என மிரட்டி பணம் பறிக்கின்றனர். சில இடங்களில் மீடியாவில் இருப்பவர்களுடன் இணைந்து முக்கியமான தொழிலதிபர்கள், வியாபாரிகளை குறிவைத்து அவர்கள் பற்றிய தவறுகளை செய்தியாக ஒளிபரப்பச் செய்து அதை விசாரிப்பதுபோல் சென்று மிரட்டி பணம் பறித்து பங்கிட்டுக் கொள்வதும் நடக்கிறது. இப்படி டபுள் ஏஜென்ட்களாக பலர் உலா வருகிறார்கள்.
உளவுத்துறையில் தகவல் தரும் சோர்ஸ் களுக்கென டிபார்ட்மெண்டில் சிறப்பு நிதி பெரியளவில் ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியிலும் பெரும் முறைகேடு நடக்கிறது. சட்டம் ஒழுங்கு காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் வசைமாரி பொழிகின்ற னர். ஆனால் அப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் லம்பாக லஞ்சம் வாங்குபவர்கள் உளவுத்துறையிலும் இருக்கிறார்கள். பல உளவுத்துறை அதிகாரிகளின் சொத்து மதிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை ஆராய்ந்தால் மயக்கமாகிவிடு வார்கள், ஆனால் அதனை யாரும் செய்வதில்லை.
வேலையை வைத்து சம்பாதிப்பது ஒருபுறமென்றால், வேலையையும் சரியாக செய்வதில்லை. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் எஸ்.பி. தனிப்பிரிவு காவலர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு காவல்நிலையத்திலும், காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் என்ன நடக்கிறது என மாவட்ட எஸ்.பி. இன்ஸ்பெக்டருக்கு தகவல் அனுப்புவார்கள், அது எஸ்.பி. பார்வைக்கு செல்லும். இவர்களையும் சேர்த்து கண்காணிப்பது தான் உளவுத்துறை காவலர்களின் பணி. ஆனால் எல்லா இடத்திலும் தனிப்பிரிவும் - உளவுப்பிரிவும் நகையும் சதையுமாகவே இருக்கிறார்கள். எந்த சம்பவமாகயிருந்தாலும் இருதரப்பின் ரிப்போர்ட்டும் ஒரேமாதிரியாகவே தங்களது பாஸ்களுக்கு தருகிறார்கள். உளவுத்துறையும் - எஸ்.பி தனிப்பிரிவு காவலர்களும் இணைந்து இதுக்கு இப்படி நோட் போடலாம், அதுக்கு இப்படி நோட் போடலாம் என இணைந்து செய்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமிய பிரமுகர் வாசீம், கஞ்சா கும்பலால் மிரட்டப்படுகிறார். உயிருக்கு ஆபத்துள்ளது என்கிற தகவல் அந்தப் பகுதி உளவுத்துறை காவலருக்கு முன்கூட்டியே தெரிகிறது. அந்த கொலைக் கும்பல் தலைவனிடம் முக்கிய காவல்துறை அதிகாரி லம்பாக வாங்கிக்கொண்டு உதவி செய்வது உளவுத்துறையினருக்கு தெரிந்தும் மேலிடத்துக்கு தகவல் பாஸ் செய்து எச்சரிக்காமல் கமுக்கமாக இருந்ததாலேயே படுகொலை நடந்தது. படுகொலை நடந்தபின் தாங்கள் தப்பித்துக்கொள்ள அதன் பின்பே விரிவான ரிப்போர்ட் தலைமைக்கு வந்தது. உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் எஸ்.பி இடமாற்றம், டி.எஸ்.பிக்கு மெமோ, இன்ஸ்பெக் டரை சஸ்பெண்ட் செய்த எங்கள் அதிகாரிகள், உளவுத்துறை, தனிப்பிரிவில் இருப்பவர்களை எதுவும் கேட்கவில்லை. இது ஒரு உதாரணம்தான் இப்படி பலவுள்ளன.
உளவுத்துறையில் சாதிப் பாகுபாடும் உள்ளது. நீண்ட காலமாக அங்கு இருப்பவர்கள் தங்களது சாதியை சேர்ந்தவர்களை உள்ளே கொண்டுவந்து உளவுத்துறையை நாசமாக்கி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட உளவு நபர்களை வைத்துக்கொண்டு மாநிலத்தில் குற்றங்களை தடுக்க முடியாது. குற்றங்களை தடுக்க வேண்டும், உளவுத்தகவல் துல்லியமாக வேண்டுமென்றால் உளவுத்துறையில் கீழ்மட்டத்தில் முதலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
உளவுத்துறையில் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ் பெக்டர்கள், ஏட்டுக்கள், காவலர்களாக இருப்பவர் களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 25 சதவிகிதம் பேரை காவல்நிலையத்துக்கோ, வேறு பிரிவுக்கோ மாற்றி அனுப்பி விடவேண்டும். காலியாகவுள்ள இடத்துக்கு புதியதாக காவல்துறைக்கு தேர்வாகும் இளம் காவலர்களை நியமிக்கவேண்டும், அவர்கள் துடிப்புடன் பணியாற்றுவார்கள். இதன்மூலம் உளவுத் தகவல் பக்காவாக கிடைக்கும். இப்படி சுழற்சி முறையில் உளவுத்துறைக்கு புது ரத்தம் பாய்ச்சப்படும்போது குற்றவாளிகளுடன் நெருங்கமாட்டார்கள். உளவுத்தகவல் கிடைப்பது பாதிக்கப்படாது எக்ஸ்பீரியன்ஸ் நபர்கள் பிரிவில் இருந்துகொண்டே இருப்பார்கள். பக்காவாக மேலிடத்துக்கு ரிப்போர்ட் போகும் என்றார்கள்.
-நமது நிருபர்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கம்!
நக்கீரன் 2021 அக்டோபர் 9-12 தேதியிட்ட இதழில், "இப்போதும் செய்யாதுரை கொடி பறக்கிறது! -நடைமுறையை மாற்றிய நெடுஞ்சாலைத்துறை!' என்ற செய்தியில், 7 உதவிக் கோட்டப் பொறியாளர்கள், தரக்கட்டுப்பாடு அதிகாரி, கண்காணிப்பு பொறியாளர் என 10 பேருக்கு ஒப்பந்தக்காரர் செலவில் பொலிரோ வாகனங்கள் கொடுக்கப்பட்டு, டீசல், டிரைவர் சம்பளம் கொடுக்கப்படுவது பற்றி வெளியிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்மிடம், "நடைமுறையை மாற்றியது முந்தைய அ.தி.மு.க. அரசுதான். டெண்டர்கள் ஒதுக்குவதில் எடப்பாடி அரசல் கடைப்பிடிக்கப்பட்ட ‘பேக்கேஜ் சிஸ்டம்’ முறையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்டர்கள் வாகனம் வாங்கித் தரவேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டிருந்தது. 5 ஆண்டுகள் வரை போடப்பட்ட பழைய ஒப்பந்தங்கள், முடிவடையாத இடங்களில் இன்னமும் இது தொடர்கிறது. ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள். தற்போதைய அரசுக்கு நெருக்கடி ஏற்படும்.
அதே நேரத்தில், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பேக்கேஜ் ஒப்பந்தம் முடிந்த நிலையில், இப்போது காண்ட்ராக்டர்கள் வாகனம் வாங்கித் தரும் முறை நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற மாவட்டங்களிலும், பேக்கேஜ் சிஸ்டம் ஒப்பந்தம் முடிந்ததும் பழைய நிலை விரைவில் திரும்பும். டெண்டர் பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் அரசு வாகனத்தில் வந்தால்தான் காண்ட்ராக்டர்கள் பயப்படுவார்கள். காண்ட்ராக்டர் வாங்கிக் கொடுக்கும் காரில் வந்தால் எப்படி சரியாக கண்காணிப்பார்கள்? இப்படியொரு விதிமுறையே தேவையற்றது. ஆனால், முந்தைய அரசாங்கம் பல்வேறு கணக்குகள் போட்டு இந்த விதிமுறையைப் புகுத்தியுள்ளது.
தற்போதைய தி.மு.க அரசு பேக்கேஜ் சிஸ்டத்தையே ரத்து செய்து, ஒரு மாவட்டத்திற்கான பணிகளை பலருக்கும் அளித்து, வேலைகள் விரைந்து நடக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. பழைய அ.தி.மு.க அரசின் பேக்கேஜ் ஒப்பந்தக் காலம் முடிந்ததும், காண்ட்ராக்டர்கள் வாகனத்தில் அதிகாரிகள் செல்கின்ற இந்த நடைமுறை முற்றுப்பெறும்''’என்றனர்.
-கீரன்