சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை அவசர அவசரமாக சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்தது எடப்பாடி அரசு. இது காலம் கடத்துவதற்கான வேலை என்கிறார்கள் 15 உயிர்களைப் பலி கொடுத்த தூத்துக்குடி வாசிகள்.
2018 ஆகஸ்ட் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இன்று வரை சி.பி.ஐ. விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
துப்பாக்கியால் வாயில் சுடப்பட்டு இறந்த ஸ்நோலினின் தாயார் வனிதா கடந்த செவ்வாயன்று, சாத்தான்குளத்தில் செல்வராணியின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார். ""உங்க நிலைமை எனக்கு புரிகின்றது. எனக்கு ஆறுதல் கூறுவதை தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் சிபிஐ விசாரணைமீது நம்பிக்கையில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் விசாரணை எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று நீதி என்றும் மரிக்காது."" என ஆறுதல் கூறி ஸ்நோலின் எழுதிய கவிதை புத்தகத்தை செல்வராணிக்கு கொடுத்து அங்கிருந்து புறப்பட்டார். ""ஏனம்மா சிபிஐ விசாரணையை கேள்விக்குறியாக ஆக்குகின்றீர்கள்.? என்றால் உண்மை தானப்பா'' என்கிறார் அவர்.
சிபிஐ விசாரணை குறித்து பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் மோகனோ, ""சாத்தான்குளத்தில் காவல் துறையின் சித்ரவதையால் தந்தையும், மகனும் மரணமடைந்ததை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டிருப்பது மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும் செயலாகும் சாத்தான்குளம் மரணத்தில் தொடர்புடைய காவல்துறை ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஆகியோர் மீது கொலை வழக்குப்போட வேண்டும். நீதிமன்றம் நீதி வழங்கட்டும்'' என்கிறார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தொடங்கியுள்ள சி.பி.சி.ஐ.டி விசாரணையில் புதிய முன்னேற்றங்கள் தெரிந்தன.
- நாகேந்திரன்
__________
எஸ்.ஐ. அதிரடி கைது!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாத்தான் குளத்திற்கு ஜூலை 1அன்று வந்து விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர், ""எஃப்.ஐ.ஆரில் மாற்றம் இருக்கும். மாலையில் நடவடிக்கையை எதிர் பாருங்கள்'' என்றார். இந்நிலையில், புதிய எஸ்பி. ஜெயக்குமார், சாத்தான்குளத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசாரை நேரில் வரச் சொல்லியிருந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகாத நிலையில், மற்றொரு எஸ்.ஐ. ரகுகணேஷூம், 3 காவலர்களும் வந்திருந்தனர். விசாரித்த எஸ்பி, மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு, ரகுகணேஷை அங்கேயே இருக்கச் சொன்னார். சிறிது நேரத்தில் ரகுகணேஷ் மீது அதிரடி கைது நடவடிக்கை பாய்ந்தது. கைதுக்குப் பயந்து ஆஜராகாமல் இருந்த இன்ஸ்பெக்டரும் இன்னொரு எஸ்.ஐ.யும் எந்நேரமும் கைது செய்யப்படலாம். இது நக்கீரனுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி.