ட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் என எதுவாக இருந்தாலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரசு ஊழியர்கள் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வுக்கு எதிராக 90 சதவித வாக்குகளை பதிவுசெய்திருந்தனர். இதனால் அப்போதே அரசு ஊழியர்கள் மீது அதிருப்தி உருவானது எடப்பாடி அரசுக்கு.

vv

இதனால் திருவண்ணாமலை மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியாத படிக்கு மாவட்ட நிர்வாகங்கள் இடைஞ்சல்களை உருவாக்கின. அப்படியும் போராடி தபால்வாக்கு செலுத்தினர் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள். அப்படி போராடி தங்களது உரிமைகளை நிலைநாட்டிய வாக்குகளை செல்லாத வாக்குகளாக்கி அதிர்ச்சியை தந்துள்ளார்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அதிகாரிகள்.

ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் தனியாக ஒருபக்கம் எண்ணப்பட்டது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றியத்தில் பதிவான 60 வாக்குகளில் 58 வாக்குகள் செல்லாதவை என்றும், தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான 135 தபால் வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவை என்றும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான 118 வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என்றும், ஒட்டன் சத்திரத்தில் பதிவான 74 தபால் வாக்குகளில் 73 வாக்குகள் செல்லாதவை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

""பொதுமக்கள், வாக்குசீட்டுகளில் எப்படி வாக்களிக்க வேண்டும், எப்படி மடிக்க வேண்டும், எப்படி பெட்டியில் போட வேண்டும் என 3 கட்டமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களான எங்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு விளக்கமாகச் சொல்லி வாக்களிக்க வைத்த நாங்கள்... தவறாக வாக்களிப்போமா'' என கேள்வி எழுப்புகின்றனர்.

சில இடங்களில் தபால் வாக்குப்பதிவு படிவத்தோடு சரியாக ஆவணங்கள் இணைக்க வில்லை என குற்றம்சாட்டியுள்ளார்கள். ""கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆவணங்களை இணைக்கத் தெரிந்த எங்களுக்கு, இப்போது இணைக்கத் தெரியாதா'' என கேள்வி எழுப்புகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது பல பதவிகள் கொண்டது. பத்து ஓட்டு, 15 ஓட்டு, ஏன்... ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டுகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அப்படிக்கூட எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆளும்கட்சி அதிகாரிகளை மிரட்டி வாக்குகளை செல்லாததாக்கியுள்ளது'' என குற்றம்சாட்டு கிறார்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.

Advertisment

-கிங்