கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மத்திய பா.ஜ.க அரசால் இயற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் ஓயவில்லை. இந்நிலையில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் பட்ஜெட்டில் உரமானியத்திற்காக மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது மத்திய அரசின் உரத்துறை அமைச்சகம். ""உரமானியம் என்பதே கார்ப்பரேட்களுக்கு ஆதரவானதே! விவசாயிகளுக்கு அல்ல. தற்சார்பு விவசாயப் பொருளாதாரத்தை வாழவைத்தால் இந்த உரமானியம் தேவையில்லை'' என மத்திய அரசிற்கு எதிராக குரல் வலுத்து வருகின்றது கரிசல் மண் விவசாயிகளிடம்!

VOF

உரங்களின் உற்பத்தியில் 2018-19 ஆண்டிற்கான யூரியா உற்பத்தியில் 240 எல்.எம்.டி. இருந்த உற்பத்தியளவு 2019-2020 ஆண்டில் 244.55 எல்.எம்.டி.யாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.40 சதவீதம் கூடுதல் எனவும் யூரியா அல்லாத டி.ஏ.பி., எம்.ஓ.பி., என்.பி.கே. மற்றும் சல்பர் அடிப்படையிலான உரங்கள் 14,726 மெட்ரிக் டன் விற்பனையினைத் தொட்டுள்ளது. விவசாய உரத்திற்கான மானியமாக 2019 நிதியாண்டில் 70,605 கோடி ரூபாய் கொடுத்த மத்திய அரசு 2020-ஆம் நிதியாண்டில் 79,998 கோடி ரூபாயாக உயர்த்திக் கொடுத்துள்ளது. இதுவரை உரக் கம்பெனிகளுக்கு நேரடியாக மானியத்தை வழங்கிய மத்திய அரசு, வருகின்ற நிதியாண்டில் உரமானியத்திற்கு மட்டும் லட்சம் கோடி ரூபாய்களை 14 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவுள்ளதாக மத்திய அரசின் VOFவிவரக்குறிப்பு தெரிவிக்கின்றது.

""இதுவும் தில்லாலங்கடி வேலையே! இன்னொருத்தன் நிலத்திற்கு அடங்கல் வாங்கிவிட்டு தான்தான் அதற்கு விவசாயம் பார்க்கின்றேன் என உள்ளூர் வி.ஏ.ஓ.-விடம் சான்றிதழ் பெற்று கடன், மானியம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வாங்குவார்களே அதுபோல் உள்ளது இந்த உரமானியமும்! அதாவது ஏற்கனவே மானியம் கழிச்சுட்டு உரத்தை வாங்கியவன் இப்ப முழுத்தொகை யைக் கொடுத்து உரத்தை வாங்குவான்! மானியத் தொகைதான் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்களே! முந்தி கார்ப்பரேட்காரனுக்கு மொத்தமாக மானியத் தொகையை கொடுத்த மத்திய அரசு. இப்ப விவசாயிகள் மூலமாக கொடுக்குது. எப்படி எந்த ரூட்டில் வந்தாலும் கார்ப்பரேட்காரனுக்கு லாபம்தான்! இதையெல்லாம் ஒழிக்கணும்னா தற்சார்பு விவசாயம் மட்டுமே தீர்வு'' என்கிறார் இடைகால் பகுதியினைச் சேர்ந்த விவசாயி சீதாராமன்.

Advertisment

""வேளாண்மையின் கிரியாஊக்கி கால்நடைகளே! வேளாண்மையையும், கால்நடைகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. பயிர்களுக்காக ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல் கூடாது. தண்ணீர் செலவழிக் கக்கூடாது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கால்நடைகளிடமிருந்து கிடைக்கப் பெறும் உயிர் உரங்களால் உயிர் நிறைந்த நிலத்தைப் பண்படுத்தி முதல் அடுக்கில் உயிர் ஊட்டச் சத்து உணவுகளையும், சுவைக் கான உணவுகளை அடுத்த அடுக்கிலும் விளைவிக்க வேண் டும், பனைவெல்லம் இருக்கும் போது ஆலைக்கரும்புகளுக்காக விளைநிலத்தையும், நிலத்தடி நீரையும் எதற்காக செலவழிக்க வேண்டும்'' என்பதுதான் தற்சார்பு விவசாயப் பொருளா தாரத்தின் கொள்கை என்கிறது காந்தியடிகளின் நண்பரும் வேளாண் சீர்திருத்தவாதியுமான குமரப்பாவின் சித்தாந்தம்.

ரசாயன உரங்களைத் தவிர்த்து, தற்சார்பு விவசாயப் பொருளாதாரத்தைப் பயன் படுத்தி வெற்றிபெற்றிருக்கும் விளாத்திக்குளத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனோ,

""குமரப்பாவின் கொள்கையே என்னுடைய கொள்கை! அவர் வழியிலேயேதான் இந்த கட்டமைப்பை உருவாக்கி எவ்வித மானியமுமின்றி விவசாயத்தில் வெற்றி பெற்றுள்ளேன். விவசாயத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு விஞ்ஞானம் தேவை. ஆனால் ரசாயனம் தேவை இல்லை. விஞ்ஞானத்தை எவ்வளவு சிறப்பாக வேளாண்மை துறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

Advertisment

ஒட்டுமொத்த பொருளாதாரமும் ரசாயனக் கொள்ளையர்களிடம் போய்ச்சேர்கிறது. அதிலிருந்து என் நிலத்தை பாதுகாத்துள்ளேன். பூச்சிக்கொல்லி மருந்துகளால், ரசாயனங்களால் பூச்சிகள் அழிக்கப்படுவதில்லை. ஒழிக்கப்படுவ தில்லை. இயற்கைச் சூழல் சமநிலைகளைப் பாதுகாத்துவருகிறேன். 50 பசுமாடுகள் கொண்ட என்னுடைய கோசாலையிலிருந்து 200 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான இயற்கை உரமும், ஆண்டுமுழுவதற்கும் தேவையான எரிவாயுவும், தினசரி 15 கிலோ வாட் மின்சாரமும் கிடைக்கின்றன. விவசாயியான நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை. என்னுடைய பெயரில் யாரும் எவ்வித மானியமும் பெறமுடியாது. என் பெயரில் கார்ப்பரேட்காரன் சம்பாதிக்க முடியாது.

பனைமரங்களை அழிக்கும் அரசின் கொள்கை நிலத்தை அழிக்கும் சர்க்கரை ஏற்றுமதிக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மானியத்தையும், உரத்திற்கு டன் ஒன்றிற்கு ரூ14 ஆயிரம் மானியம், மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ10 மானியம், எரிவாயுவுக்கு ரூ.500 மானியம் என கொடுத்து கார்ப்பரேட்காரர்களை வாழவைக்கும் இந்த அரசு, உயிர் உரங்களுக்கு மானியத்தைக் கொடுத்து எம்மைப் போன்ற தற்சார்பு விவசாயியைப் பாதுகாத்தாலே போதும். இந்தியா உலகளவில் வல்லரசாகும். பட்டினிச்சாவு என்பதே இருக்காது'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

விவசாயம் ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. அந்தந்த நிலத்திற்கேற்ற தன்மையுடனான விளைச்சலை மேம்படுத்துவதே சரியான-தெளிவான தற்சார்பு பொருளாதாரம். அதனை கார்ப்பரேட்டுகளின் அரசால் ஒருபோதும் செய்ய முடியாது.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்