60 நாட்களைக் கடந்த ஊரடங்கால் என்ன பலன் என்ன கேள்வி பொதுமக்களின் மனதில் எழத் தொடங்கிவிட்டது. அன்றாட தொற்று எண்ணிக்கை 600, 700, 800 என எகிறுகிறது. இதானால் ஏற்பட்ட உயிர் பயத்தால், தென் மாவட்டங்களிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு வேலைக்காக புலம் பெயர்ந்தவர்கள், தங்களின் குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்ள, சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பினர். கூழோ, கஞ்சியோ கிடைத்தாலும், சொந்த உறவுகளுடன் சேர்ந்தமர்ந்து உண்பது தேவாமிர்தம். இனி சென்னை போன்ற நகரங்களின் பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது. உறவுகளுடன் சேர்ந்தால் நிம்மதி என்ற எண்ணத்தில், திரும்பத் தொடங்கினர். பால் வாகனங்கள் டேங்கர் லாரி, டூவீலர்கள் என்று கிடைத்தவைகளில் ஏறி ஊர் திரும்பினர்.

ni

அதேசமயம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து மே 16, 20களில் முறையே 310, 300 பேர் என்று ரயில்களின் மூலம் இரண்டு கட்டமாகத் தென்மாவட்டங்களின் பல நகரவாசிகளும் திரும்பினர். குறிப்பாக இவர்களில் மும்பை, தாராவி மற்றும் புனே பகுதியிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது. இது போன்று தெரிந்தும் மற்றும் தெரியாமலும் தென் மாவட்ட நகரம், மற்றும் கிராமப்பகுதிக்குள் வந்தவர்களின் ரத்த மாதிரிகளைச் சோதித்ததில் பலருக்கு கொரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். நெகட்டிவ் கண்ட்ரோலில் உள்ளவர்களை போகுமிடத்தில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு புதிய தொற்றில்லாத நிலையில், சிகிச்சையிலிருந்தவர்களில் கணிசமானவர்கள் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பரவல் கண்ட்ரோலுக்குள் வந்ததால் மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு ஆறுதலாகவுமிருந்தது.

Advertisment

இந்நிலையில், வடமாநிலங்கள், மற்றும் சென்னையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் திரும்பியதில் இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மூன்று ஐந்து மடங்காக உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் ஆரம்பத்தில் 53க்கு மேல் ஏறாமல் கட்டுக்குள் வந்த தொற்று, புலம் பெயர்ந்தவர்களால் எண்ணிக்கை உயர்ந்து 297 என்ற அளவிற்கு போய்விட்டது. தூத்துக்குடி மாவட்டம் 23 - 177, தென்காசி மாவட்டம் 38-85 என்ற ரேஞ்சுக்குப் பறந்துவிட்டது. அதன் அளவு வரும் நாட்களில் உயரலாம். ஏனெனில் அன்றாடம் சராசரியாக வெளிமாநிலத்தவர்கள் 600 பேர் வருகின்றனர் என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இப்படித் தொற்றோடு திரும்பியவர்கள் தங்களின் கிராமங்களுக்குள் சென்றுவிட்டால் நிம்மதி என்றிருந்தவர்களுக்கு எதிர் விளைவுகள் பதற வைத்திருக்கின்றன.

nn

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்தவிதத் தொற்றும் காணப்படாததால் நிம்மதியாக இருந்த அந்த மக்கள் இவர்களின் வருகையால் நம்மையும் நமது கிராமத்தையும் பற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்திற்கு ஆட் பட்டுள்ளனர்.

Advertisment

குறிப்பாக நாங்குநேரியின் விஜய அச்சம்பாட்டிற்குத் திரும்பியவர்களைச் சோதித்ததில் முதல் நாள் 26 பேர் மறுநாள் 13 பேர் என்று 39 பேர் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா என்பதால் விஜய அச்சம்பாடு பதற்றமாகிவிட்டது. இதன் காரணமாக தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கிராமமே மூடப்பட்டு லாக்டவுண் நிலைக்கு வந்ததால் அங்கே நிம்மதி போய், பீதி கிளம்பியிருக்கிறது.

ni

அதே போன்று தொற்றுப் பரவல்தான் அ.சாத்தான்குளம், பரப்பாடி, வாகைக்குளம், விஜயநாராயணம் மருகால்குறிச்சிக் கிராமங்களிலும் வந்தவர் களால் தொற்றுக் கிளம்ப, ஊர் அமைதி போனதால், இனி வருபவர்களை கிராம நலன் பொருட்டு உள்ளே அனுமதிக்கக் கூடாது. அவர்கள் உறவுகளே என்றாலும் கண்டிப்பாக "நோ' என்று கிராமத்தில் ஊர்த்தடை போட்டு விட்டுவிட்டனர். இதே போன்று ஊர்த்தடைக் கட்டுப்பாடு முடிவு மேற்குறிப்பிட்ட நாங்குநேரிக்குட்பட்ட கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்கள் கிராமத்திற்குள் வர அனுமதி கிடையாது என்று கண்டிப்பும் காட்டப்பட்டு வருகிறதாம்.

கடந்த 18ம் தேதி மும்பையின் தாராவிப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாத எம்.பி.ஏ. பட்டதாரியான அந்தப் பெண், உடல் நலமில்லாத தன் தாயுடன் தொற்று பீதி காரணமாக தலைக்கு 7500 வீதம் கட்டணம் கொடுத்து தனது ஊரான நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளம் திரும்பியிருக்கிறார்கள். கங்கை கொண்டான் எல்லையில் சோதனையை முடித்து தனது வடக்கன்குளம் வீட்டிற்கு வந்துள்ளனர். இதையறிந்த வடக்கன்குளம் பகுதி மக்கள், அவர்கள் வந்தால் தங்களுக்கும் தொற்று பரவிவிடும் என்ற அச்சத்தில் தாயும் மகளும் தெருவிற்குள் நுழையக் கூடாது என்று தடை விதித்ததோடு, குறுக்கே பைக், சைக்கிள்களைப் போட்டு மறித்து எதிர்ப்புத் தெரிவித்து வெளியேற்றியுள்ளனர். ஏரியாவில் பதற்றம்.

ni

விஷயமறிந்து வந்த பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது. வி.ஏ.ஓ மணிகண்டன் போன்றவர்கள் மக்களைச் சமாதானப் படுத்தியும் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இறுதியில் வேறு வழி தெரியாத தாயும் மகளும் ஊருக்கு வெளியே உள்ள பழைய பம்ப் செட் அறையில் பீதியோடு தங்க நேர்ந்திருக்கிறது.

இதே போன்று மறுநாள் மும்பையிலிருந்து பணகுடி அருகேயுள்ள பழவூருக்குத் திரும்பியவர்களை அந்தப் பகுதி மக்கள் தொற்று பயம் பாரணமாக வீட்டை விட்டு வெளியேறச் சொல்லித் தகராறிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் திரும்பியவர்கள் வீதிக்கு வரவேண்டிய கதி.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் சேர்ந்தமரம் அருகேயுள்ள புதுக்கிராமத்திற்கு கேரளாவிலிருந்து அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருவர் திரும்பியிருக்கிறார்கள். தொற்று பரவலாகிவிடும் என்ற பயத்தில் அவர்கள் வந்ததை அதிகாரிகளுக்கு அங்குள்ள ஒருவர் தெரியப்படுத்த, அவர்கள் வந்து, ரத்த மாதிரி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமானவர்கள், தகவல் கொடுத்த நபரைக் கடுமையாகத் தாக்க, அது போலீஸ்வரை போய் வழக்கு, கைது என்றாகியிருக்கிறது. சம்பவத்தால் அதிர்ந்து போன கிராமத்தின் முக்கியப் புள்ளிகள் ஒன்று கூடி தாக்கியவர்களின் குடும்பங்களை கண்டிக்க, பயத்தில் அந்தக் குடும்பங்கள் ஊரைக் காலி செய்துவிட்டன. அதையடுத்து இனி திரும்புபவர்களை ஊருக்குள் விடக்கூடாது என்று கிராமத் தடை போட்டுவிட்டனர்.

""இது எங்கள் கிராம மக்கள் நலன் பொருட்டு ஊர் கூடி எடுத்த முடிவு. மாற்றுவதற்கில்லை. வருபவர்களால் புளியங்குடியைப் போன்று எங்கள் கிராமங்களும் முடக்கப்பட்டால் எங்கள் வாழ்வு முடங்கிவிடுமே'' என்கிறார் அந்தக் கிராமத்தின் முக்கியப் புள்ளி.

கடந்த 19 அன்று மும்பையின் தாராவிப் பகுதியைச் சேர்ந்த 5 பேர்கள் தங்களின் சொந்த ஊரான தென்காசி மாவட்ட ஆழ்வார்குறிச்சியின் திருமலையப்பபுரம் பகுதிக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களை அங்கேயே தனிமைப் படுத்துவதற்காக வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதையறிந்த ஆழ்வார்குறிச்சிப் பகுதியினர் திரண்டு போய் அவர்களை இந்தப் பகுதியில் வைக்கவே கூடாது. எங்களுக்கும் தொற்று பரவலானால் என்னாகும் என்று வி.ஏ.ஓ. டேனியல், மற்றும் வருவாய் அதிகாரி மனோகரையும் வழிமறித்துக் கொண்டனர். மக்களின் கடும் எதிர்ப்பு வேறு வழியின்றி வந்தவர்களோடு அதிகாரிகள் பின் வாங்க வேண்டிய நிலை.

இதேபோன்ற எதிர்ப்புதான் பாவூர்சத்திரம், அத்தியூத்துப் பகுதிகளில். இப்படித் திரும்புபவர்கள் உள்ளே வராதபடி மடக்க கிராமத்தின் முனையிலேயே வேலித்தடுப்பை ஏற்படுத்திவிட்டனர்.

தென்மாவட்டக் கிராமங்களில் இதுபோன்று பரவும் கிராமத் தடைகள் பற்றியதை நெல்லை சரக டி.ஐ.ஜி.யான பிரவீன்குமார் அபிநபுவின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். ""நீங்கள் குறிப்பிடும் கிராமத் தடைகள் பெருகிக்கொண்டுதான் போகின்றன. அவர்கள் பாதுகாப்பு பொருட்டு அவர்கள் போடும் தடை பற்றி நாங்கள் பேசியும் வருகிறோம். கிராமங்களின் இக்கட்டான நிலை பற்றியும் மறுப்பதற்கில்லை. எனினும் இதுபோன்ற விஷயங்கள் அரசுக்குத் தெரியப்படுத்தி திரும்புபவர்களின் நிலைபொருட்டு மாற்று வழிக்கான ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகிறது'' என்கிறார் டி.ஐ.ஜி.

மக்கள் தங்களுக்கான பாதுகாப்பினைத் தாங்களே கவனித்துக்கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். எல்லாம் கொரோனா கற்றுத் தந்த பாடம்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

____________________

ஊரை மதிக்காததால் வந்த வினை!

தற்போதைய கொரோனா தாக்கம் காரணமாக நாம் இது போன்றவைகளை விசாரித்தபோது, அவர்கள் பொருட்டு வேறொரு தகவலும் கிடைத்தது. இது போன்று வெளி மாநிலத்திலிருந்து திரும்புபவர்கள், முன்பெல்லாம் கிராம விழாக்காலங்கள், கோவில் கொடைகள் பொருட்டு வந்து போயிருக்கிறார்கள். பணச் செழிப்புடன் விழா பொருட்டு வந்தவர்கள் அது சமயம் கிராமத்தினரை மதிக்காமல் கெத்தாகவே நடந்து கொண்டிருக்கிறார்களாம். மேலும் விழாக்கள், கோயில் கொடை நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்காக கிராமத்தினர் வழக்கமாக வசூலிக்கும் தலைக்கட்டு வரியைக் கூட பல ஆண்டுகளாகத் தருவது கிடையாதாம். இது போன்ற சுமைகளனைத்தும் சேர்ந்து, தற்போதைய கொரோனா தொற்று தாக்கத்தில் அழுத்தம் கொடுப்பதும் அனுமதி மறுப்பிற்கு மற்றொரு காரணம் என்கிற தகவலும் வெளிப்படுகிறது.. பாக்கியுள்ள தலைக்கட்டு வரியையும் மொத்தமாகத் தருகிறோம் என்று திரும்புவர்கள் தரப்பு தெரிவித்தும் தடை மாறவில்லை என்கிறார்கள்.