முதல்வர் நாராயணசாமிதான் இப்போது இதனைக் கிளறி விட்டார். உத்தர பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் கொடுமைக்குள்ளாகி உயிர் பறிக்கப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் அக்டோபர் 5 அன்று காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிடுவதாக முதல்வர் குற்றம்சாட்டினார். சில வாரங்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் இதே குற்றச்சாட்டை கூறியிருந்ததால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சேர, சோழர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என பலராலும் ஆளப்பட்டது 12 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட புதுச்சேரி பகுதி. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது புதுச்சேரி(282 ச.கி.மீ)யை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். இதேபோல் காரைக்கால்(165 ச.கி.மீ), ஆந்திரத்தை ஒட்டியுள்ள ஏனாம்(28 ச.கி.மீ), கேரளத்தை ஒட்டியுள்ள மாஹே(7.50 ச.கி.மீ) ஆகிய பிராந்தியங்களும் பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குக்கீழ் இருந்தன. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நிலையில் 1954 நவம்பர் 1-ல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை உள்ளிட்ட பிராந்தியங்களை மேற்கு வங்கத்திலிருந்த சந்திரநாகூருடன் இணைத்து சென்றனர்.

pp

பின்னாட்களில் சந்திரநாகூர் கொல்கொத்தாவுடன் இணைய, 1956-ல் பிரெஞ்சு- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளடங்கிய புதுச்சேரி பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அந்த இணைப்பின் போது அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு - பிரெஞ்சு தூதர் பியர்லாண்டி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 4 பிராந்தியங்கள் அடங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். புதுச்சேரிக்கான பட்ஜெட் தொகையில் 100 சதவீதம் நிதியை இந்திய அரசு அளிக்கும்’ என வாக்குறுதியளித்தார் நேரு. அதனைத் தொடர்ந்து 1962-ல் கீழூர் ஒப்பந்தப்படி புதுச்சேரி பிராந்தியம் முழுமையாக இந்தியாவுடன் இணைந்தது. 1963-ல் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் வெளியிடப்பட்டது. அதன்படி குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி இயங்கும், துணை நிலை ஆளுநர் குடியரசு தலைவரின் பிரதிநிதியாக நிர்வகிப்பார் என்பதுதான் சட்டம். தற்போது புதுச்சேரிக்கு 30 எம்.எல்.ஏக்கள், 3 நியமன எம்.எல்.ஏக்கள், 1 மாநிலங்களவை உறுப்பினர், 1 மக்களவை உறுப்பினர் உள்ளனர்.

1979-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி இருந்த போது, தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் அ.தி.மு.க ஆட்சி இருந்தது. அப்போது புதுச்சேரியைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சர்ச்சை எழுந்து, 10 நாட்கள் போராட்டங்கள் வெடித்தன. அரசு அலுவலகங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதோடு புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது 40 ஆண்டுகள் கழித்து இந்த விவகாரம் மீண்டும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

Advertisment

முதல்வர் நாராயணசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க சார்பில் 08-ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். நாராயணசாமி பொய்யான- ஆதாரமற்ற தகவல்களை கிளப்புவதாக சொன்ன பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், ""நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது புதுச்சேரியின் தனித்தன்மையை சிதைத்தவர். புதுச்சேரி மாநிலம் மத்திய நிதிக்குழுவில் இல்லாமலும், யூனியன் பிரதேசமாக இல்லாமலும் இன்றைய நிதி சுமைக்கு வித்திட்டவர்''’என்றார். பா.ஜ.க பொதுச்செயலாளர் ரவியும், ""இணைப்பு முயற்சி எதுவும் இல்லை'' என்கிறார்.

dd

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமியோ, ""புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 3,000 கோடி மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும். ஆனால் ஆயிரத்து 700 கோடிதான் அளிக்கின்றனர்''’எனத் தொடங்கி, நீட் தேர்வு, மும்மொழிக்கொள்கை அரசு திட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போடும் தடைகள் எனப் பட்டியலிட்டார். தனது அரசின் அதிகாரப் பறிப்பை முன்வைத்தே அவரது குரல் ஒலித்தது. தி.மு.க (தெற்கு) மாநில அமைப்பாளர் இரா சிவா எம்.எல்.ஏ. நம்மிடம், ""புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சி ஒரு போதும் பலிக்காது. பா.ஜ.கவுக்கு புதுவை மக்களின் உரிமைகள் பறி போகக் கூடாது என்ற எண்ணம் இருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை'' என்றார்.

Advertisment

மக்கள் வாழ்வுரிமை இயக்கம் செயலாளர் கோ.அ.ஜெகன் நாதன் நம்மிடம், ""புதுவை முதல்வர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைதிருப்புவதாகக் குற்றம்சாட்டியதுடன், “பிரெஞ்சு- இந்திய ஒப்பந்தப்படி புதுச்சேரி மக்களின் எந்த ஒரு விருப்பங்களையும், முடிவுகளையும் கேட்காமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் அல்லது அண்டை மாநில அரசுகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை எந்த ஒரு மாநிலத்தோடும் இணைக்க முடியாது'' என்கிறார் தெளிவாக.

புதுச்சேரிக்கு நேரு ஆட்சியில் அளிக்கப் பட்ட தனித்துவம், பா.ஜ.க. அரசால் இன்னொரு காஷ்மீர் போல ஆகிவிடக்கூடாது என்பதே மக்களின் பதைபதைப்பு.

-சுந்தரபாண்டியன்