சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் கட்சி தனது ஆய்வுக்காக பென் டீம், உளவுத்துறை, தனியார் ஏஜென்ஸியை பயன்படுத்த, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் தனியார் ஏஜென்ஸியை களமிறக்கி சர்வே எடுத்து வருகின்றது.
"ஆளும்கட்சி மாவட்ட அளவில், தொகுதி அளவில் தகவல்களை பென் டீம், ஐ.டி. விங், உளவுத்துறை மூலம் வாங்குகிறது, அதை அலசி ஆராய்கிறது. அதே நேரத்தில் சிலர் நாங்கள் தலைமைக்காக வேலை செய்கிறோம். தொகுதியில் யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என 3 பேர் கொண்ட பட்டியலை தலைமை கேட்டுள்ளது. "உங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கிறோம், உங்கள் தகுதியென்ன, நீங்கள் கட்சிக்காக என்னென்ன வேலைகள் செய்துள்ளீர்கள்? பொருளாதார பலம் என்ன?' எனப் பல தகவல்களை கேட்டு வாங்குகிறார்களாம். அதன்பின் இறுதியாக அவர்கள் கேட்பதுதான் சீட் ஆசையிலுள்ள எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது'' என புலம்புகிறார்கள்.
இதுகுறித்து வட மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர், “"உங்களுக்கு சீட் தந்தால் நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்கன்னு கட்சிக்காரங்க பரவலா சொல்றாங்க. கட்சியில் நீங்கள் செய்துள்ள பணியென்ன? கட்சிக்காக என்னென்ன செய்துள்ளீர்கள்னு பல கேள்விகள் கேட்டுட்டு கடைசியா உங்களைப்பத்தி நல்லதா ரிப்போர்ட் போட்டுடலாம், அதுக்கு ஏதாவது கவனிங்கன்னு நேரடியாவே கேட்டாங்க. நானும் 20,000 கவர்ல போட்டுத் தந்தேன். இப்போ எனக்கு என்ன சந்தேகம்னா, எங்கிட்ட தகவல் கேட்டு வாங்கியது போலத்தானே மத்த நிர்வாகிகள்கிட்டயும் வாங்கியிருப்பாங்க. அப்போ இவுங்க யாருக்கு சாதகமா ரிப்போர்ட் அனுப்புவாங்க. ஒவ்வொருத்தர் பத்தியும் நாங்க ரிப்போர்ட் தருவோம், தலைமை யாரை வேணா செலக்ட் செய்துக்கட்டும் அப்படின்னா, அப்பறம் இவுங்க எதுக்கு?'' என்கிறார்கள்.
ஆளும்கட்சியில் இப்படியென்றால் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே சீட் வாங்கித் தருகிறேன் என்கிற பெயரில் கல்லா கட்டுகிறார்கள் என்கிறார்கள்.
இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி யொருவரிடம் பேசியபோது, "எந்தெந்த தொகுதிகள் நமக்கு சாதகமா இருக்குன்னு இ.பி.எஸ். மகன் நியமித்த ஒரு ஏஜென்ஸி ஆய்வுசெய்து ரிப்போர்ட் தந்திருக்கு. அந்த ரிப்போர்ட் அடிப் படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்றுபேரை செலக்ட் செய்து பட்டியல் தாங்க என சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே மா.செ.விடம் கேட்டுள்ளார் இ.பி.எஸ். எங்கள் கட்சியில் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என்கிற கணக்கில் இருக்கிறார்கள்.
ஒரு தொகுதிக்கு மா.செ. வேட்பாளராகிவிடுவதால் மற்றொரு தொகுதிக்குத்தான் வேட்பாளர் யாரென செலக்ட் செய்து தரவேண்டிய பொறுப்பு மா.செவிடம் இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு கட்சிக்கு 1 கோடி நிதி? எனக்கு 1 கோடி என சில மா.செ.க்கள் கேட்டு வாங்குகிறார்கள். எம்.பி தேர்தலின்போது சீட் கேட்டவர்களிடம் 2 கோடியை தலைமையில் கட்டச்சொல்லி சீட் தந்தார்கள். எம்.எல்.ஏ தேர்தலிலும் அதையே செய்வார்கள்போல'' என் கிறார்கள்.