திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஜோதிலட்சுமி, தனது குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் தந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அறநிலை யத்துறை அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், “"பெங்களுரூவை சேர்ந்தவர் கிரிஜா. இவரது கணவர் பெங்களுரூவில் மேன் பவர் ஏஜென்ஸி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. மணலூர்பேட்டை சாலையிலுள்ள பிள்ளையார்கோவில் இடத்தை அமைச்சர் எ.வ.வேலு கட்சி நிர்வாகிகள் சிலர் நீண்டகால லீசுக்கு எடுத்தார்கள். அந்த இடத்தின் ஒரு பகுதியை பெங்களுரூவைச் சேர்ந்த கிரிஜாலவக்குமார் என்பவருக்கும் லீஸுக்குத் தரப்பட்டுள்ளது. அந்த விவகாரத்துக்காக ஏ.சி. ஜோதிலட்சுமியைச் சந்திக்கவந்த கிரிஜா அப்படியே அவருடன் நெருக்கமாகிவிட்டார். இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளார்கள், அரசு காரில் பவனிவருகிறார்கள்.. அலுவலகத்தில் வந்து எங்களை இந்த பெண்மணி மிரட்டுகிறார். மேடத்தின் நாற்காலிக்கு அருகிலேயே இவர் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு உத்தரவு போடுகிறார். நான் சொல்வதைத் தான் கேட்கணும்னு சொல்றாங்க. லீஸுக்குத் தரப்பட்ட அந்த இடத்தை அவர் பார்க்கிங் பகுதியாக மாற்றியுள் ளார். அந்த இடத்தை அறநிலையத்துறை ஊழியர் களைச் சென்று சுத்தம் செய்யச்சொன்னார். இப்போது ஏ.சி மேடத்தின் தனி உதவியாளர் அப்படின்னு தனியே ஐ.டி. கார்டு உருவாக்கி மாட்டிக்கிட்டு எல்லோரையும் போய் சந்திக்கிறாங்க. தன்னை அமைச்சர் வேலுவின் ஆதரவாளர் எனச் சொல்லிக்கொண்டு இங்கு அனைவரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்''’என குற்றம்சாட்டினார்கள். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு வகித்தபோது, ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் நிலத்தையும் இந்த கிரிஜாலவக்குமாருக்கு குத்தகைக்குத் தந்துள்ளார். அதுகுறித்தும் சர்ச்சை எழுந்து சிலர் புகார் தந்துள்ளார்கள். மாவட்டத்தி லுள்ள ஒவ்வொரு கோவில் இ.ஓ.க்களை மிரட்டுவது, டெண்டர்களில் கமிஷன் வாங்குவது, உண்டியல் மோசடி என குற்றம்சாட்டுகிறார்கள். ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளாலேயே அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு பதவி உயர்வுகள் நிறுத்திவைக்கப்பட்டன என்கிறார்கள்.
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யிடம் தனது சகோதரிகள், சகோதரன் மீது புகார் தந்துள்ளார் உதவி ஆணையாளர் ஜோதி லட்சுமி. அதில் தன்னை மிரட்டு கிறார்கள், இனி அவர்கள் என்னை பார்க்க வரக்கூடாது, என்மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது எனக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக பிப்ரவரி 19-ஆம் தேதி திருவண்ணாமலை டி.எஸ். பி. அலுவலகத்தில் ஏ.எஸ்.பி சதீஷ் குமார் விசாரணை நடத்தியுள் ளார். அப்போது, ஜோதிலட்சுமி யை வளர்த்தது அவரது சகோதரி தான். ஜோதிலட்சுமி திருமணம் முடிந்து விவாகரத்து பெற்று தனியே வசிக்கிறார், குழந்தைகள் இல்லை. இந்தப் பெண்மணி யாரென தெரியவில்லை. இவ ருடன் சேர்த்துகொண்டு அவரை தவறாக வழிநடத்துகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணைக்குப் பின்னர், "அவர்கள் இரு வரும் ஒரே வீட்டிலிருப்பதை நாங்களோ, நீங்களோ கேள்வி கேட்கமுடியாது. அவரிடம் எதுவும் பிரச்சினை செய்யாதீர்கள்' என அறிவுரை கூறி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் விரக்தியான மனநிலையில் ஜோதிலட்சுமி யின் உடன்பிறந்தவர்கள் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமியிடம் நாம் கேட்டபோது, “"என் மீது சொல்வதெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டு. கோவில் இடம் மைதானமாக இருந்தது, அதனை சீரமைத்து கோவிலுக்கு வருமானம் வருவதுபோல் செய்துள்ளேன். டெண்டரில் கலந்துகொண்டு மூவர் அந்த இடத்தை எடுத்தார்கள், மாதாமாதம் அதற்கு வாடகை தருகிறார்கள்'' என்றவரிடம், உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லையென்றால் நீங்கள் பணியாற்றும் இடத்தில் எல்லாம் எப்படி வந்து அவர் ஒப்பந்தம் எடுக்கிறார்?''’என்றதும், "அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும். என் சகோதரருக்கு 1.5 கோடி பணம் தேவையாக இருந்தது. அதை கிரிஜாவிடம் வாங்கித் தருவதாக கூறியிருந்தேன். இவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவர் தரவில்லை. அதனால் பெரியசாமிதான் என்மீது தவறான தகவல்களைப் பரப்புகிறார். என் குடும்பத்தினர் என்னை வைத்து வாழ்ந்தார்கள். அது தடைப்பட்டதால் என் அலு வலகத்தில் வந்து தகராறு செய்தார்கள், அதனால் தான் அவர்கள் மீது புகார் தந்தேன். கிரிஜா அமைச்ச ருக்கு நெருக்கமானவர், அவரே அடிக்கடி போய் சந்திப்பார். நான் என் வேலையில் சரியாகவே இருக்கிறேன். என் அலுவலகத்தில் அவர் துறை ஊழியர்களிடம் எதுவும் அதிகாரம் செய்ய வில்லை. எதுவாக இருந் தாலும் நான்தான் கேட் பேன்''’என்றார்.
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமி, பதவி உயர்வுபெற்று அதன்மூலமாக திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையாளராக வர ஆளும்கட்சிப் பிரமுகர்கள் சிலர் மூலம் முயற்சித்துள்ளார். இதற்காக சிட்டிங் அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி மீது புகார் கிளப்பிவருகின்றனர்.
"ஜோதிலட்சுமிக்குத் தேவையான உதவிகளை அமைச்சர் எ.வ.வேலுவுடனே உள்ள மற்றொரு ஆளும்கட்சி பிரமுகர்தான் செய்கிறார். ஜோதிலட்சுமி குறித்த குடும்ப பஞ்சாயத்தை அவர்தான் இரண்டு வாரத்துக்கு முன்பு செய்தார். அவரின் உத்தரவுப்படியே காவல்துறையில் புகார் தந்தார்' என்கிறார்கள் ஆளும்கட்சியினரே.
-தமிழ்குரு