கருத்துக்கணிப்புகள், உளவுத்துறை அறிக்கைகள் எல்லாமும் தி.மு.க கூட்டணிக்கு சாதகம் என்றதும் அ.தி.மு.க. தரப்பு கரன்சி ஆயுதத்திற்கு தயாராகிவிட்டது. அதனை இயக்கும் பா.ஜ.க., தன் வழக்கமான ரெய்டு ஆயுதத்தை எடுத்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள் இதனைக் கண்டித்திருக்கிறார்கள். ஆனால், இது திடீர் நடவடிக்கை அல்ல.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தி.மு.க. தலைவருக்கு நெருக்கமானவர்கள் யார், யார்?, தி.மு.க.வின் நிதி யாரிடமெல்லாம் உள்ளது, தேர்தலுக்கு யார் மூலமாக செலவு செய்வார்கள்? என்கிற தகவலை ஐ.பி மூலமாக வாங்கினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதில் முக்கிய பெயராக இருந்தது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. அவரையும், தி.மு.க.வில் உள்ள ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, நேரு உட்பட சில முக்கிய பிரமுகர்களின் முழு ஜாதகத்தை வாங்கியதோடு, அவர்களை கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டார். வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவும் இவர்களை கண்காணிக்க துவங்கியது.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டி யிடும் பா.ஜ.க. வேட்பாளர் தணிகைவேலுக்காக தேர்தல் பணியாற்ற 1000 பேர் கொண்ட கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த பரிவார் அமைப்பின் இரண்டாம்கட்ட தலைகள் களத்தில் உள்ளனர். அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் "வேலுவை முடக்கினால் மட்டுமே நாம் ஜெயிக்க முடியும்' என்றிருந்ததை பா.ஜ.க. தலைமை கவனித்தது. இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், திருவண்ணா மலைக்கு வந்து சென்றார். வேலு உட்பட சிலர் சந்தித்து பேசினார்கள் என்றால்... தொகுதிகளுக்கு தேர்தல் பணம் அனுப்ப திட்டமிடுகிறார்கள், 100 சி இங்கே வந்துள்ளது, கல்லூரியில் உள்ளது என தகவல் வருமானவரித்துறைக்கு செல்கிறது. "ஸ்டாலின் வந்து தங்கும்போது நிர்வாகிகள் பலரும் வருவார்கள், அப்போது டிஸ்போஸ் ஆகும்' என கணக்கிட்டது வருமானவரித்துறை. ரெய்டு குறித்த தகவல் வேலுவுக்கு இரவில் வந்ததும், எதிர்கொள்ளும் மனநிலையுடன் உஷாராகிவிட்டார். அவரது தரப்பினரும் அலர்ட் ஆகிவிட்டனர்.
பிரச்சாரத்திற்காக 24-ஆம் தேதி இரவு திருவண்ணாமலை வந்து வேலுவின், கெஸ்ட்ஹவுஸ்சில் தங்கினார் மு.க.ஸ்டாலின். 25-ஆம் தேதி காலையில் பரப்புரைக்காக ஸ்டாலினின் பிரச்சார வாகனம் புறப்பட்ட தகவல் கண்காணிப்பில் இருந்த ஸ்பை மூலம் கிடைத்ததும், 5 கி.மீ. தொலைவில் ஒரு வனப்பகுதியில் சென்னை பதிவெண் கொண்ட 12 இன்னோவா, 2 டெம்போ ட்ராவலர் வாகனங்களில் காத்திருந்த வருமான வரித் துறையினர் சரியாக 11:05-க்கு கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தனர். அந்த வளாகத்தில் உள்ள கல்லூரிகளின் அலுவலகங்கள், வீடுகள், கெஸ்ட்ஹவுஸ், வாட்டர் பேக்டரி, கிரானைட் பேக்டரி மற்றும் சென்னை வீடு, கரூரில் வேலுக்கு நெருக்கமானவர்களின் தொழில் நிறுவனங்கள் என சுமார் 16 இடங்களில் ரெய்டில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் பரப்புரையில் இருந்த வேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரச்சாரம் செய்துமுடித்த ஸ்டாலினிடம் இந்த தகவல் சொல்லப்பட்டதும், அப்படியா என ஆச்சர்யம் காட்டினார். கெஸ்ட்ஹவுஸில் மதியம் ஓய்வு எடுத்துவிட்டு மாலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பிரச்சாரத்துக்கு செல்வதாக ஸ்டாலினின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டடிருந்தது. ரெய்டு காரணமாக கெஸ்ட்ஹவுசுக்கு ஸ்டாலின் வரமாட்டார் என நினைத்தனர். ஆனால் சரியாக 12:30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட்ஹவுஸுக்கு ஸ்டாலின் வந்ததை பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியாகினர்.
ஸ்டாலினிடம் ஒரு அதிகாரி வந்து "ரெய்டு நடக்குது' என்றதும், ""நீங்க உங்க வேலையைத்தானே பார்க்குறீங்க... பாருங்க'' என்றவர் பொதுச்செயலாளர் துரைமுருகனை அழைத்து செய்தியாளர்களை சந்திக்கச் சொல்லிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டார். வேலு, அவரது குடும்பத்தார், ஊழியர்கள் தவிர மற்ற அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றிய வருமான வரித்துறையினர், எம்.பி. அண்ணாதுரை மட்டும் உடனிருக்க அனுமதித்தனர். வேலு அவரது கார் ஓட்டுநர்கள், ஊழியர்கள், குடும்பத்தினர் என அனைவரின் செல்போனையும் வாங்கிக்கொண்டனர் மேல்அறையில் ஸ்டாலின் ஓய்வு எடுக்க, கீழ் அறையில் வேலுவிடம் விசாரணை நடத்தத் துவங்கினார்கள் அதிகாரிகள்.
ஸ்டாலினின் பிரச்சார டெம்போ, அவர் பயணம் செய்த கார் போன்றவற்றை சோதனையிட அதி காரிகள் முயன்ற னர். ""அவர் தி.மு.க. தலைவர், முதல்வர் வேட்பாளர், எந்த அடிப்படையில் சோதனை செய் றீங்க?'' என கேள்வி எழுப்பினார் வேலு. இந்த தகவல் ஸ்டா லினிடம் கூறிய தும், ""சோதனை செய்துக்கட்டும் விடுங்க'' என்றார். அலசிய அதிகாரி களோ "எதுவுமில்லை' என அங்கிருந்து நகர்ந்தனர். மாலை 4:30 மணிக்கு ஸ்டாலின் புறப்படும்போது, ஸ்டாலினின் லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனை செய்தபின்பே காரில் ஏற்றினர். ""நான் தலைவரை வழியனுப்பி வைக்கவேண்டும்'' என வருமானவரித்துறை அதிகாரிகளிடம் வேலு சொல்ல... "1 மணி நேரத்தில் திரும்பி வந்துடணும்' எனச்சொல்லி அனுப்பினர். அதன்பின் ஸ்டாலின் தங்கியிருந்த அறை உட்பட எல்லா அறைகளையும் மீண்டும் சோதனை செய்தனர். பூட்டியிருந்த சில அலமாரிகளை உடைத்து திறந்தனர்.
ஸ்டாலினை விழுப்புரம் மாவட்ட எல்லையில் வழியனுப்பிவிட்டு 1 மணி நேரத்தில் வீட்டுக்கு திரும்பினார் வேலு. மற்ற இடங்களில் இருந்த அதிகாரிகளும் கல்லூரி வளாகத்துக்கு வருகை தந்தனர். இரவு 7:00 மணிக்கு கல்லூரியின் பிரதான அலுவலகத்துக்கு வேலுவை அழைத்து வந்தனர். கல்லூரி பதிவாளர் சத்தியசீலன் அறை, அக்கவுண்டெண்ட் அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட சில கோப்புகளில் கணக்கு குளறுபடிகள் இருந்தன. அதனை முன்வைத்து வேலுவிடம் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
விசாரணை குறித்து நாம் விசாரித்தபோது, வேலுவிடம் கல்லூரியின் சரஸ்வதியம்மாள் அறக்கட்டளை குறித்து சில கேள்விகளை எழுப்பினார்கள். அதன்பின் அரசியல் பக்கம் திரும்பினார்கள். "நீங்கதான் பல மாவட்டங்களில் போட்டியிடும் உங்க கட்சி வேட்பாளர்களுக்கு கேஷ் சப்ளை செய்றீங்கன்னு தகவல் வந்தது?, ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு, ஓட்டுக்கு எவ்வ ளவு தரப் போறிங்க?, பணம் எங்க வச்சிருக் கேன்னு சொல் லிட்டிங்கன்னா பணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு உங்களை விட்டுடறோம், இல்லைன்னா பல பிரச்சினைகளை நீங்க சந்திக்க வேண்டி வரும்' என்றார்கள். ""வேட்பாளருங்க சொந்தக் காசைத்தான் செலவு செய்யறாங்க, எனக்கே செலவுக்கு பணமில்லை, நான் ஏன் மற்ற வேட்பாளர்களுக்கு செலவுசெய்யப் போறேன்'' என்ற வேலுவின் பதில் அதிகாரிகளை அதிரவைத்தது.
வேலுவின் பெரிய மகன் குமரனிடம், ""உங்க மூலமாதான் பணம் ட்ராவல் ஆகுதுன்னு சொல்றாங்க. யார், யாருக்கு எவ்வளவு தந்தீங்க? கரூரில் உள்ள ஃபைனான்ஸ் மூலமா எத்தனை வேட்பாளருக்கு தந்திருக்கீங்க'' என கேள்வி எழுப்பினர். வேலுவின் இளைய மகனும் தி.மு.க. மருத்துவரணி மாநில துணைத் தலைவருமான கம்பனிடமும், ""எங்கெங்கேயிருந்து டொனேஷன் வந்தது?'' என கேள்வி எழுப்பினர்.
பதிவாளர் சத்திய சீலன் மற்றும் வேறு சில ஊழியர்களை அதிகாரிகள் தாக்க முயற்சிக்க, அவர்கள் பயந்துவிட்டனர். இந்த தகவல் வேலுவுக்கு சென்றதும், ""லீகலா நீங்க நடவடிக்கை எடுத்துக்குங்க, அடிக்க முயற்சி செய்யறது சரியில்லை'' எனச்சொல்ல... அதன்பின் மிரட்டல் பாணியில் விசாரணை நடந்துள்ளது. இரவு 11:00 மணியளவில் சென்னையிலிருந்து தி.மு.க. சட்டத்துறை ஆலோசகர் வழக்கறிஞர் விடுதலை வந்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் பேச முயன்றபோது, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். விடியற்காலை 2:00 மணியளவில் ஒரு பேட்ச் அதிகாரிகள் ஓய்வெடுக்க ஹோட்ட லுக்குச் சென்றுவிட்டனர்.
சில சீனியர் அதிகாரிகள் வேலு, அவரது மகன்களிடம் தனித்தனியாக பேசி "பணம் கைப்பற்றியிருக்குன்னு கையெழுத்து மட்டும் போடுங்க, எந்தப் பிரச்சினையும் இல்லாம பார்த்துக்கலாம்' என கட்டாயப்படுத்தியவர்கள், ஒருகட்டத்தில் மிரட்டத் துவங்கியுள்ளார்கள்.
"டெல்லியைப் பகைச்சிக்காதிங்க, அவுங்களோட உறவு வச்சிக்குங்க' என நேரடி யாகவே கூறியுள்ளனர். 26-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு மீண்டும் விசாரணையைத் துவங்கினர். கையெழுத்துப் போடமுடியாது என அவர்கள் மறுத்ததால்... மாலை 4:00 மணிக்கு மருத்துவக் கல்லூரி கட்டுமானம் தொடர்பான கொடுக்கல்-வாங்கல் முரண்பாடுகள், சொத்து விற்பனை சம்பந்தமான டாகுமெண்ட் விவரங்களை எடுத்துக்கொண்டு, நோட்டீஸ் அனுப்பும்போது "விசா ரணைக்கு வாங்க' எனச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.
சோதனை குறித்து வரு மானவரித்துறை இதுவரை அதிகார பூர்வமாக எந்தத் தகவலும் தெரி விக்காத நிலையில்... தி.மு.க. மா.செ. வும், வேட்பாளருமான எ.வ.வேலு, ""நான் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டுக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது. இங்கு என்னை எதிர்த்து போட்டியிடுபவர் பா.ஜ.க. வேட்பாளர். அவருக்காக டெல்லி இப்படியொரு ரெய்டை நடத்தியுள்ளது. எங்கள் குடும்பம் அறக்கட்டளை வைத்துள்ளது அது குறித்து கேள்வி எழுப்பியதோடு, ஓட்டுக்கு எவ்வளவு தரப்போகிறீர்கள் என கேள்வி கேட்டார்கள். வருமானவரித்துறை என்பது அம்புதான், அதை ஏவியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள்'' என்றார்.
மூத்த வழக்கறிஞர் விடுதலையிடம் கேட்டபோது, ""தேர்தல் காலகட்டத்தில் இதுபோன்ற ரெய்டுகள் நடத்துவது சட்ட விரோதமானது. வருமானவரித்துறையை ஏவியுள்ளது பற்றி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆடியோவில் பழைய தி.முக. நிர்வாகி ஒருவர் பேசினார், அதனை அடிப்படையாகக் கொண்டு சோதனைக்கு வந்தோம்' என்றார்கள். உரிய ஆதாரம் இல்லாமல், பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியான ஆடியோவை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் நேரத்தில் ரெய்டு செய்வது சட்டவிதிகளுக்கு முரணானது. அந்த ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பியதும், எங்களுக்கு பணம் இருப்பதாக தகவல் என்றார்கள். பணம் கைப்பற்றப்பட்டதாக தவறான தகவலை பரப்பினார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளோம்'' என்றார்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்