"தமிழகத்திலேயே கொரோனா தொற்றுக்கு தேனி மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது, அதுபோல் தமிழகத்தில் வீட்டு சிகிச்சையில் இருப்பவர்களில் தேனி மாவட்டம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. தடுப்பு ஊசியையும் போட வில்லை. அந்த அளவுக்கு கொரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறீர் கள்'' என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் முன்னிலையி லேயே பொது சுகாதார இயக்கு னர் செல்வநாயகம் வெளிப் படையாகவே பேசினார் அப்படியிருந்தும் கொரோனா தடுப்புப் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக் கைத்தான் கடைப்பிடித்து வருகிறார்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரிய குளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்பட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் முகாம்களில் கொரோ னாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 ஆயிரத்து 205 பேர் தொடர்சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
இப்படியிருக்கக்கூடிய மக்களுக்கு மருந்து மாத்திரை களைக் கூட சரிவர வழங்குவது இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் "வீட்டு சிகிச்சையில் இருந்துகொள் கிறோம்' என்று கூறிவிட்டுச் செல்கிறார்கள். அப்படி செல்லக் கூடிய மக்களுக்கு, "உங்கள் பகுதியிலேயே இருக்கக்கூடிய சுகாதார அலுவலர்கள் வந்து மருந்து மாத்திரைகளே கொடுப் பார்கள். நீங்கள் தனிமையில் இருந்துகொள்ளுங்கள்' என்று கூறி அனுப்பிவிடுகிறார்கள். அதன்மூலம் மாவட்டத்தில் 5,600 பேர்வரை வீட்டு சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். அவர் களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்க, அந்தப் பகுதிகளுக்கு சுகாதார அலுவலர்களும் எட்டிப் பார்க்கவில்லை.
ஆய்வுக்கூட்டம் நடத்த வந்த மா.சுப்பிரமணியத்திடமே இதை மறைத்துவிட்டனர். ஆனால், பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் வெளிப்படையாக சுட்டிக்காட்டினார். ஆனால் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., "தடுப்புப் பணியில் அரசு சிறப்பாக செயல்படுகிறது' என்று கூறினார். அவரது பாராட்டால், மா.சு.வும், ஓ.பி.எஸ். முன்னாள் துணை முதல்வர் என்பதை மறந்து, துணை முதல்வர் என்றே பேசினார்.
"முதல்அலை வந்தபோது ஓ.பி. எஸ்.ஸுக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னி (நிதித்துறையில் ஓ.பி.எஸ். இருந்தபோது பத்தாண்டு காலமாக இயக்குனராக இருந்தவர்) மற்றும் ஓ.பி.எஸ். உறவினர்களான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவன், சுகாதார இணை இயக்குனர் செந்தில்குமார். மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியான ராகவன் உள்பட இருந்தனர். தற்பொழுதும் மருத்துவத்துறையில் இதே அதிகாரிகள் தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது கொரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டாமல் அரசுக்கு கெட்டபெயர் வாங்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெயரளவில் செயல் படுவதுபோல இருக் கிறது' என்கிறார்கள் பொதுமக்கள்.
"எனது நண்ப னுடன் நானும் போய் தேனி மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் கொடுத்த போது, எனது நண்பன் சூரிய கிரனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்தனர். அதனடிப்படையில் "நாங்களும் வீட்டில் தனிமைப் படுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம்' என்று சொன்னபோது அங்குள்ள டாக்டர்களும் "நீங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டை தேடி அங்குள்ள சுகாதார அலுவலர்கள் வந்து மருந்து, மாத்திரை கொடுப்பார்கள்' என்று சொன்னார்கள் ஆனால் மூன்றுநாள் ஆகிறது. இன்னும் மருந்து மாத்திரைகளை யாரும் கொண்டு வந்து தரவில்லை. நான் மட்டும் தினசரி தனிமையில் இருக்கக் கூடிய நண்பனுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்துவருகிறேன். அப்படியிருந்தும் மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிக் கொடுக்கலாம் என்று போனால் மருந்துக் கடைக்காரர்கள், "டாக்டர் சிலிப் இல்லாமல் மாத்திரைகள் கொடுக்க முடியாது' என்கிறார்கள். சுகாதார அலுவலர்களும் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதும் இல்லை. இதைப்பற்றி மாவட்ட அளவில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினாலும், எதையும் கண்டுகொள்வதில்லை. இந்தநிலை எங்களுக்கு மட்டுமல்ல, மாவட்டத்தில் வீட்டு சிகிச்சையில் உள்ள பெரும்பாலான மக்களும் இப்படித்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள்'' என்றார் தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த சூரியகிரணின் நண்பரான யோகேஷ்.
இது சம்பந்தமாக தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கோம்பை, ஆண்டிபட்டி, கம்பம் உள்பட சில பகுதிகளில் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனாத் தொற்று நோயாளிகள் பலரிடம் செல்மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது... "வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு நாலைந்து நாட்களாக இருந்துவருகிறோம். ஆனால் எங்கள் பகுதிகளில் இருந்து எந்த ஒரு சுகாதார அலுவலர்களும் வந்து மருந்து, மாத்திரைகள் கொடுக்கவில்லை. மருந்துக் கடைகளிலும் கிடைக்கமாட்டேங்குது அப்படியே கிடைத்தாலும்கூட விலை கூடுதலாக இருப்பதால் அந்த அளவுக்கு பணம் கொடுத்து வாங்க எங்களிடம் வசதியும் இல்லை. அதனால சாப்பாட் டுடன் கசாயத்தை மட்டும் குடித்துக் கொண்டு தனிமையில் இருந்துவருகிறோம். பயத்தில் வாழ்கிறோம். தமிழக முதல்வர் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இரவு-பகல் பாராமல் உழைத்து வருகிறார். அந்த அளவுக்கு இங்குள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுதான் வேத னையாக இருக்கிறது'' என்று கூறினார்கள்
இந்தக் குற்றச்சாட்டுகளை பற்றி மாவட்ட கலெக்டர் கிருஷ்ண உன்னியிடம் பலமுறை செல் மூலம் தொடர்புகொண் டும்கூட லைனில் பிடிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதார அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது... "கொரோனா தடுப்புக்கான மருந்து, மாத்திரைகள் தீர்ந்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அதிகாரிகள் அதை வாங்கிக் கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. கேட்டால், "எழுதி அனுப்பியிருக்கிறோம் இன்னும் மருந்து, மாத்திரைகள் வரவில்லை' என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார்கள். அதனாலதான் வீட்டுச் சிகிச்சையில் இருக்கக்கூடிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்க முடியவில்லை. அதுபோல் மருத்துவமனைகளிலும் தடுப்பு முகாம்களில் இருக்கக்கூடிய மக்களுக்கும் சரிவர மருந்து, மாத்திரைகள் இல்லாமல் தவித்துவருகிறார்கள் தற்போது கொரோனா மூலம் தினசரி 20 பேர்வரை இறந்துபோகிறார்கள். இந்தநிலை தொடர்ந்து நீடித்தால் மேலும் உயிர்ப்பலிகள் அதிகமாகும் அதன் மூலம் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த இங்குள்ள ஓ.பி.எஸ்.சுக்கு விசுவாசமான மாவட்ட அதிகாரிகள் துணைபோகிறார்கள்.
அப்படிப்பட்ட அதிகாரிகளை உடனடியாக மாற்றவேண்டும். தற்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமாரை மாற்றியிருக்கிறார்கள். அதுபோல் மேலும் உள்ள புல்லுருவிகள் மீது முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க முடியும்'' என்று கூறினார்
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கவும் தனிமையில் வீட்டு சிகிச்சையில் இருக்கக்கூடிய மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்கவும், அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?