திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு நடத்திய பிரமாண்டமான மாநாட்டுக்கு நிகராக குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது மக்கள் அதிகாரம் அமைப்பு.
காவல்துறையின் முட்டுக்கட்டையை நீதி மன்றத்தின் துணையோடு அகற்றியே இந்த மாநாடு நடைபெற்றது. சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய பெண்கள் மீது போலீஸ் தாக்குதலை கண்டித்து உழவர் சந்தை திடலில் தொடர் போராட்டம் நடைபெறுவதை காரணமாக காட்டித் தான் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற அனுமதியுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் கட்டுப்பாட்டுடன் இந்த மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. போராடிய பெண்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினருமாக இறுதிவரை கலையாமல் நடந்து முடிந்த மாநாடு அரசியல் கட்சியினருக்கே ஆச்சரியத்தை வர வழைத்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, ""2003-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது. இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 15ஆவது பிரிவுகளை அப்பட்டமாக மீறுகிறது. அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள் 5, 11, 14, 15, 17, 19, 21, ஆகிய வற்றின்படி பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் நமது உரிமைகளை உறுதிசெய்துள்ளன. எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு கட்டாயமாக்கப்படுவதை ஏற்க முடியாது. அந்தத் தீர்ப்புகளை மத்திய அரசும் மீறமுடியாது. குடியுரிமை திருத்தச்சட்டத்தின் புதிய விதிகளை பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகள் என்றே சொல்லவேண்டும். சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. ஆகியவை அனைத்து மதத்தினருக்கும் எதிரானது. எனவே இவற்றுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்தார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது, ""விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று வெள்ளை யரிடம் மன்னிப்புக்கேட்ட கூட்டம்தான் இப்போது இந்தியர்களை தீர்மானிக்கப் போகிறோம் என்கிறது'' என்றார். கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலன் பேசும்போது… “ஜெர்மனியில் உரிமைப் போராட்டங்கள் நடந்தபோது அவற்றில் பங்கேற்காமல், சொத்துகளை குவித்துக் கொண்டி ருந்தனர் யூதர்கள். ஆனால், ஹிட்லர் ஆட்சியில் அத்தனை யையும் இழந்தார்கள். இப்போது நாம் போராடாமல் ஒதுங்கியிருந்தால் அந்த நிலைமைதான் நமக்கும் ஏற்படும்'' என்று எச்சரித்தார். காளியப்பன், பாலாஜி ஆகியோர் பேசிய பிறகு தியாகு பேசினார். அப்போது, ""இந்தியாவில் இன் றைக்கு இருக்கிற பொருளாதார நெருக்கடிகள் அம்பானி களையும் அதானிகளையும் பாதிக்காது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் மோடி அரசு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி கொடுக்கிறது'' என்றார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக் கறிஞர் ராஜு பேசும்போது... “""குடியுரிமைச் சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் என்று அறிவிக்க எடப்பாடி அரசுக்கு என்ன தயக்கம்? இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடியப் போகி றது. எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதி வாசி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். போராட்டமே இதற்கு தீர்வு. உச்சநீதிமன்ற நீதிபதியே போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார். இனி இளைஞர்களுக்கு போராட்டமே முழு நேர வேலையாக வேண்டும். எல்லா வேலைகளையும் விட்டு விட்டு போராட வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் பாசிசத்திற்கு எதிராக பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு மிகப்பெரிய மாநாட்டை நடத்தி முடித்த மக்கள் அதிகாரம் (ம.க.இ.க.) அமைப்பில் கடந்த 40 ஆண்டுகள் பணியாற்றிய தோழர்கள் மருதையன், நாதன் ஆகியோர் அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அமைப் புக்குள் விவாதத்தை எழுப்பியுள்ளது. உள்ளும் புறமுமாக போராட்டம்தான்.
-தாவீதுராஜ்