திண்டுக்கல்லுக்கு இரண்டு பெருமை உண்டு. ஒன்று பூட்டு, மற்றது பிரியாணி. மெகா பிராண்டுகளின் வருகை, நவீன மின்னணு லாக்கர் போன்றவற்றால் திண்டுக்கல் பூட்டின் புகழ்வெளிச்சம் தற்சமயம் சற்றே மங்கலடைந்துள்ளது.
திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வருபவர்கள்கூட, சற்றே மெனக்கெட்டு திண்டுக்கல் வந்து பேமஸ் பிரியாணியை ருசித்துவிட்டுத்தான் போவார்கள். அரசியல் வி.ஐ.பி.க்கள்கூட திண்டுக்கல் பக்கம்போனால் பேமஸான திண்டுக்கல் பிரியாணி ஹோட்டல்களுக்கு விசிட்டடிக்காமல் இருக்கமாட்டார்கள். அதனாலேயே பிரபல பிரியாணி ஹோட்டல்களைப் போலவே திண்டுக்கல்லின் மூலைமுடுக்கெல்லாம் சிறிய, நடுத்தர பிரியாணி ஹோட்டல்கள் பெருகியுள்ளன.
பிரியாணி டேஸ்டாக இருக்கவேண்டும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலான கடைகளில் அஜினமோட்டோ கலந்துவிடுகிறார்கள். பெரும்பாலும் ஃபாஸ்ட்புட் கடைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அஜினமோட்டோ, பிரியாணி வரைக்கும் வந்துவிட்டதை நம் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
தரமான, ருசியான பிரியாணிக்கு இரண்டு அம்சம் அவசியம். வெள்ளாட்டுக் கறி, விறகடுப்பு. ஆனால் வெள்ளாடு கிடைக்கவில்லையென்றால் செம்மறியாட்டிலும் பிரியாணி செய்துவிடுகிறார்கள். தவிரவும் ஆட்டிறைச்சி கிலோ ரூ 600 வரை விற்பதால், கணிசமான லாபம் பார்க்கவிரும்புபவர்கள், இளம் கன்றுக்குட்டி (மாட்டுக் கறி) இறைச்சியையும் ஆட்டுக்கறியுடன் கலந்து பிரியாணி தயாரித்துவிடுகிறார்கள். பஸ் ஸ்டாண்டு கிழக்குரத வீதி, மேற்குரத வீதி, நாகல் நகர் உள்பட சில பகுதிகளில் இப்படி கலப்படம் நடப்பதாக முணுமுணுப்புகள் எழுகின்றன.
பிரியாணிப்பிரியரான பவுன், ""தமிழகத்தில பிரியாணிக்கு பேமஸான இடங்கள்ல திண்டுக்கல் முக்கியமானது. அதனால்தான் தெருவுக்குத் தெரு பெட்டிக்கடை திறப்பதுபோல் பிரியாணிக் கடைகள் திறந்துடறாங்க. கால் பிளேட் மட்டன் பிரியாணி ரூ 120-க்கு விற்கிறாங்க. இவ்வளவு விலை தந்து வாங்கினாலும்கூட சில கடைகள்ல ஆட்டுக்கறியோட மாட்டுக்கறியையும் கலந்து, கறி வேகறதுக்காக கெமிக்கல் கலந்து கலப்பட பிரியாணியா விற்கிறாங்க. போன மாசம்கூட பிரபல பிரியாணி ஹோட்டலுக்குப் போய் கால்பிளேட் பிரியாணி ஆர்டர் பண்ணேன். கொஞ்சநேரத்துல கொண்டுவந்து வெச்சாங்க. அதுல வெறும் மூணுபீஸ் மட்டன் துண்டுதான் இருந்துச்சு. அதிலயும் இரண்டுபீஸ் சக்கையா இருந்துச்சு. ஆட்டுக்கறி பீஸ் சக்கையா இருக்காது. மாட்டுக்கறிதான் இப்படி இருக்கும். இதனாலயே கடையில மட்டன் பிரியாணி சாப்பிடற ஆசைபோயிடுச்சு. பிரியாணி ஆசைவந்தா, வீட்டில சமைக்கச்சொல்லி சாப்பிடலாம்கிற முடிவுக்கு வந்துட்டேன்''’என்கிறார் ஏமாற்றமாய்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, ""பொதுவாக மாட்டிறைச்சியால் எந்தத் தீங்கும் இல்லை. அதிக புரதமும், வைட்டமின் ஏ, பி, சி-யும் மாட்டிறைச்சியில் உள்ளது. அதேசமயம் சில சமயங்களில் சரிவர சமைக்கப்படாத மாட்டிறைச்சியால் நாடாப்புழு, ஈகோலி போன்ற பாதிப்புகள் வரலாம். மாட்டிறைச்சியில் இருக்கும் நாடாப்புழுவுக்கு Taenia Saginataஎன பெயர். இதனால் வயிறு தொடர்பான சில ஒவ்வாமைகள் வரலாம். தொடர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்றுநோய் வரலாமென சில ஆய்வுகள் சொல்கின்றன. அதுவும் மிகஉறுதியாகச் சொல்லப்படவில்லை. தவிரவும் மட்டன் பிரியாணி எனச் சொல்லிவிட்டு அதில் மாட்டிறைச்சியைக் கலப்பதென்பது மக்களை ஏமாற்றுவதுதான். நம்பகமான கடைகளில் சாப்பிடுவதன் மூலம் இத்தகைய கலப்பட பிரியாணியிலிருந்து தப்பிக்கலாம்''’என்கிறார்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் நியமன அதிகாரியான டாக்டர் நடராஜனிடம், திண்டுக்கல்லில் பிரியாணியில் நடக்கும் கலப்படம் குறித்துக் கேட்டபோது, “""ஆமாம் எனக்கும் புகார் வந்தது. பிரியாணி ஹோட்டல்களில் சிலர் லாப நோக்கத்தில் பழைய கறிகளைப் பயன்படுத்துவதாகவும், தரம் குறைவான நெய்யைப் பயன்படுத்துவதாகவும், டேஸ்டுக்காக அஜினமோட்டா அதிகளவில் பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. அதனடிப்படையில் திண்டுக்கல் தலப்பாகட்டி, வேணு பிரியாணி ஹோட்டல் உள்ளிட்ட பல ஹோட்டல்களில் ஆய்வுசெய்திருக்கிறோம். இன்னும் பல ஹோட்டல்களில் ஆய்வுசெய்ய இருக்கிறோம்.
ஆனால் ஆட்டுக்கறியில் மாட்டுக்கறி கலப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். இதுபோல சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நடப்பதாகத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். திண்டுக்கல்லில் இதுவரை அதுபோல புகார் இல்லை. விரைவில் அதிரடி ஆய்வு நடத்துவோம். நீங்கள் சொன்னது உண்மையாயிருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.
பசு பால் கறக்கிறதென்றால், அதற்கு நல்ல உணவு கொடுத்து சரியாக கவனித்துக் கொண்டால்தான் நீண்டகால பயன்பெற முடியும். அதைவிட்டு மடியை அறுத்துக் கொண்டுபோய் வைத்துக்கொண்டு நீண்டகால ஆதாயம் பெறமுடியும் என நினைப்பது மூடத்தனம். இதுபோல கலப்படம், அஜினமோட்டோ கெமிக்கல் கலாச்சாரங்கள், பிரியாணிக்கு திண்டுக்கல் பேமஸ் என்னும் பெயரை, முடிவுக்கு கொண்டுவந்துவிடும். இதை கலப்பட வியாபாரிகள் உணர்ந்தால் சரி!
-சக்தி