"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை மையமாக வைத்து, பா.ஜ.க.வுக்கு எதிரான அகில இந்திய பெண் ஆளுமைகளை தி.மு.க. சென்னையில் திரட்டப் போகுது.''”

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின் போட்டுக் கொடுத்த ரூட்டில் தி.மு.க. மகளிரணி பரபரப்பாக இயங்க ஆரம்பிச்சதை, டெல்லியே கூர்ந்து கவனிக்கிதாம்.''”

rr

"உண்மைதாங்க தலைவரே, கலைஞர் நூற்றாண்டையொட்டி, தி.மு.க.வில் இருக்கும் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் கட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், கட்சித் தலைமையால் முடுக்கிவிடப்பட்டிருக்கு. அந்த வகையில், அகில இந்திய பெண் ஆளுமை களை அழைத்து தி.மு.க. மகளிரணி மாநாட்டை நடத்தும் பொறுப்பை, கனிமொழி எம்.பி.யிடம் ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். அதன்படி, அக்டோபர் 14ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய். எம்.சி. மைதானத்தில் மகளிரணி மாநாட்டை தி.மு.க. மகளிரணி நடத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட் டணியில் உள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருக்கிறார். அவர் மூலமாகவே காங்கிர ஸின் இளம் நட்சத்திரமான பிரியங்காவையும் மாநாட்டுக்கு வரும்படி, பிக்ஸ் பண்ணிவிட்டார் கனிமொழி. இது பா.ஜ.க. அணிக்கு எதிராக, ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் போர்க்குரலை எதிரொலிக்கும் மாநாடாக அமையவேண்டும் என்று தி.மு.க. நினைக்கிது. இந்த மாநாட்டுக்காக சென்னை வரும் சோனியாவிடம், நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவும் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம்.''”

Advertisment

"நல்லது. கிருஷ்ணகிரியில் தி.மு.க. இளைஞ ரணி, கலைஞர் பெயரில் நூலகம் ஒன்றைத் திறந்திருக்கிறதே?''”

rr

Advertisment

"மகளிரணிக்கு மாநாட்டுப்பணி என்பது போல், தி.மு.க. இளைஞரணிக்கு கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்கும் பணி, ஸ்டாலினால் கொடுக்கப்பட்டி ருக்கு. இதற்கான பணிகளை இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறார். அந்த வகையில் கிருஷ்ண கிரி தொகுதியில் முதல் நூலகம் அமைக்கபட்டிருக் கிறது. இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்ச ரான ’உணவுத்துறை’ சக்கரபாணி, நூலகம் உருவாக்கும் பணியை இராப்பகலாக அங்கேயே இருந்து கவனித்துக்கொண்டார். கடந்த 25 ஆம் தேதி இந்த நூலகத்தை கிருஷ்ணகிரியில் உதயநிதி கோலாகலமாகத் திறந்து வைத்து, இதில் பேசிய அவர், "இதுவரைக்கும் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு பொற்கிழி வழங்கப்பட்டிருக் கிறது. தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு ஆரவாரம் இருந்ததோ, அதேபோல் இந்த நிகழ்ச்சியில் எங்கும் காணாதது போல் இளைஞர் எழுச்சியைக் காணமுடிகிறது. இதற்கு அமைச்சர் சக்கரபாணியும், கிருஷ்ணகிரி மா.செ.வும்தான் காரணம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த நூலகத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்னு கேட்டுக்கொண்டி ருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு, தன் சுவடுகளை பலவகையிலும் அழுத்தமாகப் பதித்துவருகிறது.''”

"சரிப்பா, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததால் தி.மு.க. கூட்டணியில் உள்ள அதன் தோழமைக் கட்சிகளிடம் உற்சாகம் தெரிகிறதே?''”

"அதற்குக் காரணம் இருக்குங்க தலைவரே, பா.ஜ.க. உறவை முறித்துக்கொண்டிருக்கும் அ.தி. மு.க., ஒரு தனி அணியை அமைக்க இருப்பதால், தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆஃபர் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதைக்காட்டி தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்கலாம் என்று அதன் தோழமைக் கட்சிகள் கருதுகின்றன. பொதுவாக, மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க. குறைந்தபட்சம் 28 முதல் 30 இடங்களில் போட்டியிட நினைக்கிது. அதனால் 10 முதல் 12 இடங்களைத்தான் தோழமைக் கட்சிகளுக்கு அது பகிர்ந்தளிக்கும். இப்போது அ.தி.மு.க.வும் கூட்டணிக்குக் கதவு திறக்கவேண்டிய நிலையில் இருப்பதால், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள், தங்கள் கூடுதல் டிமாண்டை அறிவாலயத் திடம் அழுத்தமாக வைக்கமுடியும் என்று நம்புகின்றன. அதனால் தி.மு.க.வுக்கு தொகுதிப் பகிர்வின்போது அதிக நெருக்கடி ஏற்படலாம்னு தெரியுது.''”

"அதேசமயம் காங்கிரஸ் தரப்பிடம் ஒருவித தவிப்பு தெரிகிறதே.''”

"தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.ம.க., கொ.ம. தே.க. உள்ளிட்ட கட்சிகள் எல்லாமே, ’ நாங்கள் தி.மு.க.வுடன்தான் இருக்கிறோம்; இருப்போம். எங்கள் கூட்டணியை யாரும் உடைத்து விட முடியாது என்றெல்லாம் அழுத்தம் திருத்தமாக சொன்னாலும், இவற்றில் ஒரு சில கட்சிகளின் திட்டம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்குப் போனால், தி.மு.க. தருவதை விட அதிக சீட்டை வாங்கலாம் என்று அவை தாயம் உருட்டிக்கொண்டு இருக்கின்றன. இவைகளுக்கு இடையில், காங்கிரஸ் தரப்பும் மட்டும் கொஞ்சம் பதட்டத்தில் இருக்கிறது. காரணம், கடந்த முறை தி.மு.க. அணியில் அதிக தொகுதிகளில் போட்டி யிட்டது காங்கிரஸ். அதற்கு தமிழகத்தில் 9 இடங் களையும் புதுச்சேரியில் உள்ள 1 இடத்தையும் தி.மு.க. அப்போது ஒதுக்கியது. இப்போதும் 10-க்கும் குறையாத இடங்களை மீண்டும் பெற்றுவிட இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் துடிக்கின்றனர். ஆனால், தி.மு.க.வோ இதுவரை அதற்குப் பிடிகொடுக் காமல் இருந்து வருகிறது. அதே நேரம், நேரடியாக சோனியா காந்தியிடமே தொகுதிப் பங்கீட்டைப் பேசி முடித்துக்கொள்ளும் திட்டத்திலும் தி.மு.க. இருப்பதால், நாம் நினைத்த மாதிரி தி.மு.க.விடம் பேரம் பேச முடியுமா? என்ற குழப்பத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பரிதவித்து வருகிறார்கள்.''”

rr

"கொடநாடு விவகாரம் புதுப் புது ரூட்டில் போகுதே?''”

"கொடநாடு விவகாரத்தில் தன்னை இணைத்துப் பேசக்கூடாது என்று அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிய எடப்பாடி, அடுத்ததாக டிரைவர் கனகராஜின் அண்ணனான தனபாலும் இது குறித்துப் பேசக் கூடாது என்று ஸ்டே வாங்கி, அவரது வாய்க்கு பூட்டு போட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையே கொடநாடு விவகாரத்தை விசாரித்துவந்த சி.பி.சி.ஐ.டி. டீம், எடப்பாடி பற்றி தனபால் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்ற கோணத்தில் அவரைத் தீர விசாரித்தது. அப்போது தனபால், கொடநாடு க்ரைம் லிங்க்கில் இருப்பவர்கள் என்று 50-க்கும் மேற்பட்ட நபர்கள் குறித்துக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், ’நான் அப்போது அங்கே இருந்தேன். இங்கே சென்றிருந் தேன்’ என்று நழுவவே முயன்றனர். எனினும் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.மாதவன், ஏ.டி.எஸ்.பி. முருகவேல் உள்ளிட்ட அதிகாரிகள், தனபால் சொன்னதை எல்லாம் அவரை அழைத்தே கிராஸ் செக் செய்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் எடப்பாடித் தரப்பு வெகு ஜாக்கிரதையாகத் தனது அடிகளை எடுத்து வைத்தாலும், விவகாரம் இன்னும் சூடாகவே இருக்கிறது.''”

"’டான்சி நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக் கூடங் களுக்குத் தேவையான எழுது பலகை, சாக்பீஸ், பென்சில், ஸ்கெட்ச், வரைபடம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்குவதற்கான காண்ட்ராக்டை தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்திடம் பள்ளிக் கல்வித்துறை கொடுத்தது. இதன் மதிப்பு 6 கோடி ரூபாய். அதன்படி அனைத்து உப கரணங்களையும் கொள்முதல் செய்தது டான்சி. அவை, தனித்தனியாக பேக்கிங் செய்யப் பட்டன. இதனை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கும் போக்குவரத்து காண்ட்ராக்டை சென்னையைச் சேர்ந்த ஏ.வி.ஏ. கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்திடம், டான்சியின் பர்ச்சேஸ் மேலாளரான அருண் ஒப்படைத்தார். இந்த நிறு வனத்தை தேர்வு செய்தபோது, ’அது ஒரு கட்டு மான நிறுவனமாச்சே! அதனிடம் ட்ரான்ஸ் போர்ட்டுக்கான காண்ட்ராக்ட்டை தரலாமா?’ என்ற சர்ச்சை எழுந்தது. இருந்தும், டான்சியின் நிர்வாக இயக்குநரான ஸ்வர்ணா ஐ.ஏ.எஸ்.சுக்கு பர்ச்சேஸ் மேனேஜர் நட்பாக இருப்பதால், அது கண்டுகொள் ளப்படவில்லை. ஆனால் இப்போது என்னவென் றால், இந்தப் பொருட்கள் பல இடங்களுக்கும் இன்னும் சரியாகப் போய்ச் சேரவில்லை.''”

"’எதனால் இந்தப் பிரச்சினை?''”

"புதுக்கோட்டை மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 450 பார்சல் பள்ளிக்கூட உபகரணங்களை லாரியில் ஏற்றிச் சென்று, முறைப்படி சேர்க்கிறோம் என்ற ஏ.வி.ஏ. நிறுவனம், அதன்படி செய்யாமல், ரயிலில் இந்த பார்சல்களை ஏற்றி இருக்கிறது. அதிலும் அதை புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லாமல் திருச்சி ரயில்வே நிலையத்திலேயே அத்தனை பார்சல் பண்டல்களையும் இறக்கி வைத்துவிட்டார் கள். கடந்த 15 நாட்களாக அந்த உபகரண பார்சல் கள், அங்கேயே கேட்பாரற்றுக் கிடந்ததாம். மழை யிலும் வெயிலிலும் கிடந்ததால் பெரும்பாலான பார்சல்கள் கிழிந்து விட் டன. இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் பள் ளிக் கல்வித்துறை அதிகாரி களுக்குத் தகவல் கொடுத் தும் அவர்கள் அலட் சியமாக இருந்துள்ளனர். பலமுறை நினைவுபடுத் திய பிறகே, தற்போது டான்சி அதிகாரிகள், திருச்சி ஜங்சனுக்கு விரைந்து போய், அந்தப் பார்சல்களை மீட்டிருக் கிறார்கள். அவை உரிய இடத்துக்குப் போனாலும் பாதி டேமேஜ் கண்டிஷ னில்தான் இருக்கும் என்கிறார்கள், பார் சல்களைப் பார்த்த ரயில்வே அதிகாரிகள்.''”

"தேசிய குழந்தைகள் நல ஆணையம் தொடர்பான சர்ச்சை ஒன்றும் பரபரப்பாக சிறகடிக்கிதே?''”

"தேசிய குழந்தைகள் நல ஆணையத்தைச் சேர்ந்த ஆர்.ஜி.ஆனந்த், சமீபத்தில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் தமிழகத்தில் இருக்கும் வட இந்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலருடனும் அவர் நெருக்கமான தொடர்பை வைத்துக்கொண்டு அவர்களை அடிக்கடி சந்தித்து காரியம் சாதித்து வருகிறாராம். கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இவர் நெருங்கிய நண்பராம். அதனால் சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பங்களில் குழந்தைகள் திருமணம் நடந்ததாகக் கிளம்பிய விவகாரத்தின் போது, கவர்னர் ஆர்.என்.ரவி சொன்ன புகாரை அப்படியே எதிரொலித்து அவர் மீதான நட்பைக் காட்டிக்கொண்டார் ஆனந்த். இவர் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்சினைகளை விசா ரிக்கப்போகும் இடங்களில், குற்றம் சுமத்தப்பட்ட வர்களிடம் ’கட்டிங்’ வாங்குகிறார் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்ததால்தான், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். இந்தச் சூழலில் கடந்தவாரம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்ற அவருக்கு, அமைச்சர்களுக்குக் கொடுக்கப்படுவதை விடவும் பலத்த பாதுகாப்பும் தடபுடலான வரவேற்பும் தரப்பட, அது இப்போது சர்ச்சையை எழுப்பி வருகிறது.''”

"சென்னைவாசிகள் சமீபகாலமாக பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வருகிறார்களே?''”

’"சென்னையைப் பொறுத்தவரை, பரவலாக நடக்கும் சாலைப்பணி கள், கழிவுநீர் கால்வாய் பணிகள், கட்டுமான நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் போன்றவற்றால் மாநகரப் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது போதாதென்று கழிவு நீர் கால்வாய்களுக்குத் தோண்டிய பள்ளங்களில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிவிட்டன. இதனால், டெங்கு, மலேரியாவை போன்ற நோய்கள் சென்னை வாசிகளை அதிகம் மிரட்டி வருகின் றன. இதில் கட்டுமான நிறுவனங்களால் வர வழைக்கப்படும் ராட்சத ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் சாலைகளிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால் டிராபிக் ஜாமும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலவரத்தால் அன்றாடம் அலுவலகம் சென்றுவருகிறவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இப்படி பலவகையிலும் தவிக்கும் சென்னைவாசிகளின் கோபம் அரசின் பக்கம் திரும்பிக்கொண்டு இருக்கிறது. எனவே, சென்னையின் நிலவரத்தை முதல்வர் சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள், தலைநகரவாசிகள்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் பிரபல மணல் புள்ளிகளைக் குறிவைத்து ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், புதுக்கோட்டை ரத்தினம் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் சில தகவல்களை கண்டு பிடித்தனர். அதாவது பா.ஜ.க. நிர்வாகியான கேசவவிநாயகத்திடம் உதவியாளராக வேலை பார்க்கும் ஜோதி என்பவர் மூலம், அண்மையில் 5 கோடியும் மாதந்தோறும் 50 லட்சம் வீதமும் கமிஷன் தொகை சென்றது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த ஜோதி வீட்டை அவர்கள் நெருங்கிய போது, அந்தக் கமிஷன் தொகை, கேசவ விநாயகத்துக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் சென்றதை உறுதி செய்துகொண்டார்களாம். இந்த விவகாரம் ஒன்றிய அமைச்சரான நிர்மலா சீதாராமன் கவனத்துக்குப் போக அவர், அண்ணா மலைக்கு விதவிதமாக அர்ச்சனை நடத்தினாராம்.''”

___________

இறுதிச்சுற்று

மறைந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன்!

rr

"வேளாண் விஞ்ஞானி' என போற்றப்படும் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் செப்டம்பர் 28-ஆம் தேதி காலமானார். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர், அரிசித் தட்டுப்பாட்டைப் போக்கியவர், சூழலியலின் தந்தை என பல்வேறு பாராட்டுகளுக்குச் சொந்தக்காரரான சுவாமிநாதன் கும்பகோணத்தில் பிறந்தவர். 1972-முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவராக இருந்து இந்திய வேளாண்மைக்கான தனது பங்களிப்பை அளித்தவர். தனது பெயரிலேயே எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றதுடன் மகசசே உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுக் குவித்த இவர் தனது 98-வது வயதில் வயது மூப்பு காரணமாக 28-ந் தேதி வியாழக்கிழமை காலமாகியிருக்கிறார். தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் இது ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.

-மணி