"ஆளும்கட்சியான தி.மு.க.விடம் விலை போய் விட்டார், அவரை மாற்றுங்கள்'' என மேளதாளத்துடன் சென்று கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைக்க... "அப்படி சொல்றவங்களே தி.மு.க. விசுவாசிகள்தான்' எனப் பந்தை திருப்பியடிக்க, கலகலத்துக் கொண்டிருக்கிறது திருவண்ணா மலை அ.தி.மு.க.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செய லாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன். அவர்மீது கீழ்பென்னாத்தூர் ஒன்றிய முன்னாள் ஒ.செ. தொப்பளான் உட்பட சில நிர்வாகிகள் மேளதாளத்துடன் சென்று இ.பி.எஸ்ஸை சந்தித்து புகார் கடிதம் தந்துள்ளனர். அந்த கடிதத்தில், அரசியலில் ஒதுங்கியிருந்த ராமச்சந்திரன், அம்மா (ஜெ.) இறப்புக்கு பிறகு ஓ.பி.எஸ். அணியில் தன்னை இணைத் துக்கொண்டவர்.
திருவண்ணா மலைக்கு எடப்பாடி வந்தால் டெட்பாடி யாகத்தான் போவார் எனக் கூட்டம் போட்டு பேசியவர். பின்னர் இ.பி.எஸ். தலை மையை ஏற்றுக் கொண்டு மா.செ. பதவி வாங்கினார். அப்படி வாங்கியவர், ஓ.பி.எஸ். அணியில் இருந்துவிட்டு இ.பி.எஸ் அணிக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணனுக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி, முன்னான் எம்.எல்.ஏ. சுரேஷ் குமாருக்கு மாவட்ட பொருளாளர் பதவி, முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதனுக்கு மாவட்ட துணைச்செயலாளர் பதவி என ஓ.பி.எஸ். அணியிலிருந்தவர்களுக்கே பதவிகளைத் தந்துள்ளார். ஆனால் இ.பி.எஸ். பின்னால் நின்றவர்களை கட்சியிலிருந்து நீக்குகிறார்.
ஆளும்கட்சியான தி.மு.க. மா.செ. அமைச்சர் வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்.பி. அண்ணாதுரை ஆகியோரோடு தொடர்புவைத்துக்கொண்டு குவாரி, எம்.சாண்ட் தொழில் செய்கிறார். இந்த தொடர்பே 2024ல் திருவண்ணா மலை தொகுதியில் நமது வேட்பாளர் கலியபெருமாள் தோற்கக் காரணமானது. அ.தி.மு.க.வில் பொறுப்பிலிருந்த தனது உறவினர்களை தி.மு.க.வுக்கு அனுப்பி, தி.மு.க.வை பலப்படுத்த உதவியுள்ளார் ராமச் சந்திரன்.
கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள காட்டுராஜா போன்ற ரவுடிகளை தன்னருகில் வைத்துக்கொண்டு கட்சிக்காரர்களை மிரட்டுகிறார். வன்னியர் என்கிற ஒரே காரணத் துக்காக தொப்பளானை ஒ.செ. பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அ.தி.மு.க.வில் நான் சொல்ற ஆளுக்கு தான் பதவின்னு தி.மு.க. மா.செ. அமைச்சர் வேலு சொல்கிறார். அவரின் ஆலோசனைப்படியே கீழ்பென்னாத்தூரில் இரண்டு ஒ.செ.க்களை ராமச்சந்திரன் நியமித்துள்ளார். இப்போதே கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்பாளர் நான் தான் எனச்சொல்கிறார். அதனால் அவரை மாற்றி கட்சிக்கு விசுவாசமான மா.செ.வை நியமிக்கவேண்டும்' என 5 பக்க புகார் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுவை தொப்பளான் இ.பி.எஸ்.ஸை சந்தித்து தந்தாலும், அந்த கடிதத்தில், திருவண்ணாமலை மேற்கு ஒ.செ. கலியபெருமாள், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மா.செ. சுனில்குமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி மா.செ. டிஸ்கோ.குணசேகரன், மாணவர் அணி மா.செ. சிவகுமார், சிறுபான்மை அணி மா.செ. மாலிக்பாஷா, மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் தலைவர் அகிலா கோவிந்தன் எனப் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் குறித்து மா.செ. ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், "அவர்மீது குற்றம்சாட்டுபவர்களெல்லாம் தெற்கு மா.செ.வாக உள்ள அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் ஆட்கள் தான். இந்த புகார்கள் குறித்து பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.ஸிடமே நேரடியாக விளக்கமளித்துவிட்டார்.
ராமச்சந்திரன் சாதி பார்க்கிறார் என்றால் பிறகு ஏன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த தொப்பளானை பதவியிலிருந்து நீக்குகிறார்? அவர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டதால் நீக்கச்சொல்லி தலைமைக்கு பரிந்துரை செய்தார். மா.செ. மீது சாதி முத்திரை குத்தி ஒதுக்கப் பார்த்து எடுபடாததால் தி.மு.க.வினருடன் தொடர்பில் இருப்பதாகக் கிளப்பிவிடுகிறார்கள். அவர் குவாரி தொழில் செய்கிறார். பொருள் நன்றாக இருப்பதால் இவரிடம் வந்து எடுக்கிறார்கள். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என்ற முறையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத் தூர் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மா.செ.வாக உள்ளார். கீழ்பென்னாத்தூரில் மட்டுமில்லை, திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தல் வேலை நடக்கிறது. அவருக்கு தலைமை எந்த தொகுதியில் சீட் தந்தாலும் போட்டியிடத் தயாராகவுள்ளார்'' என்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டிகள் அதிகளவில் உருவாகியுள்ளது. இதுபோன்ற கோஷ்டிகளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே கட்டுக்குள் வைத் திருந்தார்கள். இப்போது கட்சிக்குள் கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அணி, தங்கமணி அணி, டெல்டாவில் விஜயபாஸ்கர் அணி, வடக்கு மண்டலத்தில் கே.பி.முனுசாமி அணி, சி.வி.சண்முகம் அணி, தெற்கே உதயகுமார் அணி எனத் தனித்தனி அணியாகவுள்ளார்கள். இவர்களை மீறி அந்தந்த மாவட்டத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடிவதில்லை. இதில் பல மா.செ.க்கள் ஆளும்கட்சியான தி.மு.க. அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்கிற புகார்கள் உள்ளன. அதன்மீது நடவடிக்கை எடுக்கமுடியாத அளவுக்கே இ.பி.எஸ்ஸின் அதிகாரம் உள்ளது. கோஷ்டி தலைவர்கள் இ.பி.எஸ்.ஸை மிரட்டுவதால் மாவட்ட அளவில் வலிமை பெற்றுள்ள கோஷ்டி பூசல்களை ஒழிக்கமுடியாமல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார் எனப் புலம்புகிறார்கள் மூத்த கட்சியினர்.