குமரி மாவட்டம் என்றாலே ஆன்மிகம் தொடர்பான சர்ச்சைக்கு பஞ்சமில்லாததாக இருக்கும். இப்படியான சூழலில், நாகர்கோவில் பகுதியிலுள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் தி.மு.க. கொடியில் சூரனை வடிவமைத்து சம்ஹாரம் செய்துள்ள நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!

d

தீபாவளிப் பண்டிகை முடிந்த 6வது நாள், முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இதற்காக முருக பக்தர் கள் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி நடந்த சூரசம்ஹார விழாவில், சூரனை முருகக்கடவுள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அலங் கரிக்கப்பட்ட முருகனும், சூரனும் போர்க்களத்தில் மக்கள் வெள்ளத்தில் நேரெதிரே நின்றுகொண்டு ஒருவரோடொருவர் போரிடுவது போல் காட்சியளித்த நிலையில், இறுதியில் முருகன் சூரனை வதம் செய்வார்.

இந்த நிகழ்ச்சி தமிழகமெங்கும் அனைத்து முருகன் கோவிலிலும் நடந்தது. இதில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகன், தி.மு.க. கொடியின் கருப்பு சிவப்பு நிறத்திலான துணியால் அலங்கரிக்கப்பட்ட சூரனை வதம் செய்வது போன்ற நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலை யில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா உட்பட அ.தி.மு.க.வினர், முருகனால் வதம் செய்யப்பட்ட அந்த சூரனின் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை, 'தி.மு.க. என்ற சூரனை வதம் செய்துவிட்டோம்' என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாஜி அமைச்சர் தி.மு.க. சுரேஷ்ராஜன், ""அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யார் பொறுப்பில் நடந்தது? தி.மு.க. கொடி நிறத்தில் சூரனை எப்படி அலங்கரிப்பார்கள்? இதன் பின்னணியில் இருந்த அந்த மதவாதிகளை வன்மையாகக் கண்டிப்பதுடன், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என எச்சரித்தார். இச்சம்பவம், குமரி தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், கோவிலில் பந்தல் அமைத்தவர்கள்தான் சூரனை அந்த மாதி அலங்கரித்துவிட்டனர் என்று கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அந்த கோவில் இருந்தாலும், திருவிழாவின்போது அக்கோவில் முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினரின் கட்டுப்பாட் டில்தான் செயல்படும் என்கின்றனர் வடிவீஸ்வரம் பகுதிவாசிகள்.

Advertisment