மிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளும் அதன் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியுள்ளன. போட்டியிடும் இடங்களை பகிர்ந்துகொள்ள, மாவட்டச் செயலாளர்களிடமும் பொறுப்பாளர்களிடமும் ஆலோசித்து முடிவு செய்து கொள்ளுங்கள் என தங்களின் தோழமைக் கட்சிகளிடம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தெரிவித்திருந்தன.

pmk

இந்த நிலையில்தான், தனித்துப் போட்டி என அறிவித்திருக்கிறது பா.ம.க. இதுகுறித்து, பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் அய்யா ராமதாசுக்கு திருப்தியைத் தரவில்லை. கூட்டணி தர்மத்தை மதித்து அ.தி.மு.க.வுக்காக என்னதான் உழைத்தாலும், பா.ம.க. ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு விழுகிற அளவுக்கு, அ.தி.மு.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு விழுவதில்லை என்ற வருத்தத்தை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான், 9 மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதும் அந்த மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினார் ராமதாஸ். "வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதால் நமது வாக்குகள் முழுமையாக அ.தி. மு.க.வுக்கு விழுந்தது. ஆனால், அ.தி.மு.க. வாக்கும் கொங்கு வேளாள கவுண் டர் வாக்கும் நமக்கு கிடைக்கவில்லை. தேர்தல் கால ஒத்துழைப்பும் அ.தி. மு.க. நமக்கு தரவில்லை. இதனை எடப்பாடியின் கவனத்துக்கு அப்போதே நாம் கொண்டு சென்றபோதும் அவர் இதில் அக்கறை காட்டவில்லை.

Advertisment

பா.ம.க.வின் வெற்றிக்காக அ.தி.மு.க.வினர் உழைக்கவில்லை. அக்கட்சியில், வலிமையான தலைமையில்லாததால் தலைமையின் உத்தரவுகளை அக்கட்சியினர் பொருட்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதில் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்துப் பேசுங்கள்'' என சொன்னார். அ.தி. மு.க.வுடன் கூட்டணி தேவையில்லை என் பதுபோல அவரது பேச்சு இருந்தது. அதனால் அதற்கு வலு சேர்ப்பது போலவே நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில் பேசிய அனைவருமே, "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு நாள் இடைவெளியி லேயே மனுத் தாக்கலும் துவங்கிவிட்டது. தாக்கல் செய்ய 1 வாரம்தான் அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால அவகாசத்தில் அ.தி.மு.க.வின ருடன் பேசி போட்டியிடும் இடங்களைப் பெறுவது கடினம். தேவையற்ற சர்ச்சைகளும் முரண்களும்தான் அதிகரிக்கும். எப்படி பார்த்தா லும் கூட்டணி தர்மத்தை அ.தி.மு.க. மதிக்கப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தல் என்பதால் வேட்பாளர்களின் செல்வாக்கை வைத்துத்தான் மக்கள் ஓட்டுப்போடப் போகிறார்கள். அதனால் தனித்து போட்டியிட்டு நமக்கான வலிமையை காட்டலாம் என்று வலியுறுத்தினர். அதனடிப் படையில், தனித்துப் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டது '' என்று விவரித்தார்கள்.

rrar

Advertisment

இதுகுறித்து பேசிய பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, ’"அ.தி.மு.க. வுடனான கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்காக மட்டும்தான். அதனால் அ.தி.மு.க.வுக்கும் எங்களுக் கும் எந்த முரண்பாடும் இல்லை. தேர்தலில் போட்டியிடும் இடங்களுக்கான பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் விவாதிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை. அதனால், கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை கருத்தை ஏற்று தனித்துப் போட்டியிடுகிறோம்''’என்கிறார் அழுத்தமாக.

பா.ம.க.வின் முடிவைக் குறித்து பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பா.ம.க.வின் முடிவு அதிர்ச்சிதான். என்ன கட்டாயத்தின் பேரில் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்தார்கள் என புரியவில்லை. எழுதப் படாத ஏதோ ஒரு ஒப்பந்தம் இருக்கலாம். அவர் கள் விலகியதால் அ.தி.மு.க.வுக்கு நட்டமோ இழப்போ எதுவுமில்லை. அ.தி.மு.க.வையோ, அதன் தலைமையையோ பா.ம.க. விமர்சித்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டியதிருக்கும்'' என்கிறார் கோபமாக.

இதற்கிடையே, பா.ம.க.வின் முடிவு குறித்து ஓ.பி.எஸ்., கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களிடம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது பா.ம.க.வின் முடிவுக்கான பின்னணி பற்றி பேசியுள்ளார் எடப்பாடி. சீனியர்களும் அதனை ஆமோதித்திருக்கிறார்கள்.

சீனியர்களோடு தொடர்புடைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்தபோது, "பா.ம.க. எடுத்த முடிவு குறித்து சீனியர்களிடம் விவாதித்த எடப்பாடி, தேர்தல் சமயத்தில் தி.மு.க.வின் சொத் தான முரசொலியின் மூலப்பத்திர விவகாரத்தை விமர்சித்த பா.ம.க.வின் பேச்சை தி.மு.க.வும் ஸ்டாலினும் மறக்காததால், பா.ம.க.வுக்கு செக் வைக்க, வன்னியர் பொதுச்சொத்து நல வாரியத்தின் மீது ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார். அது முழுமையா, முறையாக செயல்பட்டால் வன்னியர் அறக்கட்டளை என்கிற பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களும் வாரியத்தின் கட்டுப் பாட்டுக்கு வந்துவிடும். அந்த வகையில், அவர்கள் (பா.ம.க.) நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு ஆபத்து உண்டு. அதனாலேயே தி.மு.க.வின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப அரசியல் செய்கிறார் ராமதாஸ்'' என சொல்லியிருக்கிறார்.

அதற்கு சீனியர்கள், "தேர்தல் வாக்குறுதிகளில் சில முக்கியமான விசயங்களை தி.மு.க. செய்யவில்லை. இது மக்களிடம் அதிருப்தியாக இருக்கிறது. இப்போ தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வடதமிழகத் தில்தான் இருக்கு. அதிருப்தியை எப்படி சமாளிப்பது என தி.மு.க. யோசித்திருக்கிறது. வாக்குகள் சிதறினால்தான் தி.மு.க. ஜெயிக்கும் என திட்டமிட்டு, கூட்டணியால் அ.தி.மு.க.வுக்கு விழும் ஓட்டுகளை சிதறவைக்க பா.ம.க.வை வெளியேற்ற வைத்திருக்கிறது தி.மு.க.

dd

அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்க தி.மு.க. விடம் சில ரகசிய காய்களை பா.ம.க. நகர்த்தி வைத்திருப்பதால் பா.ம.க.வை வெளியேற்ற அறக்கட்டளை விவகாரமும் தி.மு.க.வுக்கு உதவியிருக்கிறது. இதனை யடுத்தே தி.மு.க.வின் ஸ்கெட்ச்சுக்கேற்ப பா.ம.க. மறைமுகமாக செயல்படுகிறது. அதற்காகத்தான் கூட்டணியை முறித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என தெரிவித்துள்ளனர். "தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. இப்படி முடிவெடுப்பது வாடிக்கைதானே. அவர்களால் நமக்கு நட்டம் இல்லை' என ஆலோசித்திருக்கிறார்கள்.

"ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியதுமே பா.ம.க. இனி நம்மோடு இருக்கப்போவதில்லை என நாங்கள் நினைத் தோம். அதற்கேற்ப சட்டமன்றக் கூட்டத்தில் பா.ம.க. நடந்துகொண்டது. பேரவையில் நாங்கள் எடுக்கும் முடிவுக்கு பா.ம.க. ஒத்துழைப்பதில்லை. மாறாக, முதல்வர் ஸ்டாலினையும் தி.மு.க. ஆட்சியையும் வானளாவ புகழ்ந்து தள்ளினார் ஜி.கே.மணி. பிரச்சினைகளின் தன்மையை பொறுத்து பாராட்டுவதில் தவறில்லை. ஆனால், தி.மு.க.வே வெட்கப்படுகிற அளவுக்கு இருந்தது. மேலும், ஜி.கே.மணியை, தி.மு.க. தலைமை வளைத்து விட்டதுங்கிறது எங்களுக்குத் தெரியும். ஆட்சிக்கு எதிராக எல்லைமீறி பா.ம.க. சென்றால் ஜி.கே.மணியை வைத்தே பா.ம.க.வை உடைக்கும் திட்டமும் தி.மு.க.விடம் இருப்ப தாக எங்கள் தலைவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள். இப்படிப்பட்ட புறக்காரணங்களால்தான் தனித்து போட்டிங்கிற முடிவை எடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலோடு (2019) சட்டமன்றத்தின் 18 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் சேர்ந்தே நடந்ததால் பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் அப்போது கொண்டு வந்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதற்கு முன்னதாக நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததாலும், இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் 9 தொகுதிகள் வட தமிழகத்தில் இருந்ததாலும் ஆட்சிக்கான பெரும் பான்மை பலத்தை பெற்றுவிடுகிற நோக் கத்தில் பா.ம.க.வை, அ.தி.மு.க. கூட்டணிக் குள் கொண்டுவந்தார் எடப்பாடி. அந்த கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தலிலும் நீடித்தது. இந்த நிலையில்தான் தற்போது அ.தி.மு.க.வுடனான கூட்டணி உறவை முறித்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

1991 தேர்தலில் தனித்துப் போட்டி யிட்ட பா.ம.க. அதனையடுத்து நடந்த தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் மாறி, மாறி பயணித்தது. ஒரு கட்டத்தில், தி.மு.க.வுடன் முரண்பட்டிருந்த டாக்டர் ராமதாஸ், 2011 தேர்தல் சமயத்தில் தனது இல்லத் திருமணத்துக்கு கலைஞரை அழைத்தார். கலைஞரும் கலந்துகொள்ள, தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உருவானது. அதேபோல, தற்போது, தனது பேத்தியின் திருமணத்திற்கு மு.க.ஸ்டா லினை அழைத்தார் டாக்டர் ராமதாஸ். ஸ்டாலினும் மூத்த தலைவர்களுடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். டாக்டர் ராமதாசும், அன்புமணியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சியின் பின்னணி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வைத்திருக்கிறது. அது, அடுத்த தேர்தலில் கூட்டணியாக மாறலாம்'' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

தேர்தல் காலங்களில் தனது அரசியல் நிலைப்பாடுகளை அடிக்கடி உருமாற்றிக்கொண்டே வருவதால் மிகக் கடுமையான விமர்சனங்களையும் பொதுவெளியில் எதிர்கொள்கிறது பா.ம.க.