Skip to main content

எம்.பி.தேர்தல் முடிந்ததும் தி.மு.க. ஆட்சி!

"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ஆக இருந்தது. ஜெ. மறைந்தார். அ.தி.மு.க. 135 ஆனது. கலைஞர் மறைந்தார், தி.மு.க. 88 ஆனது. திருப்பரங்குன்றம் போஸ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தகுதியிழப்பு, அ.தி.மு.க. 133 ஆனது. அத்துடன் 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதிஇழப்பு அ.தி.மு.க.வை 115 ஆக்கியது. அதில் சபாநாயகருக்கு ஓட்டுப்போடும் உரிமை இல்லை என்பதால் அ.தி.மு.க.வின் உண்மையான பலம் 114.

stalin


இந்த 114-ல் 11 பேர் ஓ.பி.எஸ். ஆதரவு அணி இணைப்பால் அ.தி.மு.க.விற்கு வந்துள்ளனர். அப்படிப் பார்த்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வின் உண்மையான பலம் 103-தான். அந்த 103-லும் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கிறார்கள். அந்தக் கணக்குப்படி எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 100 ஆகிறது. அதிலும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்றளவும் டி.டி.வி. தினகரன் ஆதரவு பெற்ற அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற சுயேச்சைகள். சட்டசபையில் இரகசிய வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வின் இன்றைய பலம் 97தான் என சொல்கிறார் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ஒருவர். இந்த 97 என்பது கலைஞர் இல்லாத தி.மு.க. கூட்டணியின் 97-க்கு சமமானது. தி.மு.க.வை ஜெ. சொன்னது போல, இப்போது அ.தி.மு.க.வை மைனாரிட்டி ஆட்சி என்கிறது தி.மு.க.
eps-ops
ஓ.பி.எஸ். ஆதரவு 11 எம்.எல்.ஏ.க்களை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது போல, கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவருகிறது. அதில் வாதங்களை எடுத்து வைப்பதற்காக தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராவதை கூட தவிர்த்துவிட்டு டெல்லியில் தங்கியிருக்கிறார்.

அவர் நம்மிடம், ""ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் வழக்கு மிகவும் சீரியஸாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சகட்டு மேனிக்கு ஓ.பி.எஸ். தரப்பிடம் கேள்வி கேட்கிறார்கள். ஓ.பி.எஸ். அணி வாக்களிக்கும் போது அந்த எம்.எல்.ஏ.க்கள் இரட்டை இலை சின்னத்தில் தானே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அப்பொழுதும் கட்சி உடைந்துதான் இருந்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேட்ட கேள்வி ஓ.பி.எஸ். தரப்பை கதிகலங்க வைத்துள்ளது'' என்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பும் ஒரு சில மாதங்களுக்குள் வந்துவிடும். அதில் இறுதி கட்ட வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.

இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதி, கலைஞர், போஸ், பாலகிருஷ்ண ரெட்டியின் தொகுதி என மொத்தம் 21 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக தலைமை செயலாளரின் கடிதத்தை மேற்கோள் காட்டி எடுக்கப்பட்ட முடிவில் இது என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இதில் பாலகிருஷ்ண ரெட்டி தொகுதியான ஓசூர் ஓரளவு பா.ஜ.க. செல்வாக்கு பெற்ற தொகுதி. அதில் ஜெயித்துவிடலாம். முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் பாப்பிரெட்டிபட்டி முருகனின் அரூர். செந்தில்பாலாஜியின் அரவகுறிச்சி ஆகியவைதான் கொங்கு மண்டலத்தின் சாயல் உள்ள தொகுதிகள். அத்துடன் கதிர்காமுவின் பெரியகுளம், தங்க.தமிழ்ச்செல்வனின் ஆண்டிபட்டி, ஓ.பி.எஸ்.சின் ஆளுமையின் கீழ் வரும் தொகுதிகள். மொத்தமுள்ள 21 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும்தான் அ.தி.மு.க. பெயர் சொல்லுமளவுக்கு செல்வாக்கு ttvபெற்றுள்ளது. மீதி 15 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு இல்லை என அ.தி.மு.க. தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள். டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்தவர்களோ எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. 2 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மொத்தத்தில் அதிபட்சமான தொகுதிகளில் தி.மு.க.விற்கும் ஒரு சில தொகுதிகளில் டி.டி.வி. தினகரனும் செல்வாக்கு பெற்றுள்ளதாக கணிக்கப்படுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறுவதில் பத்து தொகுதிகளில் ஜெயித்தால்தான் ஆட்சி என எடப்பாடியே அ.தி.மு.க. கூட்டங்களில் பேசி வருகிறார். இதில் ஒரு சூட்சுமமும் இருக்கிறது. டி.டி.வி. தினகரன் குறைந்தபட்சம் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றால் தினகரனின் ஆதரவை பெற்றுதான் எடப்பாடி ஆட்சி நடத்த வேண்டிவரும். அப்படி ஒரு சூழல் வந்தால் எடப்பாடி பதவி விலகுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதையெல்லாம் தாண்டி தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்றால் தானாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் வருவதால் வழக்கமான இடைத்தேர்தலுக்கான எந்த விசேஷமான வேலையும் ஆளுங்கட்சியால் செய்ய முடியாது என்பதுதான் தி.மு.க.வுக்கு சாதகமான விஷயம். மே மாதத்தில் கூட ஸ்டாலின் முதல்வராகலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இதற்கிடையே ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தால் மொத்தம் 32 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி வருமே அப்பொழுது என்ன நடக்கும் என அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரை கேட்டோம். அ.தி.மு.க.வுக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதான். அப்படி 32 தொகுதிக்கும் தேர்தல் என்றால் கவர்னர் சட்டசபையை கலைப்பார். ஒட்டுமொத்த சட்டமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் வரும் என்கிறார்.

-தாமோதரன் பிரகாஷ்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்