"மூத்த கட்சித் தலைவர், பெரியவர் கலைஞர் நலமுடன் இருக்கிறார்' என்றார் காவேரி மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கலைஞரின் உடல்நிலை குறித்து, கடந்த சில நாட்களாகவே அமைச்சர் ஜெயக்குமாரும், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் முதல்வர் எடப்பாடிக்கு தெரிவித்தபடி இருக்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vp-kalaingar.jpg)
கடந்த 29-ந் தேதி மாலையில் கலைஞரின் இதயத்துடிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தகவல் சேலத்தில் இருந்த எடப்பாடிக்குத் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்வுகளுக்காக சேலம் வந்திருந்த எடப்பாடி, அவற்றை ரத்து செய்துவிட்டு, அவசரம் அவசரமாக ப்ளைட் ஏற கோவைக்கு விரைந்தார்.
சென்னையிலிருந்து 29-ந்தேதி இரவு சேலம் செல்லவிருந்த அதிகாரிகளுக்கு, ""சேலம் பயணத்தை ரத்து செய்யுங்கள். முதல்வர் இன்று நள்ளிரவில் சென்னை திரும்புகிறார்''‘என அறிவுறுத்தப்பட்டதில் அவர்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. மேலும், சென்னை திரும்பும் எடப்பாடி, விமான நிலையத்திலிருந்து காவேரி மருத்துவமனை செல்வதுபோல திட்டமிடப்பட்டதால் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சென்னை விமானநிலையம் சென்று எடப்பாடியுடன் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதற்கேற்ப, ஏர்போர்ட்டிலிருந்து மருத்துவமனைக்கான முதல்வரின் கான்வாய்க்கும் ஏற்பாடு செய்திருந்தது காவல்துறை.
இதற்கிடையே, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் கலைஞரின் இதயத்துடிப்பு சீரானது. அதேசமயம், இரவு 11:45 மணி விமானத்தைப் பிடிப்பதற்காக 10:30-க்கெல்லாம் கோவை ஏர்போர்ட்டை அடைந்திருந்த எடப்பாடிக்கு, கலைஞரின் உடல்நிலை சீராகியிருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 11:20 மணி. விமானத்திற்குள் எடப்பாடி செல்வதற்கு முன்பு, "மருத்துவமனைக்கு நள்ளிரவில் வேண்டாம்; காலையில் வாருங்களேன்' என மு.க.ஸ்டாலின் சொல்வதாக எடப்பாடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றார் எடப்பாடி. இந்த தகவல், ஓ.பி.எஸ். உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
வீடு திரும்பிய பிறகும், அமைச்சர்களை தொடர்புகொண்டு கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தபடி இருந்தார் எடப்பாடி. இதுபற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்ட அமைச்சர்களோடு தொடர்புடையவர்கள், ""கோபாலபுரம் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 4 நாட்களில் 2 முறை அபாயக்கட்டத்தைத் தொட்டு அதனுடன் போராடி முறியடித்து மீண்டிருக்கிறார் கலைஞர். டாக்டர்களின் மருத்துவ முயற்சிகளையும் தாண்டி, கலைஞரின் மனோதிடம்தான் ஒவ்வொரு முறையும் அவரது உடல்நிலையை சீராக்குகிறது. மெடிக்கல் மிராக்கிள் என்பதைவிட, கலைஞர் மிராக்கிள்னுதான் சொல்லணும் என முதல்வரும் அமைச்சர்களும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்''’என்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-stalin.jpg)
இந்த நிலையில், 30-ந்தேதி காலையில் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் சகிதம் மருத்துவமனைக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. மருத்துவமனையின் 4-வது தளத்திலுள்ள 5 அறைகள் தி.மு.க. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தரப்பு, மு.க.அழகிரி தரப்பு, ராஜாத்தியம்மாள் தரப்பு, தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தரப்பு, உடல்நிலையை விசாரிக்க வரும் பிரபலங்களுடனான சந்திப்பு என தனித்தனியாக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நான்காவது தளத்துக்கு எடப்பாடியும் அமைச்சர்களும் வந்ததும் எடப்பாடியையும் ஓ.பி.எஸ்.சையும் ஐ.சி.யு. வார்டுக்கு ஸ்டாலினும் கனிமொழியும் அழைத்துச்சென்றனர். கலைஞரை அவர்கள் பார்த்ததைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களுடன் பேசுவதற்கான அறைக்கு அவர்களை அழைத்து வந்த ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்களிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து, 4 நாட்களும் தொடர்ச்சியாக நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, ""திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கலைஞருக்காக எந்த உதவியை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
இதற்கிடையே, சட்டமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்ததை திடீரென ரத்து செய்திருக்கிறார் குழுவின் சேர்மனும் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான துரைமுருகன். கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரிக்க 29-ந் தேதி மருத்துவமனை வந்திருந்த சபாநாயகரிடம் விவாதித்த பிறகே இந்த முடிவை துரைமுருகன் எடுத்துள்ளதாக கூறுகின்றனர் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள்.
மேலும் விசாரித்தபோது, ""கலைஞருக்குரிய மரியாதையைத் தர அரசு தயாராக இருக்கிறது. தி.மு.க தரப்பிலிருந்து முதல்வருக்கு வந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருக்கின்றன. மெரினா கடற்கரையும் அண்ணா சமாதியும் தமிழக அரசியலின் கவனத்திற்குரிய பகுதி. அது தொடர்பாக அ.தி.மு.க. அரசின் சைடிலிருந்து எந்த பிரச்சனையும் இருக்காது என சொல்லியிருக்கிறார் முதல்வர். இது தொடர்பான பல கோப்புகள் உயரதிகாரிகளால் ஆராயப்பட்டிருக்கின்றன. இவை தொடர்பாக உள்ள வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது''‘என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். மோடி அரசும் கலைஞரின் உடல்நிலை குறித்து கவனம் செலுத்தி வருகிறது. குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நலன் விசாரிக்க வந்த நிலையில், மத்திய அரசிடமும் தி.மு.க. தரப்பில் பேசப்பட்டுள்ளது.
-இரா.இளையசெல்வன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07-31/kalaingar.jpg)