ப்போது வந்தாலும் தேர்தலை சந்திக்கும் விதமாக கட்சிக்குள் ஓட்டை உடைசல்களை அடைக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கடைக்கோடி மாவட்டமான குமரியில் பெரிதாகிவரும் ஓட்டை உடைசலை அடைக்க நடவடிக்கை எடுப்பாரா? என உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள்.

manothangarajகுமரி மேற்கு மா.செ.வும் பத்மனாபபுரம் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் மனோதங்கராஜ். மா.செ. தேர்தலில் சுரேஷ்ராஜன் ஆதரவாளரான பொன் ஜீவராஜை வீழ்த்தியதும், "அழகிரியின் ஆதரவாளர்' என எதிரணியினர் ஸ்டாலினிடம் குற்றம் சாட்டியபோது அவரை மா.செ. ஆக தலைமை அறிவிக்காமல், ஒரு மாதமாக இழுத்தடித்து... பிறகு கலைஞர் மா.பொறுப்பாளராக மனோதங்கராஜை அறிவித்தார். அதன்பிறகு 8 மாதம் கழித்து மா.செ. ஆக கலைஞரே அறிவித்தார்.

"கனிமொழியின் தயவில் எம்.எல்.ஏ. சீட் வாங்கினார்' என கூறிய எதிரணியினரின் உள்ளடி வேலைகளையும் தாண்டி வெற்றி பெற்றார். அதன்பின் ஸ்டாலினிடம் நெருக்கத்தைக் காட்டி தன்னை நிலைநிறுத்தினார்.

""புதிய நிர்வாகிகளைப் போடுவதாகக் கூறி சுரேஷ்ராஜனின் தீவிர ஆதரவாளர்களான மேல்புறம் ஒ.செ. சிற்றாறு ரவிச்சந்திரனுக்கு போட்டியாக சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து வந்த ராஜேஷ்குமாரை மாணவரணி அமைப்பாளராக்கினார்'' என்கிற மா.செ.வின் எதிர்த்தரப்போ மேலும் சில குற்றச்சாட்டுகளை வைக்கிறது.

Advertisment

""திருவட்டார் ஒ.செ. ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டுகளை தலைமையிடம் அடுக்கியதால் மனோதங்கராஜின் நெருங்கிய நண்பரான ஜான்பிரைட்டை திருவட்டார் ஒ.பொறுப்பாளராக்கியது தலைமை. இதேபோல் தே.மு.தி.க.வில் இருந்து வந்த மரிய சிசுகுமார் மற்றும் வர்க்கீஸ்க்கு இளைஞரணி பொறுப்புக்கு தலைமையிடம் சிபாரிசு செய்துள்ளார். இப்படி சீனியர்கள் மற்றும் அனுபவசாலிகளுக்கு எதிராக பலரை கொம்புசீவி விட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த மா.செ.யாக இருந்த டாக்டர் ஆல்பனின் மனைவி டாக்டர் புஷ்பலீலா ஆல்பனுக்கு கலைஞரே விருப்பப்பட்டு 2011-ல் பத்மனாபபுரத்துக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினார். மா.து.செ. ஆக இருந்த புஷ்பலீலா மா.செ.க்கு போட்டியிட ஆசைப்பட உடனே மனோ தங்கராஜும் தன்னுடைய மா.செ. விருப்பத்தைக் கூறி, "நான் மா.செ. ஆனால் எம்.எல். ஏ. சீட்டுக்கு உங்களுக்கு உதவி செய்வேன்'னு கூறி புஷ்ப லீலா ஆல்பனுக்கே ஆப்பு வச்சி தனக்கு சீட் வாங்கி எம்.எல்.ஏ. ஆனார் மனோ'' என்கிறது எதிர்த் தரப்பு.

இந்தநிலையில் மனோ தங்கராஜை மா.செ.பொறுப்பில் இருந்து நீக்கவேண்டுமென்று சில தினங்களுக்கு முன் புஷ்பலீலா ஆல்பன் தலைமையில் ந.செ.க்கள் குழித்துறை ஆசைத்தம்பி, பத்மனாபபுரம் மணி, மா.து.செ. கிறிஸ்டோபர், ஒ.செ.க்கள் முன்சிறை மனோன்மணி, மேல்புறம் சிற்றாறு ரவிசந்திரன், கிள்ளியூர் எக்ஸ் ஒ.செ. பாபு, மேற்கு மா.அவைத் தலைவர் த.பப்புசன், முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ், மாநில சட்டத்துறை து.செ. தினேஷ் உட்பட நிர்வாகிகள் 62 பேர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகனை நேரில் சந்தித்து மனோதங்கராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கையழுத்திட்டு கடிதம் கொடுத்துள்ளனர்.

Advertisment

ஸ்டாலினோ, "டி.ஆர்.பாலு நேரில் வந்து விசாரிப்பார்' என கூறியுள்ளார்.

இதுபற்றி மனோதங்கராஜ் ஆதரவாளர்கள் கூறும்போது.... ""ஒருங்கிணைந்த மா.செ.யாக இருந்த சுரேஷ்ராஜன் மேற்கு மாவட்டத்தை சுடுகாடாக்கி வைத்திருந்த நிலையில்தான் மனோ தங்கராஜ் மேற்கு மா.செ. ஆனார். உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் ஒரு வார்டு கவுன்சிலருக்குக் கூட படாதபாடு படவேண்டியிருக்கும். இப்ப அதை 75 சதவிகிதமாக மீட்டுள்ளார் மனோதங்கராஜ்.

தற்போது நடந்த கூட்டுறவுத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட பனை வெல்லம் கூட்டுறவு சம்மேளனத்தை தி.மு.க.வசம் கொண்டு வந்துள்ளார். கல்குளம்-விளவங்கோடு தாலுகா வீட்டு வசதி சங்கத்தையும், கல்குளம்-விளவங்கோடு கூட்டுறவு சங்கத்தில் மூன்று இயக்குநர்களையும் மற்றும் 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தையும் மேற்கு மாவட்டத்தில் தி.மு.க வென்றிருக்கிறது.

sureshrajanமேற்குத்தொடர்ச்சி மலையைப் பிளந்து கல்குவாரி அதிபர்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். இதை மனோதங்கராஜ், கோர்ட் மூலமும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியும் தடுக்க முயன்றுவருகிறார்.

இதனால் கருங்கல் மற்றும் முருங்காசனம் பொத்தை மலை தப்பித்தது. இதனால் கல்குவாரி அதிபர்களின் கோபத்துக்கு ஆளான மனோதங்க ராஜை மா.செ.யில் இருந்து தூக்க... தலைமையிடம் முறையிடுவதற்காக பல லட்சங்களை மனோவின் எதிரணி யினருக்கு வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் இருக்கும் கிழக்கு மா.செ. சுரேஷ்ராஜன் மேற்கு மாவட்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். சில தினங்களுக்கு முன் சித்திரங்கோட்டில் மனோ தங்கராஜ் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ்ஸும் ராஜேஷ்குமாரும் கலந்துகொண்டனர். ஆனால் குவாரி அதிபர்களுடன் கைகோர்த்திருக்கும் தி.மு.க.வினர் ஒருத்தர்கூட கலந்துகொள்ளவில்லை. இவர்கள் தான் மனோவை மாற்றிவிட்டு தி.மு.க.வை வளர்க்கப் போகிறார்களாம். இதன் உண்மையை தளபதி புரிந்துகொள்வார்'' என்றனர்.

-மணிகண்டன்

படங்கள்: ஸ்டாலின்