லைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தோழர் மு.வீரபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர்தான் தற்போது அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நக்கீரனுக்காக அவரிடம் எடுத்த நேர்காணல்...

Advertisment

கட்சிப் பொறுப்புக்களைத் தாண்டி வெளி அறிமுகமில்லாத நீங்கள் மாநிலச் செயலாளராக வந்தது எப்படி?

ஏறக்குறைய 40 ஆண்டு காலம் கட்சியோடு எனது வாழ்க்கைப் பயணம் உள்ளது. கடந்த முறை மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். ஒருசில கட்சிகளைப்போல் டெல்லியிலிருந்து போஸ்டிங் போடும் கட்சியல்ல கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியில் உழைப்புக்குத்தான் மரியாதையும் உயர்வும் கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்..

மாநிலச் செயலாளர் என்றாலும் சில முக்கிய முடிவு களை உங்களால் சுயமாக எடுக்க முடியாதென்று கூறப்படுகிறதே?

Advertisment

வெளிப்படைத்தன்மையோடு கருத்துக்களை வெளிப்படுத்துகிற ஒரு ஜனநாயக இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சி. எந்த முடிவாக இருந்தாலும் கட்சியின் மாநிலக்குழு, அடுத்து மாநில நிர்வாகக் குழு, அதன்பிறகு செயற்குழு எனக் கூட்டுத் தலைமையின் முடிவுதான் நடைமுறைப்படுத்தப் படும். மாநிலச் செயலாளர் என்பவர், கூட்டுத் தலைமையின் செயல்பாடுகளை நிறைவேற்றுகிற தலைமை நிர்வாகி என்பதுதான்.

கம்யூனிஸ்ட் கட்சியிலும் பதவி ஆசை, கோஷ்டிப்பூசல் இருக்கிறதாமே?

கட்சிப் பொறுப்புகள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. கோஷ்டிப்பூசல் எதுவுமில்லை. கருத்து முரண் என்பது ஜனநாயக இயக்கத்தில் இருக்கத் தான் செய்யும். கட்சி விதிகளைத் தளர்த்தி மீண்டும் ஒருமுறை முத்தரசனுக்கு வாய்ப்பு தரலாமா என்ற கருத்தும், அதேபோல் திருப்பூர் சுப்பராயனுக்கு பொறுப்பு கொடுக்கலாமா என்றும் சில விருப்பங்கள் இருந்தபோதும்,  75 வயதிற்கு பிறகு நிர்வாகப்பொறுப்பில் இருக்கக்கூடாது என்ற கட்சியின் அமைப்பு விதியினை, முத்தரசன், சுப்பராயன் இருவருமே உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டுமென்றதால் என்னை ஏகமனதாக தேர்வு செய்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் பலவீனமாகி வருவதை உணர்கிறீர்களா?

கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இந்தியா முழுக்கவே சாதாரண சிற்றூர்கள் வரை கிளைகள், இடைக்கமிட்டிகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும், கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் அணிகளோடு இணைந்து தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெற வேண்டியதில் மாற்றுக்கருத்தில்லை. முன்னை விட இப்போது உறுதியாக பயணிக்கிறோம்.

Advertisment

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்பதுதான் உங்களது கொள்கைக்குரல். இப்போதும் அந்த கோஷம் நடைமுறையில் உள்ளதா?

உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பத் துறை தொழி லாளர்களுக்கும் இந்த கோஷம் பொருந்தும். உலகில் எங்கெல்லாம் உழைப்புச்சுரண்டல் நடக் கிறதோ அங்கெல்லாம் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷமும் இருக்கும்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர் கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் அமைப்பு ரீதியாக இல்லாதிருப்பதையும், அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதையும் எப்படி பார்க்கிறீர் கள்?

போர்க்காலங்களில் தான் மக்கள் தங்களது உயிர்களைக் காப்பாற்ற புலம்பெயர்வார்கள். ஆனால், இந்தியாவில், வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள், பிழைப்பைத் தேடி புலம்பெயர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். இந்த அவலநிலைக்கு காரணம் மத்திய பா.ஜ.க. அரசுதான். வட மாநி லங்களில், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளைக்கூட செய்து தராமல் துரத்துகிறது. அந்த உழைப்பாளிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் கொடுக்கிறது தமிழ்நாடு. அவர்களின் உழைப்பினால் பல கட்டடங்கள் உருவாகிறது. அவர்களுக்கு முறையான சலுகைகள், சட்டப்பலன்கள் கிடைக்க வேண்டும்.

அதேபோல் அவர்களுக்கான வாக்குரிமை யை ஆய்வுப்பூர்வமாகப் பார்க்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இங்குள்ள அரசியலுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு, இங்குள்ள மக்கள் முருகன், முனியப்பன், கருப்புசாமி என கிராமக் கடவுள்களை வழிபடுகிறார்கள். ஆனால் வட மாநிலத்தவர்களின் நம்பிக்கை வேறு. ஆக, பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர்கள் வேறுபட்டவர்கள். பிரிவினைவாத சக்திகள், திட்டமிட்டே இங்கு குடியேற்றம் செய்யவைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

தி.மு.க.வுடன் அதிக இணக்கம் காட்டுவ தாக விமர்சனங்கள் வருகிறதே?

அரசின் நிர்வாகத் தவறுகளை சுட்டிக் காட்டுவதில், கண்டித்து போராட்டம் நடத்து வதில் எப்போதும் நாங்கள் தயங்கியதில்லை. எங்களுக்கு தி.மு.க. எஜமானர்கள் அல்ல... தோழர் கள் தான். அரசியல் நிலைப்பாடுகளில் தி.மு.க. வோடு மிகவும் நெருக்கமாகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், தி.மு.க., கொள்கை ரீதியாக கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட திராவிட இயக்கம். அதுமட்டுமல்ல, பாசிச பா.ஜ.க.வின் சர்வாதிகார செயல்பாடுகளை எதிர்க்கும் அரசியலில் தி.மு.க. தலைமையேற்று நிற்கிறது. அப்படிப்பட்ட இயக்கத்திற்கு துணை நிற்காமல் இருக்க முடியுமா?