நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர். இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையமருகே சேகரன் நகரில் வீடு உள்ளது. அந்த வீட்டிலிருந்து 28ஆம் தேதி அவரது குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சித்தமல்லிக்கு சென்றுள்ளனர். டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை, தஞ்சாவூர் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 88 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. நகைகள் திருட்டு போனது குறித்து ஏ.கே.எஸ்.விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவந்தனர். 

Advertisment

வீட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜாராம் ஆய்வு செய்தார். தடயவியல் சோதனைகள் செய்யப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர், திருடிய கும்பலை கைது செய்துள்ளனர். 

Advertisment

எப்படி பிடித்தார்கள் என்பது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் மட்டும் ஆளில்லை என்பதை உறுதிசெய்து, வீட்டிற்குள் நுழைந்து திருடியிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்த போது சில சந்தேக நபர்கள் பதிவாகியிருந்தனர். அவர்கள், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள இளங்கோ நகர், நேரு வீதியைச் சேர்ந்த முகமது யூசுப் குடும்பத்தினர் என்பது தெரிய வந்தது. 

அவர்களைத் தேடி தர்மபுரி சென்றால், சென்னைக்கு தப்பிச் சென்றுவிட்டதும், அடுத்த சில நாட்களில் ஹைதராபாத் செல்லவிருந்ததும் தெரிய வந்தது. உடனே சைபர் கிரைம் உதவியுடன் சில தகவல்களை பெற்றுக்கொண்டு உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படை சென்னைக்கு சென்று, 87 வயதான முகமது யூசுப்பின் மனைவி  பாத்திமா ரசூல், மகன்கள் மொய்தீன், சாதிக் பாட்ஷா, ஷாஜகான், மகள் ஆயிஷா பர்வீன் ஆகிய 5 பேரையும் கைது செய்து, தங்க நகைகளையும் மீட்டோம்'' என்றனர்.

Advertisment

thurvaur1

ஒவ்வொரு ஊரிலும், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் பார்த்து திருடுவது வழக்கமாம். முகமது யூசுப்பின் ப்ளான்படிதான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 முதல் கொள்ளைகளில் ஈடுபட்டதில், சிலமுறை சிக்கி சிறைசென்றதும் உண்டாம். 

அதேபோல, கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் தஞ்சாவூர் வந்து ஒரு தனியார் லாட்ஜில் தங்கியவர்கள், 2 குழுவாக பிரிந்து நகருக்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் சேகரன் நகரில் ஏ.கே.எஸ்.விஜயன் வீடு பூட்டியிருந்ததைப் பார்த்துள்ளனர். பெரிய வீடு, நிறைய பொருட்கள் இருக்குமென்பதை உறுதி செய்துகொண்டு இரவில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று, கதவு பூட்டுக்களை உடைத்து, பீரோக்களை       யும் உடைத்து நகைகளை அள்ளிக்கொண்டு அன்றே பஸ் ஏறி தர்மபுரி சென்று விட்டனர். இந்த கும்பல் பகலில் பல தெருக்களிலும் நடமாடிய பதிவுகள்           தான் இவர்களை எளிதாக அடையாளம் காட்டியது.

thurvaur2

தர்மபுரி சென்ற நிலையில், தஞ்சையில் கொள்ளைபோன வீடு தி.மு.க பிரமுகர், முன்னாள் எம்.பி. வீடு என்பதை செய்திகள் மூலம் அறிந்துகொண்டவர்கள் உஷாராகி, நகைகளை வீட்டிலேயே பத்திரமாக வைத்துவிட்டு, உடனே சென்னைக்கு சென்றுவிட்டனர். சில நாட்களில் ஹைதராபாத் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில்தான் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டதும் உடனே தர்மபுரிக்கு அழைத்துவரவும், அனைத்து நகைகளையும் எடுத்துக் கொடுத்துவிட்டனர். இதில் 26 வயதான ஷாஜகான் டிகிரி படித்துவிட்டு 3 முறை யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், வெவ்வேறு ஆட்களை கொள்ளையில் சேர்த்துக்கொண்டால் அவர்களுக்கு பங்கு வைப்பதில் பிரச்சனை வருமென்பதால்தான்       ஒரே குடும்பத்திலுள்ள அம்மா, மகன்கள், மகள் என மொத்த குடும்பமும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறினர். ஒன்றிரண்டு சம்பவங்களில் பிடிபடுகையில், அவர்களது வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்தவுடன், மீண்டும் ஊர் ஊராகக் கொள்ளையடிக்கக் கிளம்பிவிடுவார்களாம். கொள்ளையடித்து முடிந்ததும் ஊருக்கு திரும்பி, பொருட்களை அங்கே வைத்துவிட்டுத் தான், அடுத்த ஊருக்கு போவார்கள். அப்படித்தான் ஹைதராபாத் போகத் திட்டமிட்டு சென்னையில் தங்கியிருந்தபோது பிடிபட்டுள்ளனர். ஒரு நாள் தாமதமாகி யிருந்தால் ஹைதராபாத் சென்றிருப்போமென்று கூறியிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஏ.கே.எஸ்.விஜயன் நம்மிடம், "தஞ்சாவூர் போலீசார் விரைந்து துரிதமாக செயல்பட்டு எனது நகைகளை அப்படியே மீட்டுக் கொடுத்துவிட்டனர். இவ்வளவு விரைவாக செயல்பட்ட தமிழ்நாடு போலீசாருக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உழைத்து சம்பாதித்த பொருள் நம்மைவிட்டுப் போகவில்லை'' என்றார் நெகிழ்ச்சியாக.