நாமக்கல் அருகே, தி.மு.க. பெண் கவுன்சிலர் திடீரென்று கணவர், மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 13வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் தேவிபிரியா. இவருடைய கணவர் அருண்லால், நகர தி.மு.க. பிரதிநிதி. அருண்லால், ராசிபுரம் பெரியகடை வீதியில் சிறிய அளவில் தங்க நகைக்கடை நடத்திவந்தார்.

dd

இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகள் மோனிஷா, ராசிபுரத்தில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தார்.

ஜூலை 12ம் தேதி காலை 7.30 மணி ஆகியும் அருண்லாலின் வீடு திறக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள உறவினர்கள் தேவி பிரியாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். கதவைத் தட்டினார்கள். நீண்ட நேரம் முயற்சித்தும் பலன் இல்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டி ருந்தது. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அருண்லால், கவுன்சிலர் தேவிபிரியா, மகள் மோனிஷா ஆகிய மூன்று பேரும் தூக்கில் தனித்தனியாக சடலமாக தொங்கிக்கொண்டி ருந்தனர்.

ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது நாமக்கல் மாவட்ட தி.மு.க.விலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கான காரணங்கள் குறித்து உறவினர்களிடம் விசாரித்தோம்.

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே அருண்லால் கடனில் இருந்துள்ளார். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கட்சித் தரப்பில் 1000 ரூபாயும், தேவிபிரியா தரப்பில் 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாய் தரப்பட்டது. அதற்காகவும் அருண்லால் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு எப்படியும் சம்பாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் அங்கே, இங்கே கடன் வாங்கி செலவு செய்து வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்ததே வேறு. வார்டுக்கு பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படியே ஒதுக்கினாலும் கவுன்சிலர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. இதனால் கடனை அடைக்க முடியாமல் அருண்லால் தடுமாறிக்கொண்டிருந்தார். கடன்காரர்கள் தரப்பில் நெருக்கடி அதிகரிக்கவே, இப்படியொரு துயரமான முடிவை எடுத்துவிட்டனர். மூத்த மகள் பெங்களூருவில் இருந்ததால் அவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்'' என்கிறார்கள் உறவினர்கள்.

ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment