"அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?' என்று சமீபத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு, ”"மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது'” என்று அழுத்த மாகச் சொல்லியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால், கேபினெட்டில் யாரெல்லாம் இன்-ஆவார்கள், யாரெல்லாம் அவுட்-ஆவார்கள் என்கிற ரேஞ்சில் பந்தயம் களைகட்டிக்கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தில் 28-ந் தேதி நடக்கவிருக்கும் தி.மு.க.வின் பவளவிழா பொதுக் கூட்டம் முடிந்த தும், மேற்கண்ட மாற்றம் இருக்கும் என்றும், 30-ந் தேதி அல்லது 3-ந் தேதி (வளர்பிறை) பதவியேற்பினை வைத்துக் கொள்ளலாமா? என்றும் ஆலோ சிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
அமைச்சரவையை மாற்றி யமைக்க ஆலோசித்துள்ள அதே வேளையில், தி.மு.க.வின் கட்சி கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவரவும் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து, கட்சியின் தேர்தல் ஒருங் கிணைப்புக் குழுவினருடனும் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதுகுறித்து நாம் விசாரித்த போது, "அமைச்சர் உதயநிதியை துணைமுதல்வராக்குவதில் ஏற்பட்ட பின்னடைவில் சில விசயங்கள் இருக்கிறது. அதா வது, உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி வழங்கும் பட்சத்தில் அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் இடம் உதயநிதிக்கு ஒதுக்கப்படவேண்டும் என சில முக்கியஸ்தர்கள் விரும்பு கின்றனர். உதயநிதியும்கூட அதைத் தான் எதிர்பார்க்கிறார்.
ஆனால், தற்போது இரண் டாம் இடத்தில் பேரவையின் அவைமுன்னவரும், தி.மு.க.வின் பொதுச்செய லாளருமான துரைமுருகன் இருந்துவருகிறார். அவை முன்னவரை பின்னுக்குத் தள்ளிவிட்டு உதயநிதியை இரண்டாம் இடத்தில் அமரவைப்பதில் ஸ்டாலினுக்கு கொஞ்சம் நெருடல் இருக்கிறது.
அதேபோல, தி.மு.க.வில் அமைச்சர் பதவியைவிட மா.செ. பதவிதான் பவர்ஃபுல். அந்த வகையில், சீனியர் மா.செ.க்கள் பலரும் அமைச் சர்களாக இருக்கின்றனர். அவர்கள் சிலரிடம், 3-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. அதை மாற்றியமைக்கவும் விரும்புகிறார் உதயநிதி.
அதாவது, தி.மு.க.வில் அமைப்புரீதியாக 72 மாவட் டங்கள் இருக்கின்றன. இதில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என பல மாவட் டங்களில் பிரிக்கப்பட்டி ருக்கின்றன. ஆனால், சீனியர் களிடம் 3-க்கும் மேற்பட்ட தொகுதிகள் இருந்துவருவ தால் அதனையும் 2 சட்டமன்றத் தொகுதிகளாக பிரித்து மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அதில் இளைஞரணி யினரை நியமிக்க நினைக்கிறார் உதயநிதி.
ஆனால், இதிலும் ஸ்டாலினுக்கு சில நெருடல் இருந்துவருகிறது. ஆக, அமைச்ச ரவையில் இரண்டாம் இடம், சீனியர் மா.செ.க்களின் எல்லைகளை சுருக்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சியில் நேர்மறை, எதிர்மறை பிரச்சினைகள் இருந்தன. இதனால் தான் துணைமுதல்வர் பதவி உயர்வு தள்ளிப் போனது. மேற்கண்ட விவகாரங்களைத்தான் ஒருங்கிணைப்புக் குழுவில் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் சில உடன்பாடுகள் எட்டப் பட்டிருக்கிறது. பவளவிழா பொதுக்கூட்டம் முடிந்ததும் பல மாற்றங்கள் நடக்கும். பல விசயங்களுக்கு முற்றுப்புள்ளி விழும்''’என்கிறார்கள் சீனியர் மா.செ.க்கள்.
இந்த நிலையில்தான்... துணைமுதல்வர், கேபினெட் சேஞ்ச் விவகாரங்கள் மத்தி யில் தி.மு.க.வின் மாவட்டப் பிரிவினையும் வேகமெடுத் துள்ளது. குறிப்பாக, தி.மு.க. இளைஞரணியிடம் இந்த வேகம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, "இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என்கிற அளவுகோ லில் கட்சி அமைப்பில் உருவாக்கும் பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் முடிவெடுத்துவிட்டார். அதன்படி மாற்றங் களை விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த மாற்றங்களில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உட னடியாக எல்லை பிரிவினையை சந்திக்கப் போகின்றன. அதற்கேற்ப ஆலோசனை மேலிடத்தில் நடந்துள்ளது. தற்போது, சென்னையில் தி.மு.க.வுக்கு 6 மா.செ.க்கள் இருக்கின்றனர். சென்னை தெற்கு மா.செ.வாக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மா.செ.வாக சேகர்பாபு இருக்கிறார்கள். இவர்களில் மா.சுப்பிரமணியனிடம் 5 சட்டமன்ற தொகுதிகளும், சேகர்பாபுவிடம் 6 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன. அதனை இரண்டு இரண்டாக பிரித்து புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க தலைவர் தீர்மானித்துள்ளார். சில மாவட்ட எல்லைக்கு இடையில் மற்றொரு மாவட்ட எல்லையும் வருவதால் ஏற்படும் குழப்பத்தை தவிர்த்து ஒழுங்குபடுத்தவும் நினைக்கிறார் தலைவர் ஸ்டாலின்.
இத்தகைய பின்னணியில் மாவட்ட பிரிவினை நடக்கும்போது, உதயநிதி கைகாட் டும் நபர்களே அந்த புதிய மா.செ.க்களாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். அதேபோல, ஆர்.டி.சேகர் மா.செ.வாக உள்ள சென்னை வடக்கிலும் மாற்றம் கொண்டுவரவும் ஆலோசிக்கப் பட்டுள்ளது.
மேலும் சென்னை இளைஞரணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மா.செ. பதவி உறுதி. சென்னையில் நடக்கும் மாற்றங்களில் உதயநிதியின் ஆதரவாளர்களே கோலோச்சுவார் கள் என்றாலும், தங்களின் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைச்சர் கள் முயற்சித்துவருகிறார்கள். இதேபோலத்தான் தி.மு.க.வின் மற்ற மாவட்டங்களும் பிரி வினையை சந்திக்கவிருக்கிறது''’என்று சுட்டிகாட்டுகிறார்கள்.
உதயநிதியின் விருப்பத்திற்கேற்ப கட்சி அமைப்பில் மா.செ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தி.மு.க. தலைமை தீர்மானித்திருக்கும் நிலையில்... பவளவிழா பொதுக்கூட்டம் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. "2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் குறையாத இடங்களில் உதயசூரியனை களத்தில் இறக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதால், தேர்தலை மையப்படுத்தியே இந்த மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன' என்கிறார்கள் தி.மு.க. இளைஞரணியினர்.
-சஞ்சய்