சேலத்தில், ஆளுங்கட்சி கவுன்சிலரை தி.மு.க. பிரமுகரே கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற சம்பவத்தில், அமைச்சர் தலையீட்டால் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் ஒன்றரை மாதமாக இழுத்தடித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமி தெருவில் வசிக்கும் ஜெயக்குமார், சேலம் மாநக ராட்சியில் 28வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். முன்னாள் மாநகர செயலாளரான இவர், மத்திய மா.செ. ராஜேந்திரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுக்கு முன்பு கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டார்.
ஜெயக்குமாரின் வீட்டருகே வசித்து வருபவர் கோபிநாத். முன்னாள் மாநகர தி.மு.க. பிரதிநிதி. இவர், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை, குடிபோதையில் கவுன்சிலரின் ஆதரவாளரான கோபி என்பவரை தாக்கினார். தகவலறிந்த ஜெயக்குமார், சம்பவ இடத்திற்குச் சென்று கோபிநாத்தை விலக்கிவிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெயக்குமாரை குத்திக் கொல்ல முயன்றார். கவுன்சிலரின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய இரு மகன்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட கோபிநாத்தின் தாயார், தம்பி, பொதுமக்கள் ஆகியோர் கோபிநாத்திடமிருந்து கத்தியைப் பிடுங்கி, ஜெயக்குமாரை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கவுன்சிலர் ஜெயக்குமார், செவ்வாய் பேட்டை போலீசிலும், கமிஷனரிடமும் புகாரளித்தார். சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி, ஜெயக்குமாரிடம் விசா ரணை நடத்தியபோதும், ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும் இவ்விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லையென்றும், இதன் பின்னணியில் சுற்றுலாத்துறை அமைச்சரான ராஜேந்திரனின் தலையீடு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர் ஜெயக் குமார், "என்னை தாக்கிய கோபிநாத், ஒருகாலத் தில் என்னுடன் நெருக்கமாக இருந்தவர்தான். சேலம் மத்திய மா.செ.வான அமைச்சர் ராஜேந்திரன், என் மீது பொய்ப்புகாரளித்து, கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய வைத்தார். அமைச்சருக்கு பினாமியாக இருக்கும் செவ்வாய் பேட்டை மணி என்கிற வெள்ளிப்பட்டறை மணி தான் எனது வளர்ச்சியைத் தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அது முடியாமல் போனதால் கோபிநாத்தை தூண்டிவிட்டு என்னை கொல்ல முயற்சிக்கிறார். மணிக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திரன் தலையிடுவ தால், காவல்துறையினர் என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
எங்களுடைய துளுவ வேளாளர் சமூகத் திற்குச் சொந்தமாக ஒரு சமுதாயக் கூடத்தில், எவ்வகையிலும் சம்பந்தமில்லாத கோபிநாத்தை, அமைச்சரின் சிபாரிசால் நிரந்தர அறங்காவல ராக நியமித்தது இந்து சமய அறநிலையத்துறை. அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் கோபிநாத் நியமனத்தை ரத்து செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியிலும் கோபிநாத்துக்கு ஆதரவாக வெள்ளிப்பட்டறை மணி செயல்பட் டார். என்னை ஒழித்துவிட்டு கோபிநாத்தை வார்டு செயலாளராக்க மணி முயற்சி செய்கிறார். அவர் மீது எங்களுக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது. செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜனிடம் கேட்டால், அமைச்சர் தலை யீடு இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதுவாக இருந்தாலும் உதவி கமிஷனரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.'' என்றார் ஜெயக்குமார்.
இது ஒருபுறம் இருக்க, தனக்கும், தன் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு அளிக்கும்படியும் ஜெயக்குமார் கேட்டிருந்தார். அதன்மீதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவருடைய நண்பர் வெள்ளிப்பட்டறை மணி ஆகியோரிடம் விளக்கம்பெற அலைபேசிவழி அழைத்தோம். இருவருமே அழைப்பை ஏற்கவில்லை. செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜனிடம் கேட்டபோது, "எதுவாக இருந்தாலும் நேரில் வாங்க. பேசிக்கலாம்'' என்று கூறிவிட்டு பேச்சைத் துண்டித்தார். சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரியிடம் கேட்டபோது, "கவுன்சிலர் ஜெயக்குமார் கூறிய புகாரில் உண்மை எதுவும் இல்லை. சம்பவம் நடந்த நாளில் கோபிநாத் என்பவர் கோபி என்பவரை தாக்கியுள்ளார். அவருடைய புகாருக்கு மட்டும்தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து மீண்டும் கவுன்சிலர் ஜெயக்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, "எனது ஆதரவாளரான கோபியை, கோபிநாத் தாக்கியது வேறு சம்பவம். அதன் தொடர்ச்சியாக என்னைக் கத்தியால் கொல்லப் பாய்ந்தது வேறு சம்பவம். இதற்கெல்லாம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. தனது பினாமியான மணிக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திரன் நேரடியாகக் களமிறங்கியதால், போலீசார் என் புகாரின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுக்கின்றனர். உதவி கமிஷனர்தான் உங்களிடம் பொய் சொல்கிறார்'' என்றார்.
ஆளுங்கட்சி கவுன்சிலர் மீதான தாக்குத லும், அவருடைய புகார் மீது காவல் துறையினரின் பாராமுகமாக இருப்பதும் மக்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மேலும் சரிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் தி.மு.க. மூத்த உடன்பிறப்புகள்.