சங்கரன்கோவில் நகராட்சியின் 30 கவுன்சிலர்களில் 24 பேர் தி.மு.க. சேர்மன் உமாமகேஸ்வரிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என நகராட்சியின் பொறுப்பு கமிஷனரான நாகராஜனிடம் மனு கொடுத்தது அரசியல் வட்டத்தில் தகிப்பைக் கிளப்பியிருக்கிறது.
30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13, தி.மு.க. 9, அதன் கூட்டணியான ம.தி.மு.க. 2, காங் 1, எஸ்.டி.பி.ஐ. 1, சுயேட்சை கவுன்சிலர்கள் 4 என்று தி.மு.க.வின் கவுன்சிலர்கள் பலம் 17 என்ற லெவலில் இருப்பதால், தேர்தலுக்குப் பிந்தைய சேர்மன் தேர்வில் இரு தரப்பு போட்டியாளர்களுக்கும் சமவாக்குகள் கிடைக்க, குலுக்கல் முறையில் தி.மு.க.வின் உமாமகேஸ்வரி சேர்மனாக அறிவிக்கப்பட்டார்.
அவர் தேர்வானதிலிருந்தே விவகாரங்கள் பின்தொடர்ந்திருக்கின்றன.
மொத்த கவுன்சிலர்களின் வார்டுகளில் கட்டமைப்புகள், தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை. தன்னையே வளர்த்துக்கொள்கிறார் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர் கைகோர்த்து 2022-ல் சேர்மன் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆளும் கட்சித்தலைமைப் புள்ளிகளின் ஏற்பாட்டால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒருவழியாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.
13-வது வார்டின் கவுன்சிலரான நாராயணன், “"திரளான மக்கள் வந்துசெல்கிற என்னோட வார்டு பணிகள் பற்றி பலமுறை நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்திருக்கிறேன். நகராட்சி அதிகாரி வர்றாக போறாக. நிலைமையத் தெரிஞ்சும் கண்டுங்காணாமப் போறாக. அம்மன் கோவிலைச் சுற்றி குண்டும்குழியுமான ரோடு. கழிவுநீர் வெளியேற்றப்படாமல் தேங்கிக்கிடந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துது. சீர்பண்ணனும்னு மனு குடுத்தேன். 16 லட்சம் நிதி பாஸ் பண்ணப்பட்டு ஒரு வருஷத்துக்கும் மேலாச்சு. வேலையே நடக்கல. இப்ப மாறிப்போன கமிசனர்ட்ட நா அடிக்கடி வலியுறுத்தியும், நிதியில்ல பண்ட் வரட்டும், வரட்டும்னு ஒரு வருஷத்துக்கும் மேலா சொல்லிக் கழிச்சாங்க. ரோடு வேலை சீரமைப்பிற்கும் அஜண்டா வைச்சோம். அந்தப் பிளான ஸ்கீம் ஒர்க்ல போடுறோம்னு 2 வருஷமா சொல்லிக் கழிச்சிட்டே போயிட்டாங்க. சேர்மன்ட பேசணும்னு நெனைச்சா அந்தம்மா போன எடுக்கவேமாட்டாங்க.
மக்களுக்குப் பதில் சொல்ல முடியல. மனக்கொதிப்புல இருக்காங்க. நிதி வருது. டெண்டர் விடுறாக. அத சேர்மன் தரப்புகளே பினாமியா எடுக்காங்க. ஆனா வேல நடந்ததாவே தெரியல. எந்த ஒரு வேலைன்னாலும் அத தீர்மானமா வைச்சு அவுக பாஸ் பண்ற தோட சரி முடிஞ்சிரும். நகரின் சுகாதாரப் பணியோ பராமரிப்போ எந்தப் பணினாலும் சேர்மன் தரப்புதான் டெண்டர் எடுக்கமுடியும். உதாரணமா 30 வார்டுகள்லயும் உள்ள பைப்லைன், தண்ணீர் வால்வுகள், லீக்கேஜ் போன்ற பராமரிப்பிற்கான 40 லட்சத்திற்கான டெண்டர். அத சேர்மன் தரப்பே பினாமியா எடுத்தாக. இரண்டே லேபர்கள வெச்சு பராமரிப்பு பணிய பண்றாக. எப்டி முறையா வேலைநடக்கும். இதக் கேக்கவேண்டிய அதிகாரிக கேட்குறதில்ல. இதேபோலத்தான் குப்பைகள அள்ளுற டெண்டர் எடுத்தாலும் அதுக்கு முறையான லேபர்களப் போடுற தில்லை. வார்டுகள்ல எந்த ஒரு பணியும் நடக்காம சீர்கெட்டுப் போயிருக்கு. அவுகளுக் குத் தோதான நபர்களுக்கு டெண்டரைக் குடுத்து, மத்த வேலைகள முன் அனுமதிபெற்று செய்றாகன்னு முடிச்சிருவாக. இப்படி டெக்னிக்கா ஒரு பைபாஸ் வேலையைப் பண்றாக''” என்றார் கொதிப்பாக.
8-வது வார்டு கவுன்சிலரான சரவணன், "நாலு வருஷமாச்சு 30 வார்டுகள்லயும் முக்கியமான வேலை, வாறுகால் பணி, ரோடு, சுகாதாரப் பணிகள்னு எதுவுமே நடக்கல. வர்ற நிதிகள் என்னாச்சு? வார்டுகளோட பணிக்கு நிதி ஒதுக்கப்படலையேன்னு கேட்டா பதிலில்லை. ஆனா பழைய நிர்வாகத்தில வாங்குன கடனுக்கு வட்டிதான் கட்டிட்டு வர்றோம்னு பதில்சொல்றாக. பொது நிதியில்தான் ஓடுது. வர்ற தொகைய செட்கள் கட்ட, கடைகள் கட்ட, சின்னச் சின்ன பாலம்னு அவுகளுக்கு வர்ற வருமானத்தைப் பாத்துத்தான் பண்றாக. ஆனா வார்டுகளில எந்த ஒரு வேலயும் நடக்கல.
பேருந்து நிலையம் கட்டிமுடிச்சு 33 கடைகள் கட்டியாச்சு. ஒவ்வொரு கடைக்கும் கணிசமான லட்சங்கள்ல டெபாசிட். அதுலதான் இப்ப வண்டியே உருளுது. டோட்டலா வார்டு பணி முடங்கிப்போன தாலதான் ஒரு வாரத்துல கவுன்சிலைக் கூட்டி மெஜாரிட்டிய நிரூபிக்கணும்னு சேர்மனுக்கு கெடுவச்சி வலியுறுத்தி கமிஷனர்ட்ட மனு குடுத்துருக்கோம்''” அழுத்தமாகச் சொன்னார்.
சேர்மன் உமாமகேஸ்வரியை லைனில் தொடர்புகொண்டோம், “"30 வார்டுகள்லயும் வேலைகள் நடக்கத்தான் செய்கின்றன. அதை அதிகாரிகளும் கவனிக்கத்தான் செய்றாக. எங்க கட்சிக்காரங்களும் அந்தத் தீர்மானத்தை குடுத்திருக்காக. எங்க லைன்ல யாரும் டெண்டர் எடுக்கலை'' என்று சொல்லி லைனைத் துண்டித்த சேர்மன், மறுபடி நமது அழைப்பை ஏற்கவில்லை.
அண்மையில், பொது வாறுகால், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக 8.70 கோடியும், அடுத்து பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு, புனரமைப்புப் பணிகளுக்கு 6 கோடி என்றும் நிதிகள் வந்திருக்கின்றதாம். இவைகளின் பலாபலன்களை எப்படி வைத்துக்கொள்வதென்று மன்ற கவுன்சிலின் மூன்று அதிகாரமிக்க பவர் சென்டர்களுக் கிடையேயான போட்டியின் விளைவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மான வலியுறுத்தல் என்று கிசுகிசுக்கப்படுகின்றது.
-ப.இராம்குமார்