பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் வக்கிரத்தை சாதி சர்ச்சை கிளப்பி திசை திருப்பும் முயற்சிகளின் உச்சமாக, அரசியலில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள அவ்வப்போது உதார்விடும் பா.ஜ.க.வின் சுப்பிரமணியசாமி என்கிற சு.சாமி,’"பத்ம சேஷாத்ரி பள்ளிமீது உள்நோக்கத்துடன் செயல்பட்டால் ஆட்சியை கலைத்துவிடுவேன்'‘என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். கவர்னருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
"சு.சாமி எச்சரிப்பதுபோல தி.மு.க. அரசை கலைத்துவிட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது அவ்வளவு எளிதானதா? சட்டம் என்ன சொல்கிறது?' என்கிற கேள்விகள் அரசியல் களத்தில் விவாதிக்கப்படுகின்றன.
பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் மாநில அரசுகளை அற்ப காரணங்களுக்காக கலைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது மத்திய அரசு. இதற்காக, ஆளுநரிடமிருந்து ஒரு கடிதம் பெறப்படும். அதைத்தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவின்படி, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-யை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர் குடி யரசு தலைவர்கள். இப்படிக் கடிவாளமற்ற குதிரையாக அதிகாரத் திமிருடன் ஓடிக்கொண்டிருந்த மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு முடிவு கட்டி னார் எஸ்.ஆர்.பொம்மை. ஆட்சிக் கலைப்புக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கில்தான், வரலாற்று சிறப்பு மிருந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. கர்நாடகாவில் 1985-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது ஜனதா கட்சி. மூத்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். 1988-ல் அவர் பதவி விலகியதையடுத்து புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.ஆர். பொம்மை. மேலும், ஜனதா கட்சியுடன் லோக் தளம் கட்சி இணைந்த தால் ஜனதா கட்சி, ஜனதாதளமாக உருமாற்றம் பெற்றது. இந்த நிலையில், ஜனதாதளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை தனது அமைச்சரவையில் இணைத்தார் எஸ்.ஆர்.பொம்மை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏ. மோலகேரி என்பவர், ஆளுநர் வெங்கடசுப்பையாவிடம் அவர் அளித்த மனுவில், "பொம்மை அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரது அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்கிறோம்'’என தெரிவித்து 19 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துப் போட்டிருந்தனர். அதனை ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக ஏற்றுக்கொண்டார் ஆளுநர் வெங்கடசுப்பையா.
அதேசமயம், அந்த 19 எம்.எல்.ஏ.க்களும் ”பொம்மை அரசாங்கத்துக்கு கொடுத்துள்ள ஆதரவை நாங்கள் விலக்கிக்கொள்ளவில்லை. கவர்னரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தில் நாங்கள் கையெழுத்தும் போடவில்லை‘’ என்று தெரிவித்தனர். இதனையடுத்து, ஆளுநரை சந்தித்த எஸ்.ஆர். பொம்மை, தனது அரசுக்கான பெரும் பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்திற்கான கடிதத்தை கொடுத்தார். ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பினை பொம்மைக்கு கொடுக்கவில்லை ஆளுநர் வெங்கட சுப்பையா. அதற்கு மாறாக, பொம்மை அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தவும் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பினார். அந்த கோப்பினை மத்திய அமைச்சரவையில் விவாதித்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி.
இதனையடுத்து, பொம்மை அரசை கலைக்க ஜனாதி பதி ஆர்.வெங்கட் ராமனுக்கு பரிந்துரைத்தது ராஜீவ்காந்தியின் அமைச்சரவை. அந்த அறிவுறுத்தலின்படி பொம்மை அரசை கலைத்து கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் வெங்கட்ராமன். கர்நாடகாவில் ஆட்சிக் கலைப்பு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் தார் எஸ்.ஆர்.பொம்மை. அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்கிற சட்டச் சிக்கல்கள் எழுந்ததால், பொம்மை வழக்கை நீதிபதி குல்தீப்சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். அந்த வழக்கு, 1994-வரை இழுத்துக் கொண்டே வந்தது.
இதற்கிடையே, 1988-ல் நாகாலாந்து, 1991-ல் தமிழ்நாடு (தி.மு.க. ஆட்சி) மற்றும் மேகாலயா ஆகிய மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநில ஆட்சிகளையும் கலைத்தது மத்தியில் ஆட்சி அதிகாரத்திலிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசு. இந்த மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இப்படி மனம்போன போக்கில் மாநில அரசுகளை கலைப்பதும் சட்டமன்றத்தை முடக்குவதுமாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசின் எதேச்சதிகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவைகள் அனைத்தை யும் பொம்மை வழக்கோடு இணைத்தது உச்சநீதி மன்றம். இதனையடுத்து, சர்ச்சைக்குரிய 356-வது பிரிவை தீர்க்கமாக ஆராய்ந்தது உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு. அதன்படி, 1994 மார்ச் மாதம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்தது உச்சநீதிமன்றம்.
அந்த தீர்ப்பில், ‘"கர்நாடகாவில் பொம்மை அரசாங்கத்தை கலைத்தது செல்லாது. மாநில அரசுகளை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையானது கிடையாது. அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிராக மாநில அரசு கலைக்கப்பட் டால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. மாநில அரசை கலைக்கும் குடியரசு தலைவரின் முடிவுகள் மீது உச்சநீதிமன்றம் சீராய்வு செய்யமுடியும். 356-வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மேற்பார்வைக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதுதான்.
மாநில அரசை கலைக்கும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகள், நீதிமன்ற வரம்புக்குள் வராவிட்டாலும் எதன் அடிப்படையில் அந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டன என்பதை ஆராயும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு. ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநர் மாளிகையோ, குடியரசு தலைவர் மாளிகையோ அல்ல.
அரசியலமைப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு ஒரு அரசு கலைக்கப் பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. மேலும், மாநில அரசை கலைக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்ற பிறகே தனது அதிகாரத்தை ஜனாதிபதி செயல்படுத்த முடியும்''‘என்று மத்திய அரசின் எதேச்சதிகாரத்தின் மீது ஓங்கி அறைந்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இதன்பிறகே, மாநில அரசுகளுக்கு எதிராக 356-வது பிரிவை பயன்படுத்தி தன்னிச்சையாக மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அதுமட்டுமல்லாமல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கலைக்கப்பட்ட ராப்ரிதேவி தலைமையிலான பீகார் அரசு, பொம்மை வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின்படி மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது. மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தப்பட்டதாக மேற்கண்ட நிகழ்வு உணர்த்தியது. ஆக, பொம்மை வழக்கில் கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்புதான் , இன்றளவும் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர் எடுக்கும் முடிவுகளில் கூராய்வு செய்யப்படுவதும், நினைவுகூரத்தக்கதாகவும் இருக்கிறது.
அதனால், "பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களுடன் வெற்றிபெற்றுள்ள தி.மு.க. ஆட்சியை கலைப்பேன் என்கிற சு.சாமியின் மிரட்டல்கள் வெறும் வாய்ச் சவடால்கள்தான். ஆட்சியை கலைக்கவே முடியாது. கடந்த காலங்களில் அவருக்கு இருந்த சர்வதேச தொடர்புகளால் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் அவர் மிரட்டிக்கொண்டிருந்தார். ஆனால், மோடி பிரதமரானதற்கு பிறகு சர்வதேச தொடர்புகளெல்லாம் அவரை விட்டு விலகி விட்டன. அதனால்தான் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூட சு.சாமியை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால், தம்முடைய கடந்தகால அரசியல் செல்வாக்கை கண்டு திராவிட கட்சிகளிடத்தில் இப்போதும் ஒருவித அச்சமிருப்பதாக சு.சாமி நினைப்ப தால்தான் மிரட்டிப் பார்க்கிறார்'' என்கின்றனர் தி.மு.க. வழக்கறிஞர்கள்.
இது ஒருபுறமிருக்க, தி.மு.க. அரசுக்கு எதிராக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களிடமெல்லாம் பலதரப்பட்ட லாபிகள் வழியாக முயற்சித்து பார்த்துவிட்டன பத்ம சேஷாத்ரி பள்ளி நிர்வாகம். ஆனால், யாரிடமிருந்தும் சாதகமான பதில்கள் கிடைக்காத நிலையில்தான்... சு.சாமியின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தனது சதை ஆடும் என்கிற நிலையில், பத்மசேஷாத்ரி பள்ளிக்காக களத்தில் குதித்துள்ளார் சு.சாமி.