"விவசாயிகளின் நலனுக்காக கட்டவேண்டிய தடுப்பணையை ஒருசிலரின் சுயநலத்திற்காக சம்பந்த மில்லாத இடத்தில் கட்டி விவசாயத்தை அழிக்கப் பார்க்கிறாங்க'' என 32 கிராம மக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மாவட்ட நிர்வாகத்தை மட்டுமின்றி தி.மு.க. மாவட்டச் செயலாளரையும் விழிபிதுங்கச் செய்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dam_19.jpg)
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்துள்ள உத்தமசோழபுரம் கிராமத்தில், வெட்டாற்றின் குறுக்கே கடல்நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் 49.50 கோடி மதிப்பீட்டில் புதிய கடைமடை தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இங்கு கட்டப்படும் தடுப்பணையால் கடல்நீர் உட்புகுந்து உத்தம சோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடகுடி, பெருங்கடம்பனூர், உள்ளிட்ட 32 கிராமங்களில் உள்ள பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், நிலத்தடி நீரும் உப்புத்தன்மையுடையதாக மாறிவிடும் எனவும், தடுப்பணையை இதே ஊராட்சியிலுள்ள பூதங்குடியில் மாற்றியமைக்கவேண்டும் எனவும் பொதுமக்களும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவைத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தடுப்பணை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டனர். ஆத்திரமடைந்த 32 கிராம மக்களும் தடுப் பணையை மாற்றியமைக்கவேண்டும் என வலியுறுத்தி சாலைமறியல், வீட்டில் கருப்புக்கொடி ஏற்றுதல், ஆற்றில் இறங்கிப் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என பல்வேறுகட்டப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் உரிய ஆய்வு செய்யப்பட்டு வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டப்படுவதாக நாகை ஆட்சியர் ஆகாஷ் விளக்கமளித்துள்ளார். அதேநேரம் "இது பொய்யான அறிக்கை. தி.மு.க. மாவட்டச் செயலாளர் கௌதமனின் சுயநலத்திற்காக இவ்வளவு தூரம் கொண்டுவந்து கட்டுகிறார்கள்' என பொதுமக்களும், விவசாயிகளும் கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடந்த போராட் டத்தில், “"உத்தமசோழபுரம் தடுப்பணை குறித்து உயர்மட்டக் குழுவை அனுப்பி மறுஆய்வு செய்யவேண்டும். ஆட்சியர் விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கைகளை ஏற்று அரசுக்கு அனுப்பி தீர்வு காண்பதற்கு மறுத்துவிட்டார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உண்மைக்குப் புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் அரசுக்குத் தெரிவித்துவருகிறார். ஒப்பந்த தாரருக்கு ஆதரவாக ஒட்டு மொத்த மக்களையும் புறக் கணித்து அவமதித்துள்ளார். எனவே அரசுக்கும், விவசாயி களுக்கும், பொதுமக்களும் பிரிவினையை உருவாக்கும் வகையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷுக்கு எதிராக நாகை மாவட்டத்தில் எந்த கிராமத்துக்குச் சென்றாலும் அவருக்கு எதிராக கருப்பு கொடிகாட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும். தமிழக முதல்வர் தலையிட்டு இதற்கு தீர்வு காணும் வரை கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்கவேண்டும்''’ என்றார்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dam2_3.jpg)
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “"பூதங்குடி தடுப்பணை திட்டம் எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்று முதல்வர் சொல்கிறார், பூதங்குடியில் கொண்டுவந்த திட்டம் எப்படி ஏழு கிலோமீட்டர் தூரம் தள்ளி உத்தமசோழபுரத்திற்கு மாறியது என்று தெரியவில்லை. நாகை மாவட்டம் பிறந்த மண் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். பிறந்த மண்ணில் விவசாயிகள் சாலையில் இறங்கிப் போராடிவருகிறார்கள். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும், ஆய்வுகளையும் செய்யாமல் முதல்வர் மௌனம் காத்துவருகிறார். 50 கோடி நிதி வீணாகக்கூடாது என்று உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்டி 32 கிராமங்களின் குடிநீர் மற்றும் விளைநிலங்களை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவே உத்தமசோழபுரத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை உடனடியாக நிறுத்துவதுடன் பூதங்குடியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும். இல்லையென்றால் சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்''’என்றார்.
எடப்பாடி அறிக்கை வெளியான மறுநாளே பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தடுப்பணை கட்டும் இடத்திற்கு விவசாயிகள், பொதுமக்களோடு சென்று பார்வையிட்டவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு தடுப்பணையை மாற்றியமைக்கவில்லை என்றால் அ.தி.மு.க.வோடு சேர்ந்து மாபெரும் போராட்டம் நடக்கும் என போராட்டத்திற்கு நாள் குறித்தார்.
இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகியான தமிழ்ச்செல்வன் கூறுகையில், "முப்போகம் விளைந்த டெல்டாவின் கடைமடைப் பகுதியான இந்தப் பகுதி பல்வேறு காரணங்களால் ஒருபோகமே கேள்விக்குறி யாகியிருக்கிறது. ஒருபுறம் கர்நாடகத்தின் நயவஞ்சகத்தாலும், மறுபுறம் இயற்கையின் கோரதாண்டவத்தாலும் ஒவ்வொரு வருடமும் பேரழிவைச் சந்திக்கிறோம். போதாக்குறைக்கு சி.பி.சி.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் மிச்சமிருந்த விவசாயம் பாழகிக்கிடக்கிறது. இந்நிலைமையில் கடல்நீர் உள்ளே புகாமலிருக்க இந்தப் பகுதியின் பிரதான ஆறான வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என்கிற கோரிக்கையை பல வருடங்களாக முன்வைத்தோம். அந்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dam1_7.jpg)
அதேநேரம் அந்த தடுப்பணையை கடற்கரைக்கு அருகாமையில் அமைத்தால் விவசாய நிலங்களுள் கடல் நீர் உள்ளே புகாமலிருக்கும், அதைவிடுத்து 15 கிலோமீட்டர் தள்ளிவந்து தடுப்பணை கட்டுவது எந்தவிதத்தில் சரியாக இருக்கும்? இடையிலுள்ள 32-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலை என்னாகும்? நிலத்தடி நீர் பாழாகி
விவசாயம் அழிந்துபோகாதா?. தி.மு.க. மாவட்டச் செயலாளரான கௌதமன் இந்தப் பகுதியில் தனது மாமனார் உள்ளிட்ட பினாமிகளின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கிப் போட்டிருக்கிறார். அதில் இறால் குட்டைகளை அமைக்கவும், இடையில் இருக்கும் இறால் குட்டை அதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு இங்கு அமைக்கத் துடிக்கிறார். இதற்கு அதிகாரிகளும் உடந்தை.
தற்போதைய தி.மு.க. அரசு, தங்களுக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல பெயர் வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அதே கட்சியின் மாவட் டச் செயலாளரின் சுயநல நோக்கத் துக்காக செயல்படுத்தப்படுவது வேதனையளிக்கிறது. தமிழ்நாடு முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துவருகிறார் மா.செ.. ஏற்கனவே இப்பகுதியில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு சுற்றுச்சூழலும் நிலத்தடிநீரும் கடுமையாக மாசுபடுத்தப்பட்டுவருகிறது. இந்த பாதிப்பை போக்குவதற்காகதான் தடுப்பணை திட்டத்தை மக்கள் போராடிப் பெற்றுள்ளார்கள். சந்தோசமாக வரவேற்கவேண்டிய இந்த திட்டத்தை போராடித் தடுக்கவேண்டிய தர்மசங்கடத்திற்கு கொண்டுவந்தது யார் என முதல்வர் ஆய்வு செய்யவேண்டும். பொதுமக்கள் விருப்பப்படியே பூதங்குடி கிழக்கு பகுதியில் தடுப்பணையை கட்ட வேண்டும்'' என்கிறார்.
இதுகுறித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர் கௌதமனிடம் கேட்டோம், “"அரசியலுக்காக நாகை அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிளப்பிவிட்டு குளிர்காயுறார். அங்குள்ள பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால் அங்கு அமைக்கிறார்கள். என்னோட மாமனார் பெயரில் நிலம் வாங்கியிருக்கிறேன் என கூறுவது அபாண்டமான பொய். அதைவிட இறால் குட்டைகளுக்காக இந்தத் திட்டம் மாற்றியமைக்கப் படுகிறது என்பது சுத்தப்பொய். அரசியலுக்காக இப்படி கண்டதைக் கிளப்பிவிடுறாங்க.. ஆய்வு செய்து அந்த இடம் வலுவில்லை என கூறியதால் மாற்றியுள்ளனர். இதில் என்னோட தலையீடு எப்படி இருக்கமுடியும்? திட்டமிட்டே தேர்தல் வரும் நேரத்தில் பிரச் சனையைக் கிளப்புறாங்க''’என்கிறார்..
இதுகுறித்து நாகை அ.தி.மு.க. நகரச் செயலாளர் தங்க.கதிரவனிடம் கேட்டோம், “"இது விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. நான் அந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றேன். என்னை நம்பி வாக்களித்த மக்கள் என்னை அழைத்ததன்பேரில் போராட்டத்தில் கலந்துகொண்டேன். நான் மட்டுமல்ல, வி.சி.க., கம்யூனிஸ்ட், ஏன் தி.மு.க. வினரே கலந்துகொண்டனர். தற்போது கட்டப்படும் உத்தமசோழபுரம் ஊராட்சியிலுள்ள பூதங்குடியில் கட்ட கோரிக்கை வைத்தால், அந்த இடம் தடுப்பணை கட்ட உறுதித்தன்மை இல்லை என்கிறார்கள். அதன் அருகிலேயே கடற்கரை பக்கமாக விழுப்புரம்- நாகை தேசிய நெடுஞ்சாலைக்கான பாலம் கட்டப்படுகிறதே. அந்த இடம் எப்படி உறுதியானதாக இருக்கிறது. இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது''’என்கிறார்.
தடுப்பணை, பொதுமக்களின் கோபக் கடுப்பணையாக மாறிவிடாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/dam-t.jpg)