திர்பார்த்தது போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தி.மு.க.வின் கை ஓங்கியுள்ளது. இந்த தேர்தல், 9 மாத கால தி.மு.க. ஆட்சிக்கான சான்றிதழாக இருக்குமென்பதால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றியிருக்கிறதா? நிறைவேற்றவில்லையா என்பதுதான் தேர்தல் பிரச்சாரத்தில் கடும் விவாதமாக இருந்தது.

dmkwin

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லாமல், 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மக்களிடம் உரையாற்றி வாக்குச் சேகரித்தார். இப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்குச் சேகரிப்பதையும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை போன்றோர் கேள்விக்குள்ளாக்கினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைச் சந்திக்கத் தயாரில்லை. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், நீட் தேர்வு ரத்து போன்றவற்றை நிறை வேற்றாததால், மக்களின் கேள்விகளுக்குப் பயந்துகொண்டு மக்களைச் சந்திக்கவில்லை என்று விமர்சித்தனர்.

தி.மு.க. ஆட்சியில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பால் கட்டணம் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தபோதிலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடுகளை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து பிரச்சாரமாக்கினார்கள். இலவச வேட்டி, சேலை வழங்கவில்லையென்றும், பணப்பரிசு வழங்கவில்லையென்றும் பிரச்சாரம் செய்தார்கள். மேலும், நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தி.மு.க. தற்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஏமாற்றுகிறது என்றும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரச்சாரம் செய்தது ஏன் என்பதற்கு, "கொரோனா தொற்று பரவும் காலம் என்பதாலும், நோய்த்தொற்றுத் தடுப்புக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்துள்ள தாலும், நான் நேரடியாகப் பிரசாரத்திற்கு செல்லவில்லை'' என்று ஸ்டாலின் விளக்கம் கொடுக்கவேண்டியிருந்தது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

dmkwn

அ.தி.மு.க.வை விமர்சித்த , பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் கொளுத்திப் போட்டதில் கூட்டணி உடைந்து இரு கட்சிகளும் தனித்துக் களமிறங்கின. இத்தேர்தலில், தி.மு.க. கூட்டணி மட்டும் அப்படியே சிதறாமல் களமிறங்கியது. எனினும் கூட்டணிகளுக்கு சீட்டுகள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆங்காங்கே கூட்டணிக் கட்சிகள் தனித்துக் களமிறங்கிய தும், சில வார்டுகளில், தே.மு.தி.க. போன்ற மற்ற கட்சிகளோடு இணைந்து களமிறங்கியதும் நடந்தது. அ.தி.மு.க.வில் கூட்டணி என்பது பெயரளவிற்கு இருந்தது. மற்ற கட்சிகள் அனைத்தும் தனித்துக் களமிறங்கி தங்கள் பலத்தை நிரூபிப்பதில் தீவிரம் காட்டின.

இதில், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் பல இடங்களில் சீட்டு எதிர்பார்த்துக் கிடைக்காதவர்கள், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். இதனால் தி.மு.க.வில் போட்டி வேட்பாளர்கள் பலரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கும் அறிவிப்பும் வெளியானது. பா.ஜ.க.வோ, தங்கள் கட்சி சார்பாக விருப்பத்தோடு களமிறங்கியவர் கள் தவிர, ஆட்களே கிடைக்காத பல இடங்களில், மற்ற கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்களுக்குத் தூண்டில் போட்டு, உங்களுக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், எங்கள் கட்சி சார்பாகப் போட்டியிட்டால் போதுமென்று, மற்ற கட்சியினரைத் தங்களுடைய லேபிளில் களமிறக்கினார்கள். இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் அதிகாரப்பூர்வமாக ஆங்காங்கே போட்டியில் குதித்தனர்.

பிப்ரவரி 22-ம் தேதி காலையிலிருந்து தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கியது முதலே தி.மு.க.வே பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் முன்னிலை பெறத்தொடங்கியது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை, மாநகராட்சியிலும், நகராட்சியிலும் தி.மு.க.வைவிட மிகவும் பின்னடைவாகவும், பேரூராட்சியில் ஓரளவுக்கு ஈடுகொடுத்தும் வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. மாநகராட்சி களைப் பொறுத்தவரையில், 21 மாநகராட்சி களில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. முன்னிலையில் இருந்தது. சிவகாசி மட்டுமே அ.தி.மு.க.வா, தி.மு.க.வா என்ற இழுபறியில் இருக்கிறது. சிவகாசி நிலவரம் தி.மு.க. கூட்டணிக்குச் சாதகமாக இல்லையென்றும், காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில் தி.மு.க. களமிறங்கியதால் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் நக்கீரனில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

Advertisment

dmkwin

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு அமோக வெற்றியை அள்ளிக்கொடுத்த கொங்கு மண்டலத்தில் வெற்றிபெறுவதைத் தங்கள் கவுரவப் பிரச்சனையாகக் கருதியது. ஆனால் தற்போது கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறது. கரூர், திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல்லில் பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தார்கள். இது எடப்பாடி தரப்புக்கு பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கோவையைப் பொறுத்தவரை அமைச்சர் செந்தில்பாலாஜி வியூகம் அமைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை வசப்படுத்தியுள்ளார். கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் சில வார்டுகளில் பா.ம.க. வெற்றிபெற்று மாங்கனியின் பெருமையைக் காப்பாற்றிக்கொண்டது. அதேபோல ஓசூரிலும் ஒருசில வார்டுகளில் பா.ம.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பிரதான கட்சிகளின் கூட்டணிகளைத் தவிர்த்த மற்ற கட்சிகளில், பா.ஜ.க. கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தனது வெற்றியை பா.ஜ.க. பதிவுசெய்துள்ளது. சென்னை மாநகராட்சியில், தி.மு.க.வே முன்னிலை பெற்றபோதும், பெரும்பாலான வார்டுகளில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை அறுவடை செய்துள்ளது தெரியவருகிறது. வழக்கமாக அ.தி.மு.க.வுக்குச் செல்லக்கூடிய தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை இம்முறை பா.ஜ.க. பெற்றிருப்பது ஆபத்தான அறிகுறியாகும். இது, அ.தி.மு.வுக்கு எச்சரிக்கை செய்வதுபோல் அமைந்துள்ளது. ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமியப் பெண்ணிடம் பா.ஜ.க. முகவர் தகராறு செய்த மதுரை மேலூர் நகராட்சி 8-வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் அம்சவேணி வெறும் 10 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார்.

பா.ஜ.க.வைப் போலவே அ.ம.மு.க.வும் இத்தேர்தலில் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளைக் கைப்பற்றி குக்கர் தனது விசிலை சத்தமாக அடித்துள்ளது.மேலும், தென் மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி வார்டுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூ ராட்சியில் ஒன்றாவது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஆன்சி சோபா ராணி வெற்றிபெற்றுள்ளார். புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டு, அனுமந்தன்பட்டி பேரூராட்சி 14-வது வார்டு உள்ளிட்ட சில வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றியைப் பெற்றுள்ளனர். மேலும் சில இடங்களில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களைவிட விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதும் தெரிய வருகிறது. உள்ளாட்சியில் தனிக்கவனம், கிராம சபைக் கூட்டம் என்றெல்லாம் புதுமை பேசிய பிக்பாஸ் கமலால், இத்தேர்தலில் தடம் பதிக்க முடியவில்லை.

பெரும்பான்மை இடங் களில் தி.மு.க. முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கியதுமே, மார்ச் 4-ம் தேதி நடைபெற வுள்ள மறைமுகத் தேர்தலில், மேயர், துணை மேயர், சேர்மன், துணை சேர்மன் பதவிகளைக் கைப்பற்றுவதற்காக ஆளுங் கட்சியில் ரேஸ் தொடங்கி விட்டது. ஒருவரையொருவர் முந்துவதற்காகக் காலை வாரிவிடும் மல்லுக்கட்டு நடக்கிறது.

-நமது நிருபர்கள்

படங்கள்: அசோக், குமரேஷ்