தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அண்ணாவையும், ஜெயலலிதாவையும் மிக மோசமாக விமர்சனம் செய்த நிலையில், அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான கூட்டணி முறிந்ததாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறுவதாகவும், இனிவரும் காலங்களில் எந்த தேர்தலிலும் அவர்களுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
அதன்பின் தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டச் செயலாளர்களை நிரப்பும் பணி நடைபெற்றது. திருச்சியில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மா.செ. பதவியை தன் மகனுக்கு வாங்க நினைத்துக்கொண்டிருக்க... அவர் வைத்திலிங்கம் பக்கம் சாய்ந்ததால், வாய்ப்பு போய்விட்டது. முன்னாள் அரசு தலைமை கொறடாவாக இருந்த மனோகரனும், முன்னாள் துணைமேயரான சீனிவாசனும் மாநகர் மாவட்ட செயலாளருக்கு போட்டியிட்ட நிலையில், சீனிவாசனுக்கு அந்த பதவி கிடைத்துள்ளது.
தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தை எதிர்த்து அரசியல் செய்ய மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த காந்தி, துரை செந்தில் ஆகியோர், அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மட்டு மல்ல திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவள்ளூர், சங்கரன்கோவில், தென்காசி, அயோத்திபட்டினம் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்த பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் உள்ள னர். ஒருசில இடங்களில் இந்த பொறுப்பாளர் களை ஏற்றுக்கொண்டாலும் பல இடங்களில் தமிழகம் முழுவதும் எடப்பாடி மீதான அதிருப்தியே வெளிப்படுகிறது. இந்த மாவட்ட செயலாளர்கள் தேர்வு குறித்து நாம் தலைமை நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "எஸ்.பி வேலுமணி சசிகலாவிற்கு ஆதரவானவராக செயல்பட்டவர். தன்னுடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதை இந்த மாவட்ட செயலா ளர்கள் தேர்வில் உறுதிப்படுத்தி உள்ளார். சசி கலாவிற்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான் இன்று மாவட்ட செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.விற்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருந்தாலும், எஸ்.பி.வேலுமணி கைதான் ஓங்கி இருக்கிறது'' என்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியே வந்ததும் ஏகப்பட்ட பட்டாசுகள் வெடித்தன. தொண்டர்களின் உற்சாகம் என சொல்லப்பட்ட அந்தப் பட்டாசு வெடிப்பு அன்றோடு சரி. பிறகு பா.ஜ.க.வை எதிர்த்து யாரும் பேசவில்லை. ஒன்றிரண்டு போஸ்டர்கள் மட்டும் வெளி யிடப்பட்டன. இனிமேல் யாரும் போஸ்டர் வெளியிடக்கூடாது என எடப்பாடி தடை விதித்து விட்டார்.
கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டாலும் பா.ஜ.க.வை எதிர்த்து எதுவும் செய்யாத அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளையும் வி.சி.க.வையும் தொடர்புகொண்டு பேசியது. கூட்டணி விலகல் முடிவை எடுத்ததும் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கா கோவிலுக்கு எடப்பாடி சென்றார். காங்கிரசின் வியூக அமைப்பாளராக இருக்கும் சுனில் என்பவர் இந்தப் பயணத்தைக் கட்டமைத்தார். திரும்பிவரும் வழியில் சுனிலின் ஆட்களை எடப்பாடி சந்தித்தார். அகில இந்திய அளவில் ‘ஒசஉஒஆ’ கூட்டணிக்கு ஆதரவு பெருகுவதை சுனிலின் ஆட்கள் எடப்பாடிக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெறும் நிலையில் அவரை எடப்பாடி நலம் விசாரிக்க, டி.டி.வி.தினகரனும் திருமாவளவனின் உடல்நிலை பற்றி விசாரித்தார். அ.தி.மு.க. தரப்பிலிருந்து யார் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அழைத்தாலும் பேசினாலும் அவர்கள் அ.தி.மு.க.விற்கு நம்பிக்கையான பதில்கள் கொடுக்கவில்லை.
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடப்பதற்கு ஒருநாள் முன்பே, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு முஸ்லிம் லீக்கிடம் பாராளுமன்றத் தேர்தல் சீட் ஒதுக்கீடு பற்றிப் பேசியது. பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறுகிறது என்பதை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் டைப்பாகிக்கொண்டிருந்த தீர்மானத்தின் மூலம் ஒருநாள் முன்பே தி.மு.க. தெரிந்துகொண்டது. அ.தி.மு.க. அலுவலக நிர்வாகி மகாலிங்கம் மூலம் இந்த தகவலைத் தெரிந்துகொண்ட தி.மு.க., தங்களது கூட்டணியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளை தக்கவைத்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தியது, எடப்பாடியை பேரதிர்ச்சிக் குள்ளாக்கியது.
அ.தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்பாடு தமிழக அரசியலில் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை பா.ஜ.க.வும் தெளிவாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. அடுத்தது என்ன என்பதை ஆராய்வதற்கு நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஒரு குழுவை பா.ஜ.க. அமைத்துள்ளது. நிர்மலா சென்னைக்கு வந்தார். அ.தி.மு.க.வினரிடம் பேசினார். பா.ஜ.க. தலைவர்களிடமும் பேசினார்.
பா.ஜ.க.வினர் அனைவரும் அண்ணாமலை பற்றிப் புகார் சொன்னார்கள். அண்ணாமலை, பி.எல்.சந்தோஷ், அமித்ஷா ஆகியோருக்கு தேவையானவற்றை தமிழ்நாட்டிலிருந்து திரட்டித் தருகிறார். அந்த செல்வாக்கில் அவர் ஏடாகூடமாகப் பேசுகிறார். அண்ணாமலையுட னான மோதலை அ.தி.மு.க. ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது'' என பா.ஜ.க. தலைவர்கள் சொன்னார்கள்.
அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் தேசியத் தலைமை அ.தி.மு.க.வை மதிக்கவில்லை எனப் புகாராகச் சொன்னார்கள். ‘"அண்ணாமலையை மாற்றினால் சரியாகிவிடுமா?'’என நிர்மலா கேட்டதற்கு, "முதலில் அது சரியாக இருந்திருக்கும். இப்பொழுது நிலைமை கைமீறி விட்டது. அமித்ஷாவும் மோடியும், சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. ஆகியோரை அ.தி.மு.க.விற்குள் திணிக்கக் கூடாது என்பதுதான் இப்போதைய பிரச்சினை'’என அ.தி.மு.க. தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் பா.ஜ.க.வை ஆதரிக்கிறார். அதுபோல தமிழ்நாட்டில் எடப்பாடி செயல்படுவார் என எதிர் பார்க்கலாம்''’என்று நிர்மலா ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்.
ஆனால் எடப்பாடியைப் பொறுத்தவரை நானும் ரவுடிதான்’ என சிரிப்பு நடிகர் வடிவேலு சொல்வதைப்போல சொல்கிறார். அவரை யாரும் நம்பத் தயாராயில்லை. ஆனால், பா.ஜ.க.வுக்கு எதிராக எடப்பாடி பேசுவதை, பா.ஜ.க. எவ்வளவு தூரம் விரும்பும் என்ற சந்தேகம் அ.தி.மு.க.வின் தலைவர்களுக்கு வந்துள்ளது. வேலுமணி, காமராஜ், வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இந்த சண்டையினால் தங்கள் மீது ‘ரெய்டு’ நடவடிக்கைகள் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுடன் நல்ல உறவில் இருக்கும் ஓ.பி.எஸ்.சுடன் தங்களது தொடர்பை வலுப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மோதலால் மகிழ்ச்சி அடைந்திருப்பது ஓ.பி.எஸ்.தான். ஓ.பி.எஸ்.சும் சசிகலாவும் ‘எடப்பாடி பலவீனமாகிவிட்டார்’ என கணக்குப் போடுகிறார்கள். பா.ஜ.க. இரட்டை இலையை மீட்டு ஓ.பி.எஸ். கையில் கொடுக்கும் என்று ஓ.பி.எஸ். நினைக்கிறார். இரட்டை இலை வந்தால் ஓ.பி.எஸ். தலைமையிலான ஒரிஜினல் அ.தி.மு.க. கூட் டணியில் பா.ஜ.க. இருக்கும் என்று ஓ.பி.எஸ். கணக்குப் போடுகிறார். இந்த நிலைமை வரக்கூடாது என பா.ஜ.க.வை பகைத்துக் கொள்ளாமல் எடப்பாடி மவுனம் காக்கிறார்.
மொத்தத்தில் "பா.ஜ.க.வின் தேசியத் தலைமை அடுத்து எடுக்கப்போகும் முடிவு களைப் பொறுத்தே தமிழ்நாட்டில் அரசியல் காட்சிகள் அமையும்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.