இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட ஆறு தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவுசெய்யப் பட்டிருந்தன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கிவருகின்றன. இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்துவருகின்றது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29ஏ விதிகளின் கீழ், நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்கின்றன. தேர்தல் ஆணையத் தில் பதிவுசெய்த கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டு இருக்கவேண்டும். இந்த நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய, பதிவுசெய்யப் பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் அடங்கும். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது,
மூன்றாவது கட்டமாக கடந்த 2021-ஆம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் விரைவில் நீக்கம்செய்யப்படும். இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 39 கட்சிகள் இருக் கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ விதிகளின் கீழ், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான வழிகாட்டுதல் நெறி முறைகளின் படி, ஒரு கட்சி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அத்தகைய கட்சி, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத, பதிவுசெய்யப் படாத கட்சிகளை, அடையாளம் கண்டு பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கையை செய்து கணக்குகளை சமர்ப்பிக்கத் தவறிய, தேர்தல்களில் போட்டியிடும் வரவு-செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாத, 359 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் 15 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்'’என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹி ருல்லா நம்மிடம், "இந்தியா திறந்த ஜனநாயக நாடு. மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் 2009-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் சின்னத்தில் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். 2021-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு ஏர்வாடி, லால்பேட்டை பேரூராட்சிகளில் வெற்றிபெற்றோம். மேலும் பல இடங்களில் நகர மற்றும் மாநகர கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள்.
தி.மு.க. கூட்டணியிலுள்ள ஒரே காரணத்தால் எங்களைக் குறிவைத்து கட்சிப் பதிவை ரத்துசெய்துள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியிலுள்ள ஐ.ஜே.கே., த.மா.கா. கட்சிகள் படுமோசமான தோல்விகளையும் சந்தித்துள்ளன. அவர்கள் ஏன் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் படவில்லை?
கொங்கு மக்கள் தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் ஈஸ்வரன், "கட்சிப் பதிவு ரத்துசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்க ஒன்று. ஓட்டைத் திருட ஆரம்பித்தவர்கள் தற்போது கட்சிகளைத் திருட ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து இயங்கிக்கொண்டுள்ள கட்சிகளில் நம் கட்சியும் ஒன்று. ஆனால் 95% இயங்காம லுள்ள கட்சிகளை ஏன் தேர்தல் ஆணையம் களையெடுக்கவில்லை? குஜராத்தில்தான் லெட்டர்பேட் கட்சிகள் அதிகம். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை ஆண்டுத் தணிக்கை, ஆண்டு பொதுக்கூட்டம், ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டுள்ளது. எங்கள் கட்சியை ரத்துசெய்ததற்கு எதிராக நாங்கள் மேல்முறை யீடு செய்து மறுபதிவு செய்வோம். ஜனநாயகத் திற்கு எதிரான இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது''’என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் அதிரடி, இன்னும் பல கட்சிகளை பதற்றத்தில் வைத்துள்ளது.