""ஹலோ... ... தலைவரே, எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுபடியும் மீடியாவில் முகம் காட்டி, மாண்புமிகு முதல்வர்னு புகழாரம் சூட்டியிருக்காரே?''
""ஆமாம்பா, விஜயபாஸ்கர் திடீர்னு முகம் காட்ட, செயலாளர் பீலா ராஜேஷ் சைலன்ட்டாகன்னு திடீர் திடீர்னு சீன் மாறுதே...''
""தலைவரே.. அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொருத்தரையும் புரமோட் பண்ண ஒரு லாபியும், புகார் பண்ண ஒரு லாபியும் தீவிரமா வேலை செய்யுது. பீலா ராஜேஷ் மாஸ்க் போடாம பேட்டி கொடுக்கிறார். டெல்லி மாநாட்டின் மூலம் தொற்றுன்னு அவர் கொடுத்த புள்ளிவிவரங்கள் ஏறுக்குமாறா இருக்கிறதால, மதரீதியான சிக்கலை உருவாக்குதுன்னு முதல்வர் வரைக்கும் புகார் போயிருக்கு.''
""அதனால்தான் இப்படிப்பட்ட மாற்றங்களா?''
""அதுமட்டும் இல்லீங்க தலைவரே, கொரோனா உபகரணக் கொள்முதலில் நடந்திருக்கும் ஊழல்கள் பற்றி எல்லாம் நம் நக்கீரனில் வெளியான செய்திகளும் அரசுத் தரப்பை ரொம்பவே அதிரவச்சிருக்கு. இதெல்லாம் இந்த நேரத்தில் பெருசானால் ஆட்சியின் இமேஜ் டேமேஜாகும். அதை சமாளிக்கனும்னா, அமைச்சர் விஜயபாஸ்கர்தான் லாயக்கானவர்னு ஃபீல்டில் இறக்கிவிட்டார் எடப்பாடி.''
""அமைச்சர் பேட்டி கொடுக்கும் டி.எம்.எஸ். அலுவலகத்திலும், கொரோனாப் பதட்டம் இருக்குதேப்பா?''
""சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் இருக்கும் நாசர்ங்கிற டைபிஸ்டுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி இருக்கு. டெல்லி தவ்பீக் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்த அவரோட மைத்துனர் மூலமா நாசருக்கு இது ஏற்பட்டதாத் தெரியவந்திருக்கு. இதை அறியாமல், கடந்த 20 நாளா அவர் அலுவலகத்துக்கு வந்து போனதால், டி.எம்.எஸ்.சில் யார் யாருக்கு தொற் றுப் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோங்கிற பதட்டமும் பீதியும் ஏற்பட்டிருக்கு. இதைக் கவனித்த உளவுத்துறை, டி.எம்.எஸ்.சுக்கு வந்துசெல்லும் அமைச்சர் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் உள் ளிட்ட அத்தனை பேரும் பரிசோதனைக்கு ஆளாகனும். மேலும், அமைச்சர் உங்களையும் சந்திச்சிருப்பதால் நீங்களும் உடனடியாகப் பரிசோதிச்சிக்கனும்ன்னு முதல்வர் எடப்பாடிக்கு, ஹாட் ரிப்போர்ட் அனுப்பியிருக்குது.''
""கோவை மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர்களுக்கு சோறு-தண்ணீர்கூட கிடைக் காமல் தவிப்பதை நம்ம நக்கீரன் எழுதிய நிலையில், டீன் மாற்றப்பட்டிருக்காரே?''
""தலைவரே.. கோவை மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவ பி.ஜி.மாணவர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருக்கு. இதனால் கேண்டீன் இழுத்து மூடப்பட்டது. அதுக்கு பதிலா, அந்தக் கல்லூரி டீன் அசோகனின் பினாமி ஒருவர் நடத்திய கேண்டீனில் மற்றவங்க சாப்பிட்டு வந்தாங்க. அங்கு சாப்பிட்டவர்களுக்கு அண்மை யில் திடீர்ன்னு பேதி ஏற்பட, அவங்களுக் கெல்லாம் சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கு. வசூல் புகார், ஊழல் முறைகேடுன்னு ஏற்கனவே ஏக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் டீன் அசோகன்.''
""அதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள்னு எவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கலைன்னும் புகார் இருக்குதே?''
""அதனால்தான் அங்கே ரெண்டு மருத்துவர்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டதாம். மருத்துக்கல்லூரி மாணவர்கள் 70 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருக்கு. அதனால்தான் டீன் அசோகன் மீது அவசரமா நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. இவருடைய அலட்சியத்தால், கோவை மண்டலம் கொரோனா மண்டலமா ஆகிவிடுமோங்கிற பயம் மேலிடம் வரை பரவியிருக்கு.''’’
""கோவை ஜக்கி ஆசிரம நிலவரம் என்ன?''
""ஜக்கியின் ஈசா யோக மையத்தில் 119 ஃபாரினர்ஸ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டி ருக்காங்க. இந்த நிலையில், ஆசிரமத்துக்குப் போன ஒரு சிறப்பு சொகுசுப் பேருந்தில் அவங்கள்ல 5 பேர் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்காங்க. அங்கே தயாராக இருந்த தனி விமானத்தில் அந்த ஐஞ்சு பேரும் லண்டனுக்குப் பத்திரமா அனுப்பிவைக்க பட்டிருக்காங்க. மாநில அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ தெரியாமல், மத்திய அரசின் உதவியோட இந்தக் காரியம் நடந்திருக்குதாம். விஷயம் கசிந்ததால், மாவட்ட நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் அதிரடியா டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்காங்க. அந்த 5 ஃபாரினர்ஸýக்கும் என்ன நேர்ந்தது? ரகசியமா அவங்களை எதுக்காக அனுப்பிவைக்கனும்ங்கிற சந்தேகக் கேள்விகள் சுழலுது.''’
""இப்படி எல்லா பக்கமும் சந்தேகங்கள் இருக்கிற நேரத்தில், நோயைக்கூட தி.மு.க. அரசியல் பண்ணுதுன்னு எடப்பாடி குற்றம் சாட்டியிருக்காரே?''
""ஆரம்பத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் எதுவும் செய்யாம ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அவங்களால முடிஞ்ச அளவுக்கு மக்களுக்கு உதவி செஞ்சாங்க. அதற்கு தடை போட்டது எடப்பாடி அரசு. தி.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஹைகோர்ட்டுக்குப் போனது. தி.மு.க. எம்.பி. வில்சன் ஆஜராகி வாதாடினாரு. நிவாரண உதவிகளைத் தடுப்பதை ஏற்காத உயர்நீதிமன்றமும், நிவாரணங்களை வழங்க அனுமதி வாங்கத் தேவையில்லை. தகவல் சொன்னால் போதும்னு தீர்ப்பு கொடுத்திடிச்சி. அதுபோல, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டணும்னு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும், இதிலே அரசியல் செய்ய இடமில்லைன்னு எடப்பாடி மறுத்திட்டாரு.''
""அதனால்தான் தி.மு.க. சார்பில் தோழமைக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்திருக்குதே?''
""அறிவாலயத்தில் நடந்த கூட்டத்துக்கு தேனாம்பேட்டை காவல்நிலையம் அனுமதி மறுத்ததை போனமுறையே நம்ம நக்கீரன் சொல்லியிருந்தது. எடப்பாடி இதில் ரொம்ப கறாரா இருந்தாரு. ஆனாலும், ஸ்டாலினும் உறுதியா இருந்து வீடியோ கான்பரன்சிலேயே கூட்டம் நடத்தி தீர்மானமும் போட்டுட்டாங்க. அதில், மக்களுக்கு 5000 ரூபாய் தரணும்னு போடப்பட்ட தீர்மானத்தை, இதுபற்றி ஏற்கனவே வலியுறுத்திய ப.சிதம்பரம் வரவேற்றாரு. அதேநேரத்தில், கொரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி நிவாரணம் தரணும்ங்கிற தீர்மானம் ஆளுந்தரப்பை டென்ஷனாக்கிடிச்சி. பா.ஜ.க. தரப்பினரும் இதை விமர்சித்து சமூக வலைத் தளங்களில் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சாங்க.''
""முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர்ங் கிற முறையில் ஸ்டாலின் எழுதிய கடிதத்திலும் அதற்குப் பிறகான அறிக்கைகளிலும் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை. ஆனா அ.தி.மு.க-தி.மு.க. அரசியல் இந்த கொரோனா காலத்திலும் ஓயலைப்பா...''
""மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு கருவிகள், மக்களுக்கான நிவாரணம் சம்பந்த மாத்தான் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்குது. ரேசனில் கொடுத்த ஆயிரம் ரூபாய், இப்போது உயர்ந்திருக்கும் விலைவாசியில் நாலு நாளைக்குக் கூட போதுமானதா இல்லை. இலவசமா கொடுக்கப்படுற ரேஷன் பொருட்களும் சரியா கிடைக்கிறதில்லை. ஸ்டாக் இல்லைன்னு புகார் சொல்றாங்க. மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்துக்கு கேட்ட எடப்பாடி அரசு, டெல்லி அனுப்பிய 510 கோடியை வாங்கி வச்சிக்கிட்டு கை பிசையுது. தமிழகத்துக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும் முழுதாக் கொடுக்கலை.''
""இதையெல்லாம்தானே எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுது!''
""மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை உரிமையோடு கேட்கும் வலிமை எடப்பாடி அரசுக்கு இல்லை. அதோடு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்களிடம் நிதி கோரினார் எடப்பாடி. 5000 கோடியாவது கிடைக்கும்னு எதிர்பார்த்தாரு. 1000 கோடியாவது உடனடியா தேறிடும்னு நினைச்சாரு. ஆனா, பலரும் கையைச் சுருக்கிக்கிட்டாங்க. கடந்த 2 வாரத்தில் வெறும் 135 கோடி ரூபாய் அளவுக்குதான் நன்கொடை கிடைச்சிருக்கு. எடப்பாடி ரொம்பவே அப்செட்.''
""இவ்வளவு பிரச்சினையிலும் அ.தி.மு.க.வில் கோஷ்டி அரசியல் ஓயலையே?''
’""ஆளுங்கட்சின்னா அப்படித்தான்... ராஜேந்திர பாலாஜியின் மா.செ.பதவி பறிக்க ப்பட்ட நிலையில், அவரோட விருதுநகர் மா.செ. பதவிக்காக அமைச்சர் மா.ஃபா. பாண்டிய ராஜனும், மாஜி மந்திரி வைகைச் செல்வனும் முட்டிமோதிக்கிட்டிருப்பதை நம்ம நக்கீரன் விளக்கமா எழுதியிருந்தது. புதிதாக அறிவிக்கப் பட்டிருக்கும் மயிலாடுதுறையின் மா.செ. பதவியை தன் ஆதரவாளருக்குத் தரணும்னு மாவட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காய் நகர்த்துறாரு. அதே நேரத்தில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதா கிருஷ்ணனும், பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜும் தலித் சமூகத்தைச் சேர்ந்த சீர்காழி எம்.எல்.ஏ.பாரதியும் மா.செ. பதவிக்கு வரிஞ்சு கட்டுறாங்க. சீனியர் என்கிற முறையிலும் இருமுறை எம்.எல்.ஏ.வா இருந்தவர் என்ற முறை யிலும் தனக்கு மா.செ.பதவி வேணும்ன்னு பவுன்ராஜ் மல்லுக்கட்டுகிறார். மயிலாடுதுறையில் பவுனை ஆதிக்கம் செலுத்த விட்றக்கூடாதுன்னு எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் தரப்பு போராடிக்கிட்டு இருக்குது.''
’""எடப்பாடிக்கு இது புது தலை வலின்னா, மோடிக்கு அவரோட அமைச்சர்கள் சைடிலிருந்து தலைவலியாமே? மத்திய அமைச்சர்கள் பலரும் இப்ப தங்களோட அலுவலகத்துக்கு வரவே பயப்படுறாங்களாமே?''’
""ஆமாங்க.. தலைவரே, இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் மத்திய அமைச்சர்கள் எல்லோரும், வீட்டுக்குள் முடங்கிடாம, அவங்கவங்களும் தங்கள் அலுவலகத்து வந்து பணிகளைக் கவனிக்கனும்ன்னு பிரதமர் மோடி உத்தரவு போட்டார். ஆனால் பாடகி சுனிதா கபூர், லண்டன்ல இருந்து கொரோனாத் தொற்றை வாங்கி வந்து, இங்கிருக்கும் எம்.பி.க்களுக்கு விநியோகிச்ச விவகாரத்தால், அமைச்சர்கள் பலரும் தங்கள் அலுவலகத்தில் நுழையவே பயப்படறாங்க. அதனால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் மே 3 -ந் தேதி வரை வீட்டிலிருந்தபடியே செயல்படறோம்ன்னு சொல்லியிருக்காங்க. இதனால் எரிச்சலான மோடி, நீங்கள்லாம் அலுவலகத்துக்கு வந்தே ஆகனும்ன்னு, பிரதமர் அலுவலகம் மூலம் அவங்களுக்குத் தகவல் கொடுக்கச் சொல்லிட் டாராம்.''
""போன மாதம் இந்தியா முழுவதுமிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ 70 எம்.பி.க்கள். இன்னும் பதவி ஏற்கலையேப்பா?''
""ஆமாங்க தலைவரே, நம் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ மற்றும் அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் உள்பட இந்தியா முழுவதும் 70-க்கும் மேற்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வாகியிருக்காங்க. இவங்க யாரும் இன்னும் முறைப்படி பதவி ஏற்கலை. கொரோனா தாக்கத்தால்தான் பதவி பிரமாண நிகழ்ச்சி நடக்கலை. 20-ந் தேதிக்குப் பிறகு ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் நடக்க இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த முயற்சிகள் நடக்குது. இது தொடர்பா பிரதமர் மோடியிடம் ராஜ்யசபா சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு ஆலோசிச்சிருக்கார். அதனால் 25-ந் தேதிக்கு பிறகு பதவியேற்பு வைபவம் நடக்கலாம்ங்கிற எதிர்பார்ப்பு நிலவுது.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன்.. மத்த அரசியல் கட்சிகள் நிவாரண உதவிக் களத்தில் வேகமா இருக்குது. கமலின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களிலும் கபசுர குடிநீர் வழங்குது. அதனால், தனது ’ரஜினி மக்கள் மன்றம்’ மட்டும் முடங்கியிருந்தா நல்லா இருக்கதுன்னு நினைச்ச ரஜினி, நிவாரண உதவிகள்ல நீங்களும் களமிறங்குங்கன்னு தனது மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கார். இது தொடர்பா மாவட்டத் தலைவர்கள் அனைவரையும் தானே தொடர்புகொண்டுப் பேசி, உற்சாகப்படுத்தவும் அவர் தயாராகி வருகிறாராம். மன்ற நிர்வாகிகள், ரஜினியின் குரலுக்காகக் காத்திருக்காங்க. அதே நேரத்தில் அஜீத், சிவகார்த்திகேயன் எல்லாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்திருக்கும் நிலையில், ரஜினி எப்போது, எவ்வளவு கொடுப்பாருங்கிற எதிர்பார்ப்பும் இருக்குது.''