"கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் தி.மு.க. பொருளாளரான துரைமுருகனின் உறவினர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்' என்கிற அறிவிப்பு வேலூர் மாவட்ட தி.மு.க.வினரை அதிரவைத்துள்ளது. அதே நேரத்தில் ஆளுக்கொரு நீதி எதுக்கு என்கிற சலசலப்பும் எழுந்துள்ளது.

vellore-dmk

இதுபற்றி வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களிடம் பேசியபோது, ""துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பத்தை சேர்ந்தவர் வி.டி.சிவகுமார். அவரது சகோதரர் ஜெயக்குமார் கே.வி.குப்பம் ஒ.செவாக உள்ளார். "நான் துரைமுருகன் சாதிக்காரன், பங்காளி' எனச்சொல்லி கட்சியில் வலம் வந்த சிவா, பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் அடைந்தார். மாற்றுக்கட்சியினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததால் துரைமுருகன் அவரை கட்சியில் வளர்த்துவிடவில்லை. ஆனால் அவர் பெயரைச்சொல்லிக்கொண்டு பொதுப்பணித்துறை ஒப்பந்தம், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் என பல பணிகளை செய்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் வீரமணியிடம் "நான் உங்க சாதிக்காரன், துரைமுருகன் உறவுக்காரன்' எனச்சொல்லி நெருங்கி பல காண்ட்ராக்ட்களை எடுத்து வேலை செய்துவருகிறார். அதோடு, தி.மு.க.வின் மத்திய மாவட்டத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பையும் வாங்கிக்கொண்டார். தி.மு.க.வினரிடம் துரைமுருகன் பெயரையும், ஆளும்கட்சியான அ.தி.மு.க.வினரிடம் அமைச்சர் வீரமணி பெயரையும் சொல்லி மிரட்டும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். இதனால்தான் துரைமுருகன் ஒப்புதலோடு சிவகுமார் நீக்கப்பட்டார்'' என்றார்கள்.

Advertisment

அதேசமயம், மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் வீரமணியுடன் கொஞ்சி குலாவும் நிர்வாகிகளை ஏன் நீக்கவில்லை என்கிற பிரச்சனையும் வெடித்துள்ளது. இதுகுறித்து மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் சிலர், ""போன ஆகஸ்ட் மாதம் ஜோலார்பேட்டையில் ஒரு திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண பத்திரிகையில் முழுப்பக்கம் அ.தி.மு.க. அமைச்சர் வீரமணி படமும் மற்றொரு பக்கம் திருமணத்துக்கு தலைமை ஜோலார்பேட்டை தி.மு.க. ஒ.செ சத்தியமூர்த்தி, முன்னிலை மா.செ முத்தமிழ்செல்வி, முன்னாள் மா.செ தேவராஜ், கவிதாதண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெயரும் கறுப்பு சிவப்பு அடையாளத்தோடு அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருமணத்தில் அமைச்சரும், தி.மு.க. ஒ.செ சத்தியமூர்த்தியும் அவ்வளவு நெருக்கமாக பேசிக்கொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்கள். அதுமட்டுமல்ல சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு முன்னாள் மா.செ. தேவராஜ் அமைச்சர் வீரமணி மூலமாக ஒர்க் எடுத்து செய்கிறார். தேவராஜ் சம்பந்திதான் ஒ.செ. சத்தியமூர்த்தி. சாதி அடிப்படையில் அமைச்சர் வீரமணியுடன் இவரும் நெருக்கமாக இருந்துகொண்டு பல வேலைகளை முடித்துக்கொள்கிறார். இதுபற்றியெல்லாம், தலைமை முக்கிய நிர்வாகிகளிடம் முறையிட்டால் தொழில் தொடர்பு தானே என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் காங்குப்பம் சிவாவும் தொழில் தொடர்பில் தானே இருந்தார், அவர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பொருமுகிறார்கள்.

vellore-dmkதிருமண பத்திரிகை விவகாரம் தொடர்பாக மேற்கு மா.செ. ""முத்தமிழ்செல்வியிடம் கேட்டபோது, மல்லப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. ஊ.செ. சீனுவாசன் என்பவர் அப்படி பத்திரிகை அடித்திருந்தார். உறவுக்காரராக திருமணத்துக்கு அமைச்சர் வீரமணியை அழைத்து, அவர் வருவது தவறில்லை. கல்யாண பத்திரிகையில் அவரின் படமும், எங்கள் கட்சி நிர்வாகிகளின் பெயரும் போட்டிருந்ததால் அதிர்ச்சியானோம். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஊ.செ.வை நியமனம் செய்துவிட்டோம், நான் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை'' என்றார். "ஒ.செ கலந்துகொண்டு, அமைச்சரோடு நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறதே' எனக்கேட்டபோது ""எனக்கு அது தெரியாது'' என்றார்.

""மா.செ. முத்தமிழ்செல்வியை சீனியர் நிர்வாகிகள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு ஒரு மாதத்துக்கு முன்பு எக்ஸ் மா.செ தேவராஜ் மீண்டும் மா.செ பதவியை குறிவைத்து காய்நகர்த்தினார். இதில் அதிர்ச்சியான திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி பகுதி நகர, ஒன்றிய நிர்வாகிகள் பொருளாளர் துரைமுருகனிடம், "தேவராஜ் வேணாம், முத்தமிழ்செல்வியே இருக்கட்டும்' என கையெழுத்திட்ட கடிதம் தந்துவிட்டு வந்தவர்கள், தற்போது மா.செவுக்கு ஓரளவு ஒத்துழைப்பு தரத்துவங்கியுள்ளனர்'' என்கின்றனர் கட்சியினர். ஒரு வாரத்துக்கு முன்பு ஜோலார்பேட்டைக்கு வந்த துரைமுருகன், அமைச்சரோடு நெருக்கமாக உள்ள தகவலை கேள்விப்பட்டு ஒ.செ சத்தியமூர்த்தியை சத்தம் போட்டுவிட்டு சென்றுள்ளார். "அமைச்சருடன் நெருக்கமாக இருக்கின்றீர்களா?' என தி.மு.க. ஒ.செ. சத்தியமூர்த்தியிடம் கேட்டோம். ""உள்கட்சித் தேர்தல் வருதுல்ல. அதான் என்மேல புகார் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். என்னைப் பற்றி புகார் சொன்னவர்கள்தான் அமைச்சர் வீரமணியால் லாபம் பார்க்கிறார்கள். தொகுதியில் வீரமணியை எதிர்ப்பவன் நான் மட்டும்தான். மேலும் என்னைப் பற்றிய புகார்களுக்கு தலைமையிடம் விளக்கம் அளித்துவிட்டேன்'' என்கிறார். மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சரின் கண் அசைவில் பல தி.மு.க. நிர்வாகிகள் இருப்பது தேர்தல்களில் சேதத்தைதான் உருவாக்கும் என்கிறார்கள் நடுநிலையான நிர்வாகிகள்.

Advertisment

-து. ராஜா