கடலூர் மாவட்டத்தில் 126 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தமிழக அரசு, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாகக் கொள்முதல் செய்து வருகிறது. குறிப்பாக திட்டக்குடி வட்டத்திலுள்ள கூடலூர், கொட்டாரம், தர்மக் குடிக்காடு, போத்திர மங்கலம், வெண் கரும்பூர், மாளிகைக் கோட்டம், மருவத்தூர், பட்டூர், கோடங்குடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் கொண்டுவரும் நெல்லைக் கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். அதனால், அங்கு நெல்லைக் கொண்டுவந்த விவசாயிகள் தினசரி, அதை அங்கேயே இருந்து இரவு பகல் பாராமல் காவல் காத்து வருகிறார்களாம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய செங்கமேடு விவசாயி சபாபதி, "20 நாட்களுக்கு முன் சுமார் 40 மூட்டை நெல்லை கொட்டாரம் அரசு கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்து அன்றிலிருந்து காத்திருக்கிறேன். எப்போது எனது நெல்லை எடுத்துக்கொள்வீர்கள் என்று கேட்டால், நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது என்றார்கள். உடனே விவசாயிகள் எல்லோரும் ஒன்றுகூடி போராட்டம் செய்யப் போவ தாகக் கூறினோம். அதன்பிறகு நெல்கொள்முதல் செய்யும் மைதானத்தில் நெல்லைக் கொட்டிக் குவித்து வைக்குமாறு கூறினார்கள். அதன் பிறகும் நெல்லை எடைபோட்டு எடுக்காமல், இன்று நாளை என்று போக்கு காட்டி வருகிறார்கள்''’என்றவர்...
"முன்பெல்லாம், விற்பனைக்கு நெல் கொண்டுவரும் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் டோக்கன் கொடுப்பார்கள். அந்த டோக்கன் வரிசைப்படி நெல்லை கொள்முதல் செய்வார்கள். இப்போது அந்த டோக்கன் முறையையும் நிறுத்திவிட்டார்கள். நெல்லை எடுக்காமல் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டாலும் பதில் சொல்ல மறுக்கிறார்கள். அதனால் வீட்டுக்குக்கூட போகாமல் இரவு பகலாய் நெல்லைப் பாதுகாத்துக் கொண்டு காத்துக் கிடக்கிறோம். திடீரென்று மழை வந்தால் என்ன செய்வது?''’என்கிறார் கவலையும் ஆத்திரமுமாக.
வெலிங்டன் ஏரி கால்வாய்ப் பாசன விவசாய சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரமோ ’"இது குறித்து நாங்கள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கடலூர் மண்டல மேலாளர் தேன்மொழியிடம் கேட்டபோது, சம்பா பருவ காலம் என்பது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விவசாயிகள் நடவு செய்து டிசம்பர் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்துவரும் நெல். அதை மட்டும்தான் நாங்கள் கொள்முதல் செய்வோம். அதற்கான காலமும் முடிந்துவிட்டது. இனிமேல் நவரை பருவத்திற்கான கொள்முதல் காலமான ஜூன் மாதத்திலிருந்துதான் கொள்முதல் துவங்கும்னு சொல்கிறார். இது தவறான நடைமுறை.
கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பரில்தான் மழை பெய்தது. அது வெலிங்டன் ஏரியில் 29 அடிவரை தண்ணீரை நிறைத்தது. அதை ஜனவரி பதினோராம் தேதிதான் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரும் அமைச்சராக இருந்த சம்பத்தும் பாசனத்திற்குத் திறந்து விட்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், "இன்றுமுதல் 110 நாட்கள், ஏப்ரல் மாதம் முடிய, இந்த ஏரியை நம்பி உள்ள சுமார் 64 கிராமங் களைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமான 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு விவசாயம் செய் யுங்கள்'' என்றார். அதன்படிதான் பயிரிட்டு மே மாதத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, கொள்முதல் நிலையங் களுக்குக் கொண்டுவந்தோம். ஆனால், இது குறுவைப் பருவ நெல் இல்லையென்று சொல்லி, நெல்லை வாங்க மறுக்கிறார்கள். இப்படி யொரு கொடுமையை எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?''’ என்கிறார் காட்டமாக.
விவசாயிகள் எல் லோரும் இதே கருத்தை பல்வேறு உணர்ச்சி பாவங்களோடு நம்மிடம் வெளியிட்டனர். குறிப்பாக வெலிங்டன் ஏரியை நம்பி விவசாயம் செய்துள்ள தொளார், கொட்டாரம், வையங்குடி, கூடலூர், கொடிக்களம், திருவட்டத்துறை, இறையூர், பெண்ணாடம், கொத்தட்டை, மேலூர், மருவத்தூர், சிறுமுளை, பெருமுளை, சாத்தனத்தம், எரப்பாவூர் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களும் இதையே முன்மொழிந்து குமுறுகின்றன.
பரவளூர் விவசாயிகளோ, "கொள்முதல் நிலையங்களின் அடாவடியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நிலை ஏன்?' என, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தேன்மொழியைத் தொடர்புகொண்டு விளக்கம் பெற முயன்றோம். அவருக்கு என்ன பிரச்சினையோ, நம் அழைப்பே எடுக்கவே இல்லை. அடுத்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமைப் பொதுமேலாளர் மீனாட்சிசுந்தரத்தைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டபோது, "நீங்கள் கடலூர் மண்டல மேலாளரிடம் தொடர்புகொண்டு கேளுங்கள்'’ என்றார். அவர் செல்போனை எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்தோம். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரும் அழைப்பை ஏற்கவில்லை. அதனால், அவரது வாட்ஸ்-ஆப் எண்ணில், விவசாயிகளின் பிரச்சினை குறித்த விபரங்களை விரிவாக எழுத்து மூலம் அனுப்பினோம். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை.
"தீர்வு கிடைக்காதா?' என்ற கவலையோடு காத் திருக்கிறார்கள் பரிதாபத் திற்குரிய விவசாயிகள்.