அ.தி.மு.க.வில் 2026 தேர்தலையொட்டி சீட் கேட்டு கட்சியின் தலைமையகத்தில் டாக்டர் சரவணன் பணம் கட்டியதுதான் தாமதம், அவருக்கெதி ராக எப்போதுமே எதிரும்புதிருமாக இருந்த மதுரையின் மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒன்றுசேர்ந்து அவர் கேட்கும் மூன்று தொகுதி களுக்கும் முட்டுக்கட்டை போட்டுவருகின்றனர். என்றாலும் டாக்டர் தன் முயற்சியைக் கைவிட வில்லை.

Advertisment

தி.மு.க.வோ இந்த தேர்தலில் எப்படியாவது அ.தி.மு.க.வின் மூன்று மாவட்டச் செயலாளர் களான செல்லூர் ராஜு, இராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீண்டும் அவரவர் தொகுதியில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி வேலையை முடுக்கிவிட, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களோ தாங்கள் தோற்கிறோமோ… இல்லையோ… இப்ப கட்சிக்கு வந்து எடப்பாடியிடம் நெருக்கத்தை வளர்த்து கட்சித் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்று வளர்ந்துவரும் சரவணன் தங்களுக்குப் போட்டி யாக வளர்ந்துவிடக்கூடாது என டாக்டர் சரவணனை விரட்டியடிப்பதில் குறியாக இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

Advertisment

இதுகுறித்து அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவர் கூறும்போது, "மதுரையில் டாக்டர் சரவணன் அரசியலைத் தாண்டி மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், நிலையாக எந்தக் கட்சியிலும் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. அ.தி.மு.க.விலிருந்தும் கூட அவரே வெளியேறும் படி செய்துவிடுவார்கள். டாக்டர் சரவணனை ம.தி.மு.க., தி.மு.க. பா.ஜ.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி வெளியேற்றியவர்கள் அந்தந்த கட்சி மாவட்டச் செயலாளர்களே. தற்போது 2026-ல் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு என்று மூன்று தொகுதிக்கும் சீட் கேட்டு அ.தி.மு.க. தலைமையிடத்தில் பணம் கட்டிவிட்டுத் திரும்பினார். 

அதே நாளிலேயே திருப்பரங்குன்றத்துக்கு புறநகர் மாவட்டச் செயளாளர் இராஜன் செல்லப்பா பணம் கட்ட, அவருக்கு ஆதரவாக செல்லப்பா பெயரில் இரண்டு பகுதிச் செயலாளர்கள் பணம் கட்டியிருக்கிறார்கள். அதேபோன்று மதுரை வடக்கிற்கு செல்லூர் ராஜு ஆதரவாளர்களான பகுதிச் செயலாளர் மாணிக்கம் கட்ட, மதுரை தெற்கிற்கு உதயகுமார் ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பணம் கட்டி, டாக்டர் சரவணனுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். மதுரையைப் பொறுத்தவரை எப்போதுமே எதிரும்புதிருமாக இருக்கும் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களான இராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மூவரும் இந்த புதுவருடப் பிறப்பன்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது கட்சி வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

Advertisment

madurai-admk1

டாக்டர் சரவணனுக்கு எந்தத் தொகுதியும் கிடைக்கக்கூடாது, அவர் எடப்பாடிக்கு நெருக்கமாவதை தடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, திருப்பரங்குன்றம் எப்போதுமே சிட்டிங் எம்.எல்.ஏ. இராஜன் செல்லப்பாவிற்குதான் இருக்கும். திருப்பரங்குன்றம் தீப பிரச்சனைக்குப் பிறகு தங்களுக்கு இத்தொகுதியில் செல்வாக்கு உள்ளது என்று நம்புகிறது பா.ஜ.க. நம்ம கட்சியில் ஒற்றுமையாக இல்லாமல் அவருக்கு சீட் கொடுக்காதீங்க,… இவ ருக்கு கொடுக்காதீங்கன்னு சண்டை போட்டால் திருப்பரங்குன்றத்தை தூக்கி அவர்களுக்குக் கொடுத்து விடுவேன் என்று எடப் பாடி எச்சரிக்க, செல்லப்பா ஆடிப்போயிருக்கிறார். 

செல்லூர் ராஜுவோ, வடக்கு தொகுதி பகுதிச் செயலாளர் மாணிக்கத்திற்கு சீட்கொடுத்தால் செலவை நான் ஏற்றுகொள்கிறேன் என்று எடப்பாடியிடம் சொன்னதாக தகவல். அதற்கு எடப்பாடியோ,  மதுரை மேற்கில் இந்தமுறை வெற்றிபெறுவாயா? தொகுதி மாறி நிற்கிறேன் என்றாயே, தி.மு.க. தீவிரமா மேற்கில் செயல்படுவதாகத் தகவல் வருகிறது. முதலில் உன் தொகுதியில் கவனம்செலுத்து என்று கடிந்துகொண்டாராம். ஒருவேளை டாக்டர் சரவணனுக்கு வடக்கு தொகுதி கிடைத்தாலும் வடக்கிலிருக்கும் பகுதிச் செயலாளர்கள் மூலம் உள்ளடி வேலை பார்க்க வைக்கலாம் என்று இருக்கிறார். 

மாவட்டச் செயலாளர் பதவிமீது சரவணனுக்கு ஒரு கண்ணிருக்கிறது என்று நம்புகிறார் செல்லூரார். மேலும், வடக்கு தொகுதியில் சரவணனின்  வீடும் மருத்துவ மனையும் இருப்பதால் அந்தப் பகுதி மக்களிடம் செல்வாக்கும் இருக்கிறது. 

நான்தான் அவரை உள்ளே கொண்டு வந்தேன் என் அனுமதியில்லாமலேயே எடப்பாடியாரை சந்திக்கிறார், சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார் ஆர்.பி. உதயகுமார். அதனால் மதுரை தெற்கு தொகுதியை தன் ஆதரவாளரும் சவுராஷ்ட்ரா சமூகத்தவருமான எஸ்.எஸ்.சரவணனுக்கு கொடுக்கச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறார். மறுபக்கம், மதுரை தெற்கை பா.ஜ.க.வின் மகாலட்சுமி கேட்பதால் அவரையும் கொம்புசீவி விடுகிறாராம் ஆர்.பி.உதயகுமார். எப்படியிருந் தாலும் டாக்டரை வளரவிடக்கூடாது, அவருக்கு சீட் கிடைக்கக்கூடாது என்பதில் மூன்று பேரும் உறுதியாக இருக்கிறார்கள். 

சமீபத்தில் மதுரை மாநகராட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டரை மேடை யேற்றவில்லை. அவர் பெயரைக்கூட மேடையில் குறிப்பிடவில்லை. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் அடுத்துவந்த எம்.ஜி.ஆர் நினைவுநாள் போஸ்டரில் எந்த மாவட்டச் செயலாளர் போட்டோவும் இல்லாமல், எடப்பாடி படம் மட்டும் போட்டு போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்''’ என்றார்.

டாக்டர் சரவணனிடம் பேசினோம். "செல்லூர் ராஜுவால் வட்டச்செயலாளர் பதவியை இழந்த தம்பிதான் அந்த போஸ்டரை ஒட்டியது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கட்சியைப் பொறுத்தவரை தலைவர் எடப்பாடியாரின் முடிவுதான். அவர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவர்தான் வேட்பாளார். நான் முழு மனதுடன் உண்மையாகக் கட்சிக்கு உழைக்கிறேன். தேர்தலில் கட்சிக்காரர்களுக்கு என் சொந்தப் பணத்தை கொடுக்கிறேன். அதையும் தன்னிடம்தான் கொடுக்கவேண்டும் என்றால் என்ன நியாயம்?'' என்று முடித்துக்கொண்டார்.