தொகுதிவாசியான எங்களுக்கு சீட் தராம பக்கத்து தொகுதிக்காரரான அவருக்கே திரும்ப எப்படி சீட் தரலாம் என மா.செ.வுக்கு எதிராக நிர்வாகிகள் உள்ளடி வேலைகள் செய்ய அதிர்ந்துபோயிருக்கிறார் சிட்டிங் மா.செ. கம் எம்.எல்.ஏ.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க. மா.செ.வான தேவராஜ். இரண்டாவது முறையாக அவரை அங்கேயே நிறுத்த முடிவுசெய்துள்ளது தி.மு.க. தலைமை. மண்டல தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு, சிட்டிங் எம்.எல்.ஏ.வான நீங்கதான் ஜோலார்பேட்டை தொகுதிக்கு மீண்டும் வேட்பாளர். வேலை செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டார். அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரான அண்ணாதுரையை தொகுதிப் பொறுப்பாளராக்கி யுள்ளார். அதே நேரத்தில் ஜோலார்பேட்டை தொகுதிக்குள் மா.செ. தேவராஜுக்கு எதிரான வேலைகளை சீட் எதிர் பார்ப்பாளர்கள் செய்வது, தேவராஜுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த கூத்துக்கள் குறித்து நம்மிடம் பேசிய ஜோலார்பேட்டை நிர்வாகிகள், ஜோலார்பேட்டை தொகுதியில் இரண்டுமுறை வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக அமைச்சராக இருந்த அ.தி.மு.க. வீரமணியை எதிர்க்க 2021-ல் பலரும் தயங்கிய நிலையில் யாரை நிறுத்தலாம் என தி.மு.க. தலைமை ஆராய்ந்தபோது, வாணியம்பாடி தொகுதியைக் கேட்ட மா.செ. தேவராஜை தொகுதி மாற்றி கொண்டுவந்து ஜோலார்பேட்டையில் களமிறக்கியது தலைமை. அப்போது பத்திரிகைகள் உட்பட அனைத்து ரிப்போர்ட்களும் வீரமணிதான் வெற்றிபெறுவார் என சொல்லின. அதை உடைத்து தேவராஜ் வெற்றிபெற்றார். இதனால் அடிபட்ட சிங்கமாக சீறிக்கொண்டிருக்கும் வீரமணி, வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என களப்பணி செய்துவருகிறார். வீரமணியை எதிர்க்கனும், அவருக்கு ஈக்வலாக பணம் செலவு செய்யவேண்டும், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வேலை வாங்கவேண்டும் என்றால் தொகுதி எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான தேவராஜ்தான் சரியாக வருவார் என அவரையே மீண்டும் நிறுத்த தலைமை முடிவுசெய்துள்ளது.
அவரோ எனக்கு ஜோலார் பேட்டை வேண்டாம், வாணி யம்பாடி தாங்க என கோரிக்கை வைத்து தீவிரமாக முயற்சி செய்கிறார். இதனை, வீரமணி யைப் பார்த்து தேவராஜ் பயப் படறார் என்பதுபோல் இதைப் பேசுகிறார்கள்.
இதுகுறித்து அவரிடமே, "நீங்க வீரமணி யைப் பார்த்து பயப்படறதா நம்மாளுங்களே பேசறாங்கண்ணே'' என்றதும், "வீரமணியைப் பார்த்து எனக்கு பயமில்ல, அவரைத் தோற் கடிச்சுத்தானே நான் எம்.எல்.ஏ.வாகியிருக்கன். மீண்டும் அவரைத் தோற்கடிக்கும் அளவுக்கு தொகுதிக்கு செய்திருக்கேன். அவரைப் பார்த் தெல்லாம் பயப்படல. நம்ம கட்சி ஒ.செ.க்களின் குடைச்சலைத் தாங்க முடியல, தங்களுக்கு சீட் வேணும்னு ஒவ்வொருத்தரும் எனக்கெதிரா குழி பறிக்கிறாங்க, வீரமணியோட சேர்ந்துக்கிட்டு என்னை தோற்கடிச்சிடுவாங்க போல இருக்கு. வாணியம்பாடி எனது தொகுதி. ஆலங்காயம் ஒன்றியத்துக்குள் திரும்பிய பக்கமெல்லாம் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். அங்கு நின்றால் சுலபமாக வெற்றி பெற்றுவிடுவேன்''’என்கிறாராம்.
ஜோலார்பேட்டை தொகுதி யில், நாட்றம்பள்ளி ஒ.செ. முன்னாள் எம்.எல்.ஏ. சூர்யகுமார், ஜோலார் பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒ.செ. கவிதா தண்டபாணி, கிழக்கு ஒ.செ. உமா கண்ணுரங்கம் இருக்காங்க. இவங்க ஒவ்வொ ருத்தருக்குள்ளயும் எம்.எல்.ஏ.வாகணும்கிற கனவு இருக்கு. 2016 தேர்தலில் அமைச்சராக இருந்த வீரமணியை எதிர்த்து கவிதா தண்டபாணி நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார், 2021-ல் மீண்டும் சீட் எதிர்பார்த்தார், கிடைக்கவில்லை. 2026-ல் எப்படியாவது சீட் வாங்கிடணும்னு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி வழியாக லாபி செய்றார். இதேபோல் உமா, சதீஷ், சூர்யகுமாரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுபற்றி மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் மா.செ. மீது கவிதா புகார்சொன்னாங்க, இதே வேலையாம்மா… போய் வேலையைப்பாருன்னு திட்டி அனுப்பிட்டாரு. இவுங்களும் விடாம ஏதாவது குறை சொல்லிக் கிட்டேயிருக்காங்க. இவங்களைப் போலவே உமா கண்ணுரங்கம் எதிர்க்கறாங்க. எனக்கு எம்.பி. அண்ணாதுரை சப்போர்ட் இருக்குன்னு ஒ.செ. சதீஷ், மா.செ.வை எதிர்த்து சாதி அரசியல் செய்கிறார். இவர்கள் மூவரும் தனித்தனியா இருந்தாலும் மா.செ.வை எதிர்ப்பதில் கைகோர்த்து செயல்படறாங்க. தேவராஜ் மீண்டும் ஜெயிச்சிட்டா, நமக்கெல்லாம் பிரச்சினை அப்படின்னு நினைச்சிக்கிட்டு ஜோலார்பேட்டையிலிருந்து தேவராஜை துரத்தணும், நம்மள்ள யாராவது ஒருத்தருக்கு சீட் கிடைக்கணும்னு முடிவுசெய்து மா.செ. பெயரை டேமேஜ் செய்யறாங்க. இது மா.செ.வை அதிர்ச்சியடைய வச்சிருக்கு. தனக்கு எதிராக இப்படி செய்பவர்கள், தேர்தலின்போது தன்னை தோற்கடிக்க வேலை செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்னு யோசிக்கிறார். அ.தி.மு.க. வீரமணி எங்கள் கட்சி நிர்வாகிகள் சிலரை தொகுதியில் டீல் பேசிக்கிட்டு இருக்காருங்கற தகவலும் வந்திருக்கு. அதனால் தனக்கு வாணியம்பாடி தொகுதியைத் தாங்க என
பொறுப்பு அமைச்சரிடமும், தலைமையிடமும் முறையிடலாமா என யோசிக்கிறார்''” என்கிறார்கள்.
இந்த தொகுதி மட்டுமல்ல, பல தொகுதிகளில் இப்படிப்பட்ட கோஷ்டிப் பூசல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கடைசி நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைக்காமல் உடனே தலைமை இதனைக் கவனித்து உள்ளடி வேலை செய்பவர்களை எச்சரிக்கவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/14/jolarpet-2026-01-14-17-31-08.jpg)