ராஜ்பவனில் நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி பதவி ஏற்பு விழாவில், நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கியதில் மரபுப்படியான மரியாதை காட்டப்படவில்லை என நீதிபதி வி.எஸ்.ரமேஷ் வெளிப்படை யாக புகார் வாசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதுபோல தமிழகம் முழுவதும் கவர்னர் மாளிகைக்கு எதிராக புகார்கள் வெளிவந்திருந்தன.
கவர்னர் மாளிகையிலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலும் விருந்தினர்களை கவனிப்பதற்கென்றே தனி அதிகாரிகள் இருக்கிறார்கள். தலைமை நீதிபதி பதவியேற்கும் விழாவில் நீதிபதிகளுக்கு இருக்கைகள் எங்கே ஒதுக்கப்பட்டுள்ளன என உயர்நீதிமன்றத்தில் உள்ள விருந்தினர்களை கவனிக்கும் பொறுப்புடைய பதிவாளர், கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டிருக் கிறார். அவர், ""எங்கள் வேலையில் நீங்கள் மூக்கை நுழைக்காதீர்கள்'' என நேரடியாகவே சொல்லிவிட்டார். ஆனால் விழா நடந்தபோது அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு அடுத்து பின் வரிசையில் தான் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அதிலும் தாமதமாக வந்த நீதிபதிகள் வழக்கறிஞர்களுடன் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.
டென்ஷனான உயர்நீதிமன்ற நீதிபதிகள், கவர்னர் மாளிகையில் நடந்த அவமதிப்பு பற்றி விருந்தினர்களை கவனிக்கும் அதிகாரம் கொண்ட உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் கவர்னர் மாளிகை உயரதிகாரியான ராஜகோபால் தொடங்கி ஒட்டு மொத்தத்துக்கும் கவர்னர் மாளிகைதான் காரணம் என விளக்கினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷின் வெளிப்படையான புகாருக்கு கவர்னர் மாளிகையின் பதில் என்ன? என கவர்னரின் செய்தித் தொடர்பாளரான சரவணனிடம் கேட்டோம். ""அதுகுறித்து எந்த பதிலும் இல்லை'' என்றார்.
கவர்னரின் செயலாளராக இருக்கும் ராஜகோபால் இதற்கு முன் பிரதமர் மோடியின் அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தார். மோடியுடனான அவரது நெருக்கம் அவரை கண்டாலே மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயப்படும் சூழலை உருவாக்கியது. அந்த கித்தாப்புடன் கவர்னரின் செயலராக வந்த அவர் தான் வைத்ததுதான் சட்டம் என செயல்படுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைவரும் ராஜகோபால் என்றாலே அலறுகிறார்கள். கைது செய்யப்பட்ட ஒரு மோசடிப் பேர்வழியை ராஜகோபால் சொன்னதால் பதினைந்து நிமிடத்தில் விடுதலை செய்த கொடுமையும் நடந்துள்ளது என ஒரு அதிர்ச்சித் தகவலை சொல்கிறார்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலூர் ஃபோர் ட்வெண்ட்டி என பெயரெடுத்தவர்கள் ராமமூர்த்தி ரெட்டி, வெங்கடேஷ். பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் ஏழு ஏக்கர் நிலம் ஒன்று விற்பனைக்கு வருகிறது. அந்த நிலத்தை 30 கோடிக்கு விலைபேசி 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்கள் வேலூரைச் சேர்ந்த காந்தி, நந்தகுமார், சேகர் உத்தம் ஆகியோர். இவர்களோடு சேர்ந்து கொள்கிறார் வெங்கடேஷ். நான்குபேரும் தலா 50 லட்சம் போட்டு நில உரிமையாளரான சுந்தரராஜனிடம் இருந்து "அக்ரிமெண்ட் போட்ட அடுத்த வருடத்தில் நிலத்தின் மதிப்பான 30 கோடியை தந்து விடுகிறோம்' என 18.10.2010-ல் வாங்குகிறார்கள். அதற்குள் ராமமூர்த்தி ரெட்டியும் வெங்கடேஷும் அதே நிலத்தை பிரம்மானந்தம் என்கிற ஆந்திர தொழிலதிபரிடம் விற்க ஏற்பாடு செய்கிறார்கள். "இன்னும் ஒரு வருடத்தில் இதே நிலத்தை 60 கோடிக்கு விற்று தருகிறோம்' என ஆசை காட்டியவுடன் பிரம்மானந்தம் அந்த நிலத்தை வாங்குகிறார்.
பிரம்மானந்தத்திற்கு நிலத்தை விற்கும் போது, ஏற்கனவே அந்த நிலத்தின் பூர்வீக உரிமையாளரான சுந்தரராஜனிடம் காந்தி, நந்தகுமார், சேகர் உத்தம் ஆகியோர் கொடுத்த 2 கோடிக்காக ஒரு பகுதி நிலத்தை வாங்கி, தங்களது மனைவிகள் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார்கள். ராமமூர்த்தி ரெட்டி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் பிரம்மானந்தத்திடம் சொல்லியபடி அந்த நிலத்தை அதிக விலைக்கு விற்கவில்லை. இந்த இருவருடன் சேர்ந்து சுந்தரராஜனிட மிருந்து நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காந்தி, நந்தகுமார், சேகர் உத்தம் ஆகியோருக்கும் அவர்கள் கொடுத்த தொகையை திரும்பத் தரவில்லை. அந்த நிலத்தில் சைக்கிள் ஸ்டேண்ட், கார் ஸ்டேண்ட் ஆகியவற்றை அமைத்து பணம் பார்த்துக் கொண்டிருந்தனர் ராமமூர்த்தி ரெட்டியும் வெங்கடேஷும்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட அமைச்சரான வீரமணி தனிப்பட்ட முறையில் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருந்ததை செல்போனில் பதிவு செய்து அவரையும் மிரட்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் தனது இடத்தை பார்க்க வந்த பிரம்மானந்தம் அங்கு இரு வரும் பல்வேறு தொழில்கள் நடத்துவதை கண்டு கோபமடைந்தார்.
அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இருவரிடமும் ஏற்கனவே ஏமாந்த காந்தி, நந்த குமார், சேகர் உத்தம் ஆகியோர் வடக்கு மண்டல ஐ.ஜி.யான ஸ்ரீதரிடம் புகார் செய்தார்கள். ஸ்ரீதரின் உத்தரவின் பேரில் கடந்த வாரம் ராமமூர்த்தியையும் வெங்க டேஷையும் வேலூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
அவர்களை கைது செய்து கொண்டு வந்த பதினைந்தாவது நிமிடத்திற்குள் கவர்னரின் செயலாளரான ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., நேரடியாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார். வழக்கே போடாமல் இருவரை யும் ராஜமரியாதையோடு அனுப்பி வைத்தனர் போலீசார். தெனாவெட்டாக வெளியே வந்திருக்கிறார்கள் இருவரும்.
இதுபற்றி ராஜகோபாலின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டபோது, ""அவர் சீட்டில் இல்லை'' என்றனர் கவர்னர் மாளிகை டெலிபோன் ஆப ரேட்டரும், ராஜகோபாலின் பி.ஏ. ரமேஷும்.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்