2009-ஆம் ஆண்டு டிசம்பர் 3- ஆம் தேதி. அப்போதும் இதுபோல ஒரு புயல் பாதிப்புதான். சேறும் சகதியுமாக இருந்த சாலையில் சென்ற பள்ளி வேனின் டிரைவர் தனக்கு வந்த அழைப்புக்காக மொபைல் போனை காதில் வைக்க... வேன் நிலைதடுமாறி வளைவில் இருந்த நீர் நிரம்பிய கிணற்றில் விழுந்தது.
வேனில் 20 குழந்தைகளும், 21 வயதான சுகந்தி என்ற ஆசிரியையும் இருந்தனர். ஆசிரியை சுகந்தி தனது உயிரைப் பொருட்படுத்தாமல், வேனுக்குள்ளிருந்த 11 குழந்தைகளை கரை சேர்த்தார். மீதமிருந்த குழந்தைகளையும் காப்பாற்ற முயற்சித்தபோது, இரண்டு குழந்தைகளை அணைத்தபடி இறந்துபோனார்.
அன்றைக்கு, நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் நாகக்குடையான் என்ற கிராமம் சுகந்தியை தாயாக போற்றியது. அப்போதிருந்த தி.மு.க. அரசு ரூ.1 லட்சம் நிதி கொடுத்தது. அதன்பின்னர், "முரசொலி அறக்கட்டளை' சார்பில் அண்ணா பதக்கமும், ரூ.25 ஆயிரம் பணமும் வழங்கப்பட்டது. அரசு சார்பில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தரவும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அந்த உறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசு வழங்கிய நிதியில் இந்திரா குடியிருப்பு வீட்டை கட்ட முடியாமல், முன்பக்கம் குடிசைபோட்டு சுகந்தியின் குடும்பம் குடியிருந்தது.
ஆனால், பட்டகாலில் படும் என்பதுபோல கஜா புயலில் சுகந்தி வீடும், வீட்டைச் சுற்றிலும் வளர்க்கப்பட்ட தென்னை மற்றும் மா மரங்களும் சரிந்துவிட்டன. இப்போது மீண்டும் நிர்க்கதியாக நிற்கிறது அந்தக் குடும்பம். ஆசிரியை சுகந்தியின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு நாகக்குடையான் கிராமத்தில் தி.மு.க. அரசு சார்பில் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க. அரசு அமைந்த பிறகு யாரும் அந்தக் குடும்பத்தை கண்டுகொள்ளவே இல்லையாம். அந்தச் சோகம் நடந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அரசாங்கம் கண்டுகொள்ளாவிட்டாலும், தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் பள்ளிக்குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். கஜா புயலால் சீர்குலைந்த அந்தக் குடும்பத்தினரை நாகக்குடையான் கிராமம் சென்று சந்தித்தோம். மகளை இழந்த சோகத்தில் இருந்த தாய் அன்னலெட்சுமியிடம் பேசினோம்.…""அப்போவும் ஒரு புயலில் இதுபோலத்தான் எங்கள் வீடு நாசமடைந்தது. ஆனால், எங்கள் மகள் சுகந்தி, "கவலைப்படாதீங்க. சீக்கிரமாவே எனக்கு டீச்சர் வேலை கிடைச்சுரும். மாடிவீடு கட்டி ஒங்களக் குடிவக்கிறேன்'னு சொன்னாள். கலைஞரய்யா கொடுத்த ஒரு லட்ச ரூபாயை வச்சு அரசு கொடுத்த தொகுப்பு வீட்டைக் கட்ட ஆரம்பிச்சோம். அதுவும் முடியல. இப்போ அந்த வீடும் நொறுங்கிக் கிடக்கு''’என்று வாய்விட்டு அழத் தொடங்கினார்.
சுகந்தி தம்பி ராஜ்மோகன், ""கூலி வேலைய நம்பித்தான் இதுவரைக்கும் எங்க குடும்பம் ஓடுச்சி. நானும் எலெக்ட்ரிகல் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிச்சிட்டு, வேலை இல்லாம தோட்ட வேலைக்குத்தான் போறேன். புயலில் தோட்டங்கள் அழிஞ்சிட்டதால, இனி அந்த வேலையும் கிடைக்காது. அரசாங்கம் சொன்ன மாதிரி எனக்கு ஒரு வேலை கொடுத்தா எங்கள் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்''’என்கிறார்.
புயலில் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டிக்கொண்டிருந்த சுகந்தியின் அப்பா மாரியப்பனிடம் பேசினோம்.…""எம்பொண்ணு போனதுல இருந்து வீடு வீடாகவே இல்லைப்பா. ஒன்பது வருஷமாச்சு. கிராமத்துல கிடைக்கிற எந்த வேலைக்கும் போயிருவேன். எனக்கு அதுவே ஆறுதலா இருக்கும். ஆனால், என்னோட மனைவியின் நிலைமைதான் பாவம். சுகந்தியின் பொருட்களை எடுத்துப் பார்த்து அழும். என் பொண்ணோட படிச்ச பொண்ணுக குடும்பமும் குடித்தனமுமா இருக்கதைப் பார்த்தா அழத்தொடங்கிரும். எம்பொண்ணு இறந்தப்போ, தி.மு.க. ஆட்சி நடந்துச்சு. அப்ப நாகை மாவட்ட கலெக்டரா இருந்த முனியநாதன் எங்க நிலமைய புரிஞ்சிக்கிட்டு "உங்க மகன் டிப்ளமா முதலாம் ஆண்டு படிக்கிறான், படிச்சி முடிச்சதும் வேலை நிச்சயம் கிடைக்கும்'னு சொன்னார். அதுக்குப்பிறகு அ.தி.மு.க. ஆட்சி வந்துச்சு. கலெக்டரும் மாறிட்டார், நாங்களும் நடையா நடக்கிறோம் எந்த பலனும் கிடைக்கல''’என்றார்.
சுகந்தியின் குடும்பச்சூழலை அங்கிருந்தபடியே, நாகை எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் தொடர்புகொண்டு கூறினோம். அதற்கு அவர், “""முதல்வரிடம், சுகந்தியின் குடும்பத்தினரை நேரடியாக நானே அழைத்துச் சென்று குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசாங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அதோடு அவர்களின் வீட்டை அரசாங்க உதவியோடு கட்டி முடிக்கவும் உதவுகிறேன். எங்கள் கட்சி சார்பில் உடனடித் தேவைகளையும் நிறைவேற்றுவோம்''’என்றார்.
-க.செல்வகுமார்