திண்டுக்கல், நல்லாம் பட்டி -பாரதி நகரைச் சேர்ந்தவர் முருகன் என் கின்ற "பாத்ரூம் முருகன்'. தி.மு.க. பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநக ராட்சியில் ஒப்பந்த தாரராக உள்ளார். ஊரெங்கிலும் கட்டணக் கழிப்பறை யை ஏலம் எடுத்து வசூலித்துவந்ததால் இவருக்கு "பாத்ரூம் முருகன்' என்கின்ற பட்டப் பெயர் உருவாகியுள்ளது. இவரது படுகொலைதான் திண்டுக்கல்லை அதிரவைத்துள்ளது.
"திண்டுக்கல்லில் முதன்முதலில் சந்தைப்பேட்டைப் பகுதியில் ஆடு வதை செய்யும் கூடத்தினை ஏலம் எடுத்ததுதான் இவரது முதல் தொழில். அதன்பிறகே பேருந்து நிலையத்திலுள்ள கட்டணக்கழிப்பறைகளை ஏலமெடுத்தார். அன்றைய நாளில் அ.தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக இருந்தபொழுது ஆடு வதைக்கூட ஏலத்தினை முருகன் எடுக்கக்கூடாதென ரூ.10 லட்சத்திற்கு போகும் ஏலத்தொகையை ரூ80 லட்சத்திற்கு உயர்த்திவிட்டது சீனிவாசன் தரப்பு. இருப்பினும் இது எனக்கான சவால் என ரூ.82 லட்சம் கொடுத்து ஏலமெடுத்து உரிமையை தன் வசமாக்கினார். பண அதிகாரம் கண்ணை மறைக்க கட்டப்பஞ்சாயத்துக்களில் இறங்கி யிருக்கிறார். அதிலும் கணிசமான வருமானம் வர அடியாட்களின் எண்ணிக்கை அதிகமானது. காவல்துறைக்கும் தனியாக மாதச்சம்பளம் முருகனிடமிருந்து சென்றது. பணம் மட்டுமே முருகனின் தாரக மந்திரம். அதற்காக யாராக இருந்தாலும் பகைத்துக்கொள்வார். அதன் விலைதான் இப்பொழுது நடந்துள்ளது..'' என்கிறார் திண்டுக்கல் பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர்.
வியாழக்கிழமையன்று பிற்பகலில் நத்தம் கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி பகுதியில் ஸ்கார்ப்பியோ காருக்குள் ஒருவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் வர, சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர் மாநகராட்சி ஒப்பந்தக்காரரும், கட்டப்பஞ்சாயத்து செய்பவருமான "பாத்ரூம் முருகன்' எனவும், உடல் கிடந்த அந்த ஸ்கார்ப்பியோ காரும் அவருடையது என தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில், கொலையில் ஈடுபட்டதாக வீரபத்திரன், சங்கர், விஜய், சரவணன், ஷேக்பரீத் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
"பாத்ரூம் முருகனுக்கு' கட்டணக் கழிப்பறை எடுப்பதில் மணப்பாறையில் முன்விரோதமும், தேனியில் லாட்ஜ் லீசுக்கு நடத்தியதில் ஒரு முன்விரோதமும் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவுசெலவு கணக்கு பார்ப்பது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் உள்ளிட்ட சிலரை ஊரிலிருந்து ஒதுக்கிவைத்தது தொடர்பாகவும் முன்விரோதம் உள்ளது'' என கொலைக்கான காரணத்தைத் தேடியது காவல்துறை. இந்த நிலையில், வீரபத்திரன், சங்கர், விஜய், சரவணன், ஷேக்பரீத் ஆகியோர் கைதாக... உண்மை வெளியானது.
விசாரணை அதிகாரி ஒருவர், "புதன்கிழமையன்று வழக்கமாக வரும் டிரைவர் அன்றைய தினம் வராததால் வெளியில் செல்ல ஷேக்பரீத்தை டிரைவராக வரக் கூறியிருக் கின்றார் "பாத்ரூம் முருகன். மேட்டுப்பட்டியி லிருந்து மதுரைக்குச் செல்லவேண்டுமென முருகன் கூற, மதுரைக்குச் சென்றிருக்கிறான் ஷேக்பரீத். செல்லும் வழியில் கூட்டாளியான வீரபத்திரனுக்கு தகவல் கூற, இடையில் வாகனத்தை நிறுத்திய நிலையில் வீரபத்திரன், சங்கர், விஜய் மற்றும் சரவணன் வலுக்கட்டாய மாக காரில் ஏறியுள்ளனர். நடுசீட்டில் முருகனை உட்காரவைத்து கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி, பின்புறம் இருவர் அழுத்திப்பிடித்த நிலையில் வண்டி பாலமேடு சென்றிருக்கிறது. அங்கிருந்துதான் முருகனை வைத்து அவரின் குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி கேட்டிருக் கின்றனர். முதல் தவணையாக ரூ15 லட்சம் வந்தநிலையில், மீதமுள்ள பணத்தை வியாழக்கிழமை தருவதாக தவணை கேட்டுள்ளது முருகன் குடும்பம்.
இதேவேளையில், ரூ.15 லட்சம் கொடுத்ததையும், மீதிப்பணத்தை தருவதாகச் சொல்லியுள்ளதையும் கூறி முருகன் கடத்தப்பட்டதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் குடும்பத்தினர். மறுநாள் ரூ.35 லட்சம் பணம், ஒரு காசோலை ஆகியவற்றை கடத்தல் கும்பலிடம் கொடுக்க சமயநல்லூர் நான்கு வழிச்சாலைக்கு குடும்பத்தினர் புறப்பட்டி ருக்கின்றனர். கடத்தல் கும்பலில் இருந்த ஒருவன் பணத்தை வாங்க வரும்பொழுது எங்களிடம் சிக்கினான். அவனை வைத்து மீதமுள்ளவர்களைக் கைது செய்தோம். இது முழுவதும் வீரபத்திரனின் ஸ்கெட்ச். வீரபத்திரன் முருகனின் சிஷ்யன். நீண்ட நாட்களாக தன்னிடம் அடியாளாக வேலை பார்த்தவனை கோவில் பிரச்சனையில் ஒதுக்கிவைத்ததுதான் அவனது கோபத்திற் கான காரணம்'' என்கிறார் அவர்.
தொடர் விசாரணையில், "அவன் கூடவே இருந்தேன். அவன் சொல்றதை யெல்லாம் செய்தேன். ஊரில் வளர்ந்துவருவது முருகனுக்குப் பிடிக்கலை. ஒருகட்டத்தில் அவன் செய்த குற்றத்தை என்மீது சுமத்தி என்னை ஊரிலிருந்து விலக்கிவைத்தான். நம்பிக்கைத் துரோகம் செய்தவனை கொலைசெய்யும் தருணத்திற்காகக் காத்திருந்தேன். பணத்திற்காக அவனைக் கடத்தவில்லை. இருப்பினும் என்கூட வந்தவர்களுக்காக அந்த விளையாட்டைச் செய்தேன். பணமும் கிடைத்தது. என்கூட இருந்தவன் பைபாஸில் மாட்டியதால் அங்கிருந்து பாலமேடு வழியாக கோபால்பட்டி வந்தோம். போலீஸும் வரவே ஜோத்தாம்பட்டி பகுதியில் அவனைக் கொலை செய்துவிட்டுப் புறப்பட்டோம். இப்பொழுது கைதாகியுள்ளோம்'' என்றிருக் கிறான் வீரபத்திரன்.
-நா.ஆதித்யா