ஒன்றிய அரசின் நீட் தேர்வில் மோசடி... நெட் தேர்வில் மோசடி என்று போராடும் சூழலில், டிப்ளமோ படிப்பு எனக்கூறி 1,664 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக ஒன்றிய அரசின் 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம்' அமைப்பின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்! இந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நூறு பேரோ, ஆயிரம் பேரோ அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சுமார் 12.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!
அப்படியென்ன மோசடியென்று பார்க்கலாம். மோடி அரசின் அப்போதைய கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிப்பதற்காக, பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்காக 2017ல், தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கான ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப் 'Diploma in Elementary Education(D.El.Ed)' ஒன்றை அறிமுகப்படுத்தியது. தனியார் மூலமாக ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு 2 லட்சத்துக்கு மேல் செலவழிக்கக்கூடிய சூழலில், வெறும் 13,000 ரூபாயிலேயே இந்த டிப்ளமோ படிப்பை முடிக்கலாமென்பதே இதன் சிறப்பு. முதலாம் ஆண்டுக்கு 4,500 ரூபாய். இரண்டாம் ஆண்டுக்கு 6,000 ரூபாய், அதோடு தேர்வுக்கட்டணமாக ரூ.2,500 ரூபாய் செலுத்தினாலே போதும்... மொத்தம் 13,000 ரூபாய்க்குள் டிப்ளமோ படித்து முடிக்கலாம். எனவே நாடு முழுக்க கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 12.8 லட்சம் பேர் வரை இணைந்தனர்.
இந்த டிப்ளமோ பாடத்திட்டத்தின் வகுப்புகள், 2017, செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, 2019 மார்ச் மாதத்தில் இந்த பயிற்சி முடிந்திருக்கிறது. மொத்தம் 18 மாதங்கள் நடைபெற்று, பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதைவைத்து வேலைவாய்ப்புகளைத் தேடிச்சென்றபோது, அந்தந்த மாநிலங்களில் முதலில் இவர்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. இந்த டிப்ளமோவில் பீகாரில் அதிகபட்சமாக 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். அதற்கடுத்து உத்தரபிரதேசத்தில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 16 ஆயிரம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். இப்படி சேர்ந்து டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்கு வரும்போது, இதே படிப்பை தனியார் நிறுவனங்களில் படித்து முடித்தவர்கள், இதற்கெதிராக அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு சென்றிருக்கிறார்கள். இந்த டிப்ளமோ படிப்புக்கான சான்றிதழ், ஆவணங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்கள் அனைத்திலும் இரண்டு வருடப் படிப்புக்கான கோர்ஸ் எனக் கூறப்படுகின்றது. ஆனால் வெறும் 18 மாதங்களுக்குள் படித்து முடித்து தேர்வெழுதிவிட்டார்கள். 24 மாதப் படிப்பை முடிக்காதபோது எப்படி செல்லும்? என்று கேள்வியெழுப்பினர். இதுதொடர்பாக, தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் தலைவர் சந்திர பூஷன் சர்மா, "இந்த டிப்ளமோ கோர்ஸ் நாடு முழுக்க அங்கீகரிக்கப்பட்டது. சிலர் மட்டும் தவறான கருத்தைப் பரப்புகிறார்கள். மனிதவள அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில்தான் இந்தத் திட்டமே கொண்டுவரப்பட்டது.'' என்று தெரிவித்தார்.
பாட்னா உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2020 ஜனவரியில், இந்த டிப்ளமோ கோர்ஸ் செல்லுபடியாகும் என்று பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து, திரிபுரா உயர்நீதிமன்றம் மற்றும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றமும் இந்த டிப்ளமோ கோர்ûஸ அங்கீகரித்தன. இப்படி பாசிட்டிவான தீர்ப்புகள் வந்தபின்னர் இந்த டிப்ளமோ முடித்தவர்கள், பணிகளில் சேர விண்ணப்பித்து, பல்வேறு மாநிலங்களில் பணி நியமனம் பெற்றனர். டிப்ளமோ முடித்தவர்களில் 15% பேருக்கு தான் வேலை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தனியார் பயிற்சி நிறுவனங்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. உத்தரகாண்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை கொண்டு சென்றனர். இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம், கடந்த 2023 நவம்பரில், இந்த டிப்ளமோ கோர்ஸில் 18 மாதங்களுக்குள் படித்த படிப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, 12.8 லட்சம் பேரின் எதிர்காலத்திலும் பேரிடியாக விழுந்தது. இந்த டிப்ளமோ கோர்ஸ் திட்டத்தை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடாததும்கூட உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு தோற்றுப்போனதற்கு ஒரு காரணமென்று கூறப்பட்டதால், அதனை அரசிதழில் வெளியிடும்படி கடந்த டிசம்பரில் குடியரசுத் தலைவருக்கு கடிதமெழுதி கேட்டும், அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசில் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்!