வேலூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி ஸ்டேடியத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக காவல்துறைக்கும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் இடையேயான சட்ட மோதலால், அரசின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியாத நிலைக்கு வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தள்ளப்பட்டது.
தமிழக அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றதும், வேலூரில் விளையாட்டு மைதானம் அமைக்க, வேலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் துக்கு காட்பாடியில் 36 ஏக்கர் நிலம் ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. அப்போது அந்த இடத்தை பிரபலமான வி.ஐ.டி. நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்ததால், அதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வி.ஐ.டி.க்கு வழங்கமுடியாது என 2018-ல் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
அதன்பின் 2020 ஆம் ஆண்டு, 19.5 கோடி ரூபாயில், 8 பாதைகள் கொண்ட 400 மீட்டர் ஓடுதளம், ஹாக்கி, கோகோ, கபடி, இறகுப்பந்து, ஒரே நேரத்தில் 1,500 பேர் அமர்ந்து விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கும் வகையில் பார்வையாளர் மாடம், அலுவலகம் போன்றவை கட்டப்பட்டு, 2022, மார்ச் 14ஆம் தேதி காணொலிக் காட்சி வாயி லாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத் தார். அன்றே மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா போன்றவர்கள் கலந்து கொண்டு தடகள விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்தனர். அந்த மைதானம் கடந்த நான்கு மாதங்களாக பயன்படுத்தாமல் உள்ளது. அலுவலகக் கதவு ஜன்னல்கள் உடைந்து, குடிகாரர்களின் மைதானமாகக் காட்சியளிக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய விளையாட்டு வீரர்கள், "நீண்ட போராட்டத்துக்குப் பின் கிடைத்த இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாதபடி விளை யாட்டு மேம்பாட்டு ஆணையமே முடக்கிவைத்துள்ளது. இந்த மைதானத்துக்கு செல்லும் வழியின் குறுக்கே பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் உள்ளது. இங்கே மேம்பாலம் இல்லாமல் போய்வருவதில் பெரும் சிரமம் உள்ளது. தினமும் பல முறை இந்த கேட் மூடப்படுவதால், மேம்பாலம் கட்டினால் மட்டுமே இந்த விளை யாட்டு மைதானத்தை நன்முறையில் பயன்படுத்த முடியும்" என்றனர்.
திருவண்ணாமலை மண்டல விளையாட்டு மேம்பாட்டு முதுநிலை மேலாளர் பெரியகருப்பனிடம் கேட்டபோது, "ரயில்வே மேம்பாலம் வேண்டுமென எம்.பி கதிர்ஆனந்த், மாநகர கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு, விளையாட்டு வீரர்களுக்கான விடுதி கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது, அதற்கான பணிகள் நடக்கிறது. இன்னும் பல வசதிகள் வரவுள்ளன. அதன் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்கமுடி யாது'' என்றார்.