""ஹலோ தலைவரே, தேர்தல் பிரச்சாரத்துக்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வந்த பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் வரைக்கும் வசை பாடிவிட்டுப் போயிருக்காரே.''’’
""ஆமாம்பா, திண்டுக்கல் லியோனியையும் அவர் விட்டு வைக்கலையே?''’’
""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் ஆட்சியின் சாதனையைச் சொல்லி, தங்கள் கூட்டணிக் கட்சியின் ஆட்சிக்கு செய்யும் உதவிகளைச் சொல்லி ஓட்டுக் கேட்பாங்க. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் சாதனையா சொல்லப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒத்த செங்கலைக் காட்டி உதயநிதி கிண்டலா பிரச்சாரம் பண்றது க்ளிக் ஆயிடிச்சி. அந்தக் கடுப்புல, உதயநிதியை தி.மு.க.வின் பட்டத்து இளவரசர்னு எழுதிக் கொடுத்ததை மோடியும் பிரச்சாரம் பண்ணிட்டாரு. அதோடு, லியோனிக்கும் பாப்புலாரிட்டி கொடுத்துட்டாரு.''’’
""பெண்களுக்கு எதிரான கட்சிகள்னு தி.மு.க.வையும் காங்கிரசையும் மோடி விமர்சனம் பண்ணியிருக்காரே?''’’
""அதற்கான பின்னணி என்னன்னு நம்ம நக்கீரனில் தனிக் கட்டுரையே வந்திருக்கு. அதே நேரத்தில், ஆ.ராசாவின் பேச்சினால் ஏற்பட்ட சர்ச்சையை வைத்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி லாபம் தேட நினைப்பது எந்தளவுக்கு எஃபெக்ட் தரும்னு தி.மு.க. தரப்பு ரொம்ப கவனமா பார்க்குது. குறிப்பா, பெண்களிடம் தாக்கம் ஏற்படுத்த ஆளுந்தரப்பு முயற்சிப்பதிலிருந்து டேமேஜ் கண்ட்ரோல் பண்ணும் பணியை ஸ்டாலின் மருமகன் சபரீசன் டீம் கவனிக்குதாம். தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு ஆ.ராசாவும் வக்கீல் மூலமா பதில் கொடுத்திருக்காரு.''’’
""தேர்தல் களம் தி.மு.க.வுக்கு சாதகமா இருப்பதை நக்கீரன் உள்பட பல கருத்துக் கணிப்புகளும் முன்வைக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் புது வேட்பாளர்களின் தொகுதிகளில் தி.மு.க.விடம் வேகம் இல்லைங்கிறாங்களே? குறிப்பா, ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் எபிநேசருக்கு மா.செ., பகுதிச் செயலாளர்களின் ஒத்துழைப்பு சரியா இல்லையாமே?''’’
""கட்சிக்குள் சிலர் உள்குத்தில் ஈடுபடறது, சித்தரஞ்சன் சாலையின் கவனத்துக்குப் போயிருக்கு. இதையடுத்து சபரீசன், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, உள்குத்துப் பேர்வழிகளை சந்திச்சி கடுமையாக எச்சரிச்சிருக்கார். பல இடங்களிலும் பூத் செலவுக்கான பணம் பற்றிய புலம்பல் கேட்பதால், அதையும் சரி செஞ்சிக்கிட்டிருக்கு தி.மு.க. தரப்பு. ஆனா, தி.மு.க.வின் பூத் செலவு களுக்குக் கூட பணம் போய்டக்கூடாதுன்னு கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கவனிக்குது டெல்லி. தி.முக.வின் பசைப் பார்ட்டிகள் அனைவரும் கண்காணிப்பு வளையத்திலேயே இருக்காங்க. சிலர் மீது அதிரடி ரெய்டுகளும் நடக்குது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சபரீசனுக்குச் சொந்தமான பங்களாவில் இருந்து, கரன்ஸிகள் விநியோகிக்கப்படுவதாக, தகவல் வர, அதையும் வருமான வரித்துறையின் ரகசியக் கண்காணிப்பில் வச்சிருக்காங்களாம்.''’’
""நெருக்கடிக்கிடையில் எப்படி சொந்தக் கட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வேலை பார்க்கப் போறாங்களாம்?''’’
""இப்படியெல்லாம் நடக்கும்கிறதை தி.மு.கவும் முன்கூட்டியே யூகிச்சி, அதற்கேற்றபடி உழைக்குதாம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் கடந்த சில நாட்களா தி.மு.க.வினரிடம் வேகம் தெரியுது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலரும், ராகுல் உள்ளிட்ட தங்கள் டெல்லி மேலிடத்தைத் தொடர்புகொண்டு, தேர்தல் பணிகளைக் கவனிக்க தி.மு.க. தரப்புக்கு நாம் ஏதேனும் கொடுக்க வேண்டும்னு தெரிவிச்சிருக்காங்க. ஆனா அறிவாலயமோ, "காங்கிரஸிடம் செலவுக்கு எதிர்பார்க்காதீர்கள்' என்றபடி, காங்கிரஸ் தொகுதியில் களப்பணியாற்றும் தி.மு.க நிர்வாகிகளுக்காக தலா "1 சி' தரப்பட்டிருக்காம். அதேபோல பானை சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், சூரியனில் போட்டியிடும் ம.தி.மு.க., ம.ம.க. கட்சிகளுக்காவும் தி.மு.க.வினரை ஸ்டாலின் முடுக்கிவிட்டிருக்காரு.''’’
""அ.தி.மு.க. சைடில் கண்ணீரும் தழுதழுத்த குரல்களுமா கடைசிக்கட்ட பிரச்சாரம் நடக்குதே?''’’
""ஆ.ராசா பேசியதை முன்வைத்து, தன் தாயை நினைத்து கண்கலங்கி தழுதழுத்து பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எனக்கு சுகர் வந்திடிச்சி... உடம்பு இளைச்சிடிச்சி... வெயிட் குறைஞ்சிடிச்சின்னு கண்ணீரோடு பிரச்சாரம் செய்தாரு சுகாதாரத் துறை விஜயபாஸ்கர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, "ஜெயலலிதா தன்னை புள்ளை மாதிரி பார்த்துக்கிட்டாரு'ன்னு சொல்லி அழுதாரு. சென்ட்டிமெண்ட் மூலமா தங்களோட வெற்றியை தக்க வச்சிக்கலாம்ங்கிறதுதான் அ.தி.மு.க. தரப்பின் கடைசிக்கட்ட வியூகமா இருக்கு. இதிலே எந்தெந்த அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினும் தி.மு.க. கூட்டணியினரும் ஊழல் புகார்களை அதிகமா அடுக்குறாங்களோ, அந்த அமைச்சர்களெல்லாம் சென்ட்டிமெண்ட்டா அழுகாச்சி பிரச்சாரத்தை கையில் எடுக்குறாங்க.''’’
""ம்...''’’
""கடந்த 8 வருடங்களாக விஜயபாஸ்கரிடம் சீனியர் பி.ஏ.வாக இருப்பவரு குமார். ஏற்கனவே விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது, இவரது வீட்டிலும் ரெய்டு நடந்துச்சு. இந்த குமாரின் கட்டுப்பாட்டில்தான் உணவு பாதுகாப்புத் துறையும் இயங்குது. இந்தத் துறையில் நடந்த பலகோடி ரூபாய் ஊழலில் இவரது பங்களிப்பு தான் அதிகமாம். அரசு அதிகாரியான குமார், தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக கடந்த ஒரு மாதமாகவே புதுக்கோட்டையில் தங்கி யிருந்து விஜயபாஸ்கருக்கு தேர்தல் வேலை பார்க்கிறாராம். அவரோட உத்தரவின் பேரில், அங்கிருக்கும் உணவு பாது காப்புத் துறை அதிகாரிகளும், அரசு மருத்துவமனைகளின் நியமன அலுவலர்களும் களமிறங்கியிருக்காங்க. இவர் கள் மூலமாத்தான் வாக் காளர்களுக்கு பரிசுப்பொருட் கள் முதல் பணப்பட்டுவாடா வரை நடக்குதாம். விஜய பாஸ்கருக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மற்றும் உணவு பாதுகாப்புப் பிரிவின் ஹெல்த் ஆபீசரான டாக்டர் சுப்பையா காந்தி, மெடிக்கல் ஆபீசர் கேடரில் உள்ள திருச்சி டாக்டர் ரமேஷ்பாபு, புதுக்கோட்டை டாக்டர் பிரவீன், தஞ்சை டாக்டர் சித்ரா உள்ளிட்டோர் பம்பரமா தேர்தல் வேலை பார்க்கறாங்க. இதுபற்றி மாவட்ட தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தும், இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலை.''’’
""வன்னியர் சமுதாயத்திற்கான உள்ஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதுன்னு ஓ.பி.எஸ். சொல்ல, டாக்டர் ராமதாஸ் ரொம்ப கோபமா அதை மறுத்து அறிக்கை விட்டாரு. அமைச்சர் சி.வி.சண்முகமும், "எல்லா சட்டமும் நிரந்தரமானதுதான், தற்காலிகமில்லை'ன்னு சொல்றாரு. என்ன பிரச்சினை?''’’
""வன்னியர் உள்ஒதுக்கீடு வட மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு சாதகமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. அதனால சி.வி.சண்முகம் அதன் தன்மையை வலி யுறுத்துறாரு. ஆனா, தென் மாவட்டத்தில் உள்ள பிற சமுதாயத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க ஓ.பி.எஸ். அதை தற்காலிகம்கிறாரு. இதற்கிடையிலே, வன்னியர் சங்கத் தலைவரா இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துவருகிறார். "எங்க அப்பா, ஜெயலலிதா போலவே மருத்துவரீதியான மர்மத்துடன்தான் இறந்திருக்கிறார். அவரை மயக்கத்திலேயே வைத்திருந்தார்கள். எங்களைக்கூட பார்க்க விடலை''ன்னு தைலாபுரத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். இதனால் டென்ஷனான பா.ம.க.வினர், அரக்கோணம் அருகே, அவர் வாகனத்தை மறித்து தகராறு செய்து பதட்டத்தை உண்டாக்கிட்டாங்க. அதேபோல் பண்ருட்டியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனை, பா.ம.க. அன்புமணி மிகவும் மோசமாக விமர்சிச்சாரு. இதெல்லாம் பா.ம.க.வுக் குள்ளேயும் வன்னியர் சமுதாயத்தினரிடமும் புகைச்சலை உண்டாக்கியிருக்கு.''’’
""எல்லா விவரங்களும் டெல்லிவரை ரிப்போர்ட்டா போயிருக்குமே?''’’
""சில ரிப்போர்ட்டுகள் டெல்லியை அதிர வச்சிருக்காம். தேர்தல் களம் தி.மு.க .வுக்கு சாதகமாக இருப்பதாகவும், அ.தி.மு.க. பல வகையிலும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டி ருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்டில், தமிழகத்தில் ஈழ அரசியலின் தாக்கம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்குதுன்னு சொல்லியிருக்காம். அதனால் ஐ.நா. சபையில் அண்மையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட போர்க்குற்றத்துக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காத கோபம், பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை வேகப்படுத்தி யிருக்குன்னும், பிரபாகரன் படம், புலிக்கொடினு அரசியல் செய்யும் சீமானின் ’நாம் தமிழர்’ கட்சிக்கு 5% அளவுக்கு பரவலான ஆதரவும் ஒருசில தொகுதிகளில் 16 சதவீத ஆதரவும் இருக்குன்னு ரிப்போர்ட் சொல்லியிருக்குது.’’
""சசிகலாவின் திடீர் பயணம் பற்றி ஏதாவது செய்தி இருக்குதா?''’’
""கோயில் கோயிலாக சசிகலா டூர் அடிச்சிக்கிட்டு இருக்கார். அப்போ அங்கங்கே அ.ம.மு.க வேட்பாளர்களையும் சந்திச்சி உற்சாகமூட்டறார். அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிருந்த அவர், அங்கிருந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அப்ப முக்குலத்தோர் லாபி மூலம் சில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரை சீக்ரெட்டாக சந்திச்சிப் பேசியிருக்காங்க. அவருடையை பயணத் திட்டத்தை முன்னாள் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தான் கவனிக்கிறாராம். சசிகலா தன்னைச் சந்தித்தவர்களிடம், தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தோற்கும். அதிலும் கோயில் பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, அரூர், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், மன்னார்குடி உள்ளிட்ட 30 தொகுதிகளில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குதான் வரும்னு சொன்னதோடு, தமிழக தேர்தல் களம் பற்றிய துல்லியமான நிலவரத்தையும் சொல்லி அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தினாராம்.''’’
""நானும் முக்கியமான ஒரு பகீர் தகவலைப் பகிர்ந்துக்கறேன். சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், சாகசத்துக்குப் பெயர்போன இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி வில்லங்கப் புகாரில் சிக்கியிருக்காராம். பெண்கள் தொடர்பான அவர் பற்றிய புகார்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை போயிருக்கு. அதனால் அவரைப் பற்றி ரகசியமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கு மத்திய உளவுத்துறை. தமிழக தேர்தல் முடிந்ததும் இந்த விவகாரம் பூதாகரமாகும்னு ஐ.பி.எஸ். வட்டாரத்திலேயே டாக் அடிபடுது.''’
__________
இறுதிச்சுற்று!
தபால் வாக்கு தில்லுமுல்லு!
தென்காசி கல்வி மாவட்டத்தின் சுரண்டை ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் வாக்குச்சீட்டினை பேஸ்புக், வாட்ஸப்பில் பரப்பியது தொடர்பான புகார்கள் கிளம்ப, தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியை அனுஷ்டாளை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
அனுஷ்டாளோ "தபால் வாக்குச்சீட்டை நான் பெறவில்லை. எனக்கு பேஸ்புக் கணக்கு கிடையாது. யாரோ மர்மநபர் எனது தபால் ஓட்டைப் பெற்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக' கலெக்டரிடமும் போலீசிலும் புகார் செய்தார். விசாரணையில் வெள்ளக்கால் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியையான கிருஷ்ணவேணி அதனைப் பெற்றதும், அதை முறைகேடாகப் பயன்படுத்திப் பின் வாட்ஸப்பில் பதிவிட்டது அவர் கணவர் கணேசபாண்டியன் என்பதும் தெரியவந்திருக்கிறது. கிருஷ்ணவேணி, கணேசபாண்டியன், அ.ம.மு.க. நிர்வாகி செந்தில்குமார் மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோல, வயதான வாக்காளர்கள் உள்ளிட்ட பலரது பெயர்களிலும் யாரோ கையெழுத்துப் போட்டு, தபால் வாக்குகளில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-பரமசிவன்