"அண்ணன் என்னுடன்தான் இருந்தான்...''

"மார்பில் சேலை நுனியைப் பிடித்தபடி உறங் கிக்கொண்டிருந்தான் என் குழந்தை!" "வெளியில் சத்தம் அதிகமாகக் கேட்கிறது. வெளியில் சென்று பார்க்கின்றேன் எனச் சென்றவள் காணவில்லை'' 

Advertisment

இப்படியான துயரக்குரல்கள் தான் இலங்கை முழுவதும்... இலங்கையில் இப்போதுவரை 334 நபர்களை பலிகொண்டும், 370 நபர்களை மாயமாக்கியும் ஓய்ந்திருக்கின்றது டிட்வா புயல்!

Advertisment

கொழும்பு, அனந்த்புரா, பதுளை, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, ரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையின் 17 மாவட்டங்களை அடையாளமே தெரியாமல் புரட்டிப்போட்டுள்ளது டிட்வா புயல். புயல் காரணமாக நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய மாத்தளை மாவட்டத்தில் அதிகபட்சமாக 54 சென்டி மீட்டர் மழை பெய்தது. கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 30 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவானது. களனி நதி பெருக்கெடுத்து, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்த, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 35 பேர் மண்ணில் புதைந்தனர். ரம்போடா கிராமத்திற்கு மேலேயுள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாறைகள் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது. 

பேரழிவின் அச்சத்தில் இருக்கும் இலங்கை யில்  மீட்பினை எங்கிருந்து தொடங்குவது? என்பது அரசுக்கு சவாலாக இருந்த நிலையில் ராணுவம், காவலர்கள், தீயணைப்புத்துறை, பேரிடர்க்கால மீட்புப் படை மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு மீட்பினை துவங்கியது இலங்கை அரசு. பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 நபர்களை 212 ரக ஹெலி காப்டரின் மூலம் மீட்ட விமானப்படையினர், அனுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை யடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரையும் மீட்டனர்.

Advertisment

"மக்கள் நித்திரையில் இருந்தபொழுது நிலச்சரிவு ஏற்பட்டது. நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி பரவிய வேளையில் எங்களது பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் எங்களது ரம்போடா கிராமமே நிலச்சரிவில் சிக்கிக்கொண் டது. மலைக்கு அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் பலியானதாகச் சொல்கிறார்கள். இதில் சில வீடுகளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டன. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக்கொண்டுள் ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழியில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை வழியில்லை'' என்கின்றார் நிலச்சரிவில் சிக்கிய ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த யோஹன் மலக.

srilanka1

அதே கிராமத்தை சேர்ந்த இன்னொருவரோ, "இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உட்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பினர். அப்படியும் குழந்தை இறந்துவிட்டது. மீதமுள்ளோரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வழியில்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் எங்கு செல்வது? மக்களை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை'' என்கின்றார். இது இப்படியிருக்க,  அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். 

இதே வேளையில், மோசமான வானிலை காரணமாக கொழும்புவிலிருந்து சென்னைக்கு செல்லவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. இதனையடுத்து துபாயிலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு பயணித்த தமிழர்கள் உட்பட 300 பயணிகள் மூன்று நாட்களாக கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  போதுமான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிக்கினர். இந் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டுவரும் முயற்சியில் இறங்கினார். அவரது அறிவுறுத்தலின்படி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சா.மு.நாசர் களமிறங்கினார். முன்னதாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டு, விமான நிலையத்தில் தங்கியுள்ள தமிழர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்துதருமாறு கேட்டுக்கொள் ளப்பட்டது. பின்னர் அங்கிருந்து மொத்தம் 177 பேர்(113 ஆண்கள், 60 பெண்கள், 4 குழந்தைகள்) முதற்கட்டமாக பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இலங்கையின் பெரும்பகுதியில் வெள்ளப் பெருக்கு சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சர்வஜன செனஹச வேலைத்திட்டம், சர்வஜன அதிகாரத் தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் தலைமையில் முன்னெடுக்கப் பட்டது. இதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிட்ரஸ் ஹோட்டலிலிருந்து காலை, மதிய மற்றும் இரவு உணவுகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் சமையலுக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களும் படகுகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

27ஆம் தேதியன்று சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வந்த சரசவிகம - ஹதபிம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 4 சிறார்கள் உட்பட 23 தமிழர்கள் உயிரிழந்தனர். இதில் "தாய் ஒருவர் அவருடைய 8 மாதக் குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தது காண்போருக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

srilanka2

நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், இலங்கையை பேரிடரிலிருந்து மீட்க, 21 டன் நிவாரணப் பொருட்களுடன் 80 பேர் கொண்ட இந்திய மீட்புக்குழு இலங்கை சென்றடைந்தது. கொழும்பு சென்றடைந்ததும் "ஆபரேஷன் சாகர் பந்து' நடவடிக்கையைத் தொடங்கி, மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதே வேளையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 8,129 குடும்பங்களைச் சேர்ந்த 25,935 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், 966 குடும்பங்களைச் சேர்ந்த 3,052 நபர்கள், 36 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது. 4,904 குடும்பங்களைச் சேர்ந்த 15,872 நபர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்துயரமான தருணத்தை தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி, முட்டை ரூ.40, தக்காளி ரூ.1200, கத்தரி. ரூ.800, மரவள்ளி. ரூ.250, பாகற்காய் ரூ.1600, வெண்டைக்காய் ரூ.400, ப.மிளகாய் ரூ.800 என விலையை ஏற்றி கொள்ளை லாபமடித்தது ஒரு கூட்டம். 

"இந்த பேரழிவு ஏற்கெனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான். திரைப்பட நடிகரும் இயக்குநருமான அனுமோகன் இலங்கை குறித்து, "முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கடலும் பொங்கும்' என்று சித்தர்கள் கனவில் கூறியதாகச் சொல்லியிருந்தார். டிட்வா புயல் ஆடிய கோரதாண்டவத்தில் அது நடந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது'' என்றொருவர் பதைபதைத்தார்.


____________________________
டிட்வா புயல்! துயரத்தில் டெல்டா மாவட்டங்கள்!

srilanka3

டிட்வா புயல் காரணமாக 2 நாட்கள் விடாமல் மழை பெய்ததில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீரில் பயிர்கள் மூழ்கின. கடந்த குறுவை சாகுபடி நெல்லை அறுவடை செய்யமுடியாது மழை நாசம் செய்ததுபோல், தற்போது சம்பா பயிரையும் மழைத்தண்ணீர் மூழ்கடித்துவிட்டதே என்று விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கக்கரைக்கோட்டையை சேர்ந்த யேசு தன் குடும்பத்தினருடன் 300 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். பின்னையூரிலுள்ள தோப்பில் ஆடுகளை கிடையில் அடைத்துள்ளார். 2 நாட்கள் தொடர்மழையில் 50 செம்மறி ஆடுகள் உயிரிழந்ததில், எதிர்காலமே போனதேயென்று வருந்திய யேசு, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

பேராவூரணி அருகே பைங்கால் உக்கடை பகுதியில், அறுந்துவிழுந்த மின்கம்பியில் சிக்கி, பழனிவேல் என்பவரின் மாடும், சிந்தாமணி என்பவரின் ஆடும் பலியாகின. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்குகாடு பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல பழங்குடியின மக்கள் பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்ததால் முகாம்களில் தங்கவைக்கப் பட்டனர். 

-இரா.பகத்சிங்