காவல் நிலையத்தில், லாக்கப்பில் மரணங்கள் நடைபெறுவதில் தமிழ் நாடு, இந்தியாவில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்று 2018க்கான தேசிய ஆவண அறிக்கை கூறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 12 பேர் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 157-க்கும் மேலான லாக்கப் மரணங்களுக்கு எந்தவித வழக்குகளும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் இதற்காக உறவினர்களும் சில அமைப்புகளும் மறியல் போராட்டம் நடத்துவதோடு முடிந்து போகிறது. எந்த தீர்வும் கிடைப்பதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ddசாத்தான்குளத்தில் நடந்த தந்தை- மகன் மரணம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, ஆரம்பத்தில் தமிழக முதல்வரே இது மூச்சுத்திணறலால் ஏற்பட்ட மரணம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு இது லாக்கப் மரணம் அல்ல என்றும் கூறி வந்தனர். ஆனாலும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உரிய நேரத்தில் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்ததின் அடிப்படையில் இன்று சிபிசிஐடி போலீசாரால் சாத்தான் குளம் காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின் றன. இதற்காக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சாத்தான்குளம் சம்பவத்தை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முன்னேற்றமான விஷயமாக இருந்தாலும், சாத்தான்குளம் சம்பவத்தில் சட்டம் தன் கடமையை சரியாக செய்ததா என்ற கேள்வி எழுகிறது. வழக்கில் இந்த 6 பேர் மட்டுமே குற்றவாளிகளா? இதேபோன்ற ஒரு நிகழ்வு வருங்காலத்தில் வேறு காவல்நிலையத்தில் நடக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா? இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் கடை திறந்து வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் கடையை மூடச் சொல்லி எச்சரிக்கை செய்திருக்கலாம், அபராதம் விதித்திருக்கலாம், கடையை சீல் வைத்திருக்கலாம், வழக்குகூட பதிவுசெய்திருக்கலாம். ஆனால் பொதுமக்கள் யாரிடமிருந்தும் எந்த புகாரும் இல்லாத சூழ்நிலையில் ஒரு கான்ஸ்டபிள் புகார் கொடுக்க அதை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பொய்யான முதல் தகவல் அறிக்கை தயாரித்து அதற்காக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து இரண்டு பேருக்கும் மரணம் ஏற்படுத்துவது மிகப்பெரிய அத்துமீறலும் அடக்குமுறையும் ஆகும்.

Advertisment

இதை தடுக்க வேண்டிய பொறுப்பும் வாய்ப்பும் மாஜிஸ்திரேட்டுக்கு சட்டம் வழங்கி உள்ளது. காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை அடித்ததை மாஜிஸ்திரேட்டால் தடுத்திருக்க முடியாது என்றாலும் அவர்களது மரணத்தை அவரால் தடுத்திருக்க முடியும். போலீசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் குறிப்பிட்டுள்ளது, மேலும் ஜனவரி 2019 ல் சென்னை உயர்நீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் வழக்கில் அளித்த தீர்ப்பில் ""ஏழு வருடங்களுக்கு குறைவான தண்டனை உள்ள குற்றங்களுக்கு உடனடியான கைது தேவையில்லை என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41ஆ படி குற்றவாளிக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்து, கைதுசெய்ய வேண்டிய முக்கிய தேவை இருந்தால் அதற்கான முழு அறிக்கையையும் இன்ஸ்பெக்டர் தயாரித்து மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. தமிழக காவல்துறை இனிவரும் காலங்களில் இந்த உத்தரவை பின்பற்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் அனைத்து காவல் நிலையங் களுக்கும் இந்த உத்தரவை சுற்றறிக்கையாக டிஜிபி அனுப்பி பின்பற்ற வேண்டும் என்றும் கூடுதலாக கூறப்பட்டிருந்தது.

dd

இவ்வாறான உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் வழிமுறைகளையும் சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் பின்பற்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை ரிமாண்ட் செய்ய மறுத்து தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை யில் விடுவித்திருக்கலாம், அல்லது அவர்களின் காயங்களை பார்வையிட்டு அவர்களிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்துமீறல்களை கேட்டு அறிந்து அவர்கள் நோயின்றி காயங்களின்றி உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் இருக் கிறார்களா என்பதை உறுதி செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அவர்கள் இருவரும் தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அதற்கு மாறாக அவர்களை ரிமாண்ட் செய்து அவர்கள் இருவரும் ஜுடிசியல் கஸ்டடியில் மரணமடைந் துள்ளதால் இதற்கு முதன் முதலில் பதில் சொல்ல வேண்டியது சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் ஆகும். அங்கிருந்துதான் விசாரணையையே தொடங்கி இருக்க வேண்டும்.

Advertisment

காவலர், மருத்துவர், ஜெயிலர் அனைவரும் அரசு பணியாளர்கள் என்ற ஒரே குடையின் கீழ் நிர் வாகத்துறையில் பணியாற்று பவர்கள். இவர்கள் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து செய்யும் தவறுகளையும் அத்துமீறல்களையும் தடுப் பதற்காகவே அரசிய லமைப்பு சட்டப்படி நீதித்துறை தனியாக கட்டமைக்கப்பட் டுள்ளது அவ் வாறு சுதந்திர மாக செயல்பட வேண்டிய நீதித்துறை கடமையை சரியாக செய்யவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சட்டம் தன் கடமையை செய்யும் என்பது ஒருவர் எவ்வளவு பெரிய குற்றம் செய்து இருந்தாலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் தடயங்களையும் சமர்ப்பித்து எந்தவித உள்நோக்க மும் இன்றி வழக்கு நடத்துவது ஆகும். அதனால் குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் இதனால் மற்றவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள்.

அவ்வாறு இல்லாமல் காவல் நிலையமே நீதிமன்றமாக மாறுவது தவறு.

காவல் நிலையத்திலேயே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கும் நடவடிக்கையாக காவல் நிலைய குளியலறையில் குற்றவாளி வழுக்கி விழுந்ததாக கை, கால்களில் மாவு கட்டுடன் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் நிகழ்வு சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வருகிறது. இந்த மனித உரிமை மீறலை யாரும் கண்டிக்காமல் தப்பு செய்பவர்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்ற மனப்போக்கிற்கு வந்ததன் விளைவாகவே தற்போது போலீசார் அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளனர் .

1861 ல் பிரிட்டிஷ் காலத்தில் இருந்த போலீஸ் சட்டத்தைத்தான் நாம் இப்போதும் பின்பற்றி வருகிறோம். வெளிநாட்டில் இருந்து வந்து நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார், இங்கே எந்த ஒரு செயல்பாடும் தங்களுக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்பதற்காக கொண்டு வந்த சட்டத்தை நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகும் பின்பற்றி வருகிறோம். அதனால்தான், அரசை விமர்சனம் செய்யும் பேச்சுக் களுக்குகூட "தேச விரோதி' என்று வழக்கு போடுகிறார்கள்.

மக்கள் சுதந்திரமாக கருத்துகளை சொல்வதற்குத்தான் அரசியல் அமைப்பு சட்டம் உரிமை கொடுத்திருக்கிறது. 1861இல் பிரிட்டிஷ் ஆட்சியில் வந்த போலீஸ் சட்டப்படி இந்திய குடிமகனுக்கு சட்டஉரிமை கிடையாது ஆனால் இன்று 2020ல் இருக்கும் ஒரு இந்திய குடிமகனுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்படி அடிப்படை உரிமைகள் பல இருக்கிறது .

lawyer

ஒருவரை கைது செய்ய போலீசுக்கு இருக்கும் சட்டம் வழங்கியுள்ள உரிமையை போன்று, கைது செய்யப்படுபவர்களுக் கும் ஏராளமான உரிமைகளை சட்டம் வழங்கி உள்ளது. ஆனால் இன்று வரை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒருவரை கைது செய்யும் போலீசார் ""நான் உன்னை குறிப்பிட்ட வழக்கில் கைது செய்கிறேன் உனது குடும்பம் மற்றும் வக்கீல் ஆகியோருக்கு தகவல் தெரிவித்து உன்னுடைய உரிமைகளை நிலைநாட்டிக்கொள்'' என சொல்லக்கூடிய ஒரு காவல்துறை அதிகாரிகூட கிடையாது என்பது துரதிர்ஷ்டவசமான நிலை. காவல்துறையினருக்கு சுதந்திரம் இல்லாத காரணத்தாலும் ஆட்சி நிர்வாகத்தின் அடியாட்களாக அவர்கள் பயன்படுத்தப்படுவதாலும் இந்த உரிமைகள் நிறைவேற்றப்படுது இல்லை.

எனவே பிரிட்டிஷ் காலத்து போலீஸ் சட்டங்கள் மாற்றப்படுவதோடு உடனடியாக போலீஸ் துறையில் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும். அதிகபட்சமாக காவல் துறையினரின் மன உளைச்சலை போக்க பல்வேறு திட்டங்கள் மட்டுமே வகுக்கப்படுகிறது. ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதோடு நிறுத்தி விடக்கூடாது அதே அளவு செலவுகளை செய்து இதுபோன்ற அத்துமீறல்கள் அடக்குமுறைகள் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் அந்த ஆய்வுகளின் முடிவை உள்துறையும் காவல்துறையும் பரிசீலித்து அமல்படுத்த முன்வர வேண்டும்.

அதைப் போன்று முக்கியமாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒருவரை கைது செய்துவிட்டால் அவரை தண்டித்ததாக கருதும் மனோபாவத்தில் இருந்து இந்த சமுதாயம் வெளியில் வரவேண்டும் . முதல் தகவல் அறிக்கையும் கைது செய்வதும் முக்கியம் அல்ல இறுதி விசாரணை அறிக்கையை நல்ல சாட்சியங்களுடனும் தடயங்களுடனும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஒரே மாதத்தில் அந்த சாட்சிகள் விசாரிக்கப்பட கூடிய அளவு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் இந்த நாட்டில் குற்றங்கள் குறையும். காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகங்களும் குறையும்.

அப்போதுதான் இந்த சீருடை அணிவது பொதுமக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் என்ற எண்ணம் காவலர்களுக்கு வரும் அதன் மூலமாகவே காவல்துறை உங்கள் நண்பன் என்பதும் நிரூபணமாகும்

_____________

கைது செய்யப்படுபவரின் உரிமைகள்!

ஒருவரை கைது செய்யும்பொழுது காவலர்கள் பின்பற்றவேண்டிய சில வழிகாட்டுதல்களை டி.கே.பாசு வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி அனைத்து கைதுகளும் இந்த வழிகாட்டுதல்கள் படி நிகழவேண்டும் என்றும் ஆணையிட்டது. ஒருவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரியின் பெயர்-விவரம் ஆகியவை கைது செய்யப்படும் நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவரின் கையெழுத்து- மூன்றாம் நபரின் கையெழுத்து ஆகியவை கைது மெமோவில் இருக்கவேண்டும். கைது செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பருக்கு கைது நேரம்- காவலில் உள்ள இடம் உள்ளிட்ட தகவலைத் தெரிவிக்க வேண்டும். இவற்றை காவல் நிலையத்தில் பதிவு செய்வதுடன், கைதான வருக்கான சட்ட உரிமையையும் வழங்கவேண்டும். காயங்களையும் குறிப்பிடவேண்டும். 48 மணிநேரத்திற்கு ஒரு முறை டாக்டரால் பரிசோதிக்கப்பட வேண்டும். வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் மாஜிஸ்ட்ரேட்டிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும் இதைப் பின்பற்றாத காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் இந்தத் தீர்ப்பு வழிவகுக்கிறது.