கல்லூரியில் நடை பெறும் அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய காரணத்திற்காக 10 ஆண்டுகளாக ஊதியத்தை பிடித்தம் செய்து சர்வாதிகாரத் தனம் செய்யும் கல்லூரி செயலரை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் அரசு உதவிபெறும் மீனாட்சி மகளிர் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரு கின்றனர். 60க்கும் மேற்பட்ட பேராசிரி யர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பணிபுரியும் சுஜாதா, அகிலாதேவி, வெண்ணிலா ஆகிய 3 பேராசிரி யர்கள், 07.10.2025ஆம் தேதி, "பேராசிரியர்களுக் குள்ளே பாகுபாடு காட்டாதே! எங்களின் ஊதியத்தை எங்களிடமே ஒப்படைக்கவேண்டும்!' எனக்கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கல்லூரியில் செயலராக பணிபுரியும் கே.எஸ்.லட்சுமி என்பவரே இந்த போராட்டத்தின் காரணகர்த்தா. மீனாட்சி மகளிர் கல்லூரியில் இவர் வைப்பதுதான் சட்டம். அரசு ஆணைகளோ, யு.ஜி.சி. வழிகாட்டுதல்களோ எதையும் மதிப்ப தில்லை. இவருக்கென்று தன்னிச்சையாக சட் டத்தை வகுத்து, அதன்படி நடக்கவில்லை என்றால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, அவர்களுக்கு கிடைக் கும் அரசு சலுகையிலிருந்து எதுவும் கிடைக்காத படி செய்தல், மாணவர்களாக இருந்தால் தேர்வு எழுத விடுவதில்லை. தமிழக அரசின் சேர்க்கை விதிமுறைகளை மாணவர்கள் சேர்க்கையின்போது பின்பற்றுவதில்லை. மாறாக, மாணவர்களின் சேர்க்கைக்காக கொடுக்கப்படும் விண்ணப்பத்தின் படி மாணவர்களை வரவழைப்பதோ, அவர்களின் மதிப்பெண் பட்டியலின்படி பிடித்த பாடப்பிரிவை கொடுப்பதோ இல்லை. பணம் கொடுத்தால் அவர்களுக்கு பிடித்த பாடப் பிரிவோடு சீட் கிடைக்கும். பணமில்லையென்றால் எவ்வளவு அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் இங்கு சீட் கிடைக்காது.
இதுபோன்று சேர்க்கப்படுகின்ற மாணவர் களிடமிருந்து பெறும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் என எதற்குமே ரசீது கொடுக்கப்படுவ தில்லை. மேலும், கல்விக் கட்டணத்தை வங்கிக் கணக்கின் மூலமாகவே கட்டவேண்டும் என விதி இருந்தாலும், அதை மீறிச் செய்துவருகின்றனர். மேலும், கல்லூரி ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே நடத்தப்படவேண்டும். ஆனால் இவர்கள் 7 மணி நேரம் கல்லூரி நடத்துகின்றனர். ஒரு மாணவர் இக்கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புக்கோ அல்லது அக்ரி படிப்பிற்கோ, செவிலியர் படிப் பிற்கோ வேறு கல்லூரியில் சேர்ந்து படிப்பதாக இருந்தால், அதற்கு டி.சி. கேட்கும்போது, மூன்று ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டிய பிறகே டி.சி. கொடுப்பார்களாம். கல்லூரிக்கு காலதாமத மாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ அவர் களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்வது என மாணவர்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒருபுற மென்றால், மறுபுறம், அரசு உதவிபெறும் மீனாட்சி கல்லூரியின் நிரந்தரப் பேராசிரியர்களில் பலரை, அக்கல்லூரி வளாகத்திற்குள்ளே அமைந்துள்ள சுயநிதிக்கல்லூரியில் வகுப்பு எடுப்பதற்கும், தேர்வுப் பணிகளுக்கும் பயன்படுத்துவார்களாம். அதே போல, லயன்ஸ் கிளப்பில் கட்டாயமாகச் சேர்ந்து பணிபுரிய வேண்டும். அதற்கான நிதியை பேரா சிரியர்கள் கொடுக்க வேண்டும். மேலும், கல்லூரி முடிந்த பிறகும் பல மணி நேரம் காத்திருந்து இரவு வருகைப் பதிவேட்டில் கையொப் பம் போட்டபிறகே வீட்டிற்கு செல்லமுடியும் எனப் பேராசிரி யர்களுக்கும் பல்வேறு குளறு படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை எதிர்த்து, அகிலா தேவி, சுஜாதா, வெண்ணிலா ஆகிய மூன்று பேராசிரியர்களும் ஒன்றுசேர்ந்து, "நீங்கள் செய்வது நியாயமா? நாங்கள் அரசு உதவிபெறும் கல்லூரிப் பேராசிரியர்கள். நாங்கள் எதற்கு உங்க தனியார் கல்லூரியில் பாடம் எடுக்க வேண்டும்? எங்களால் முடியாது' என மறுத்துள்னர்.
இதை காரணமாகக் காட்டி, அக்கல்லூரியின் செயலர் லட்சுமி, இந்த மூன்று பேராசிரியர்களை யும் 2015 -17 வரை இரண்டு ஆண்டுகளாக, மாத ஊதியத்தை கொடுக்காமல் நிறுத்திவைத்திருக் கிறார். இந்த அநியாயத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்று போராடி, நிறுத்திவைத்த பணத்தை மீண்டும் பெற்றுள்ளனர். மேலும், 2015ஆம் ஆண்டிலிருந்து இதுநாள்வரையிலும் மாத ஊக்க ஊதியம், பணி மேம்பாட்டுத் தொகை, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியம் என அனைத்தையும் கடந்த 10 ஆண்டுகளாகக் கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளார்கள். இதற்கு மீண்டும் நீதிமன்றம் சென்று அதற்கான தீர்ப்பையும் 2023ஆம் ஆண்டு பெற்ற பின்னரும் இதுநாள் வரையும் இவர்களின் ஊதியம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை இணை இயக்குனர் சுடர்க்கொடி பலமுறை, அக்கல்லூரி நிர்வாகத்திடம், விதிமுறைப்படி இவர்களுக்கு சேரவேண்டியதை வழங்கும்படி வற்புறுத்தியும் கல்லூரிச் செயலர் கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறாராம். இதனால் இந்த மூவரும் தங்க ளுக்கான நீதி கிடைக்கும்வரை கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடாமல் நடத்துகிறார்கள்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பின்னர் நிர்வாகம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் நழுவியதால் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.
இவ்விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனிடம் கேட்டபோது, "இது குறித்து கல்லூரி நிர்வாகத்தோடு பேசி, அனைத்தையும் சரி செய்ய நட வடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதியளித்துள்ளார்.
-சே