இன்று நேற்றல்ல... 50 ஆண்டுகால கோரிக்கை அது. "கல்லாறு சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பெரம்பலூர் நகரும், சுற்றியுள்ள 40-க்கும் அதிகமான கிராமங்களும் தடையில்லாக் குடிநீர் வசதிபெறும்; இப்பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலம் பாசன வசதி பெறும்... ஆகவே சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்' என்று 50 ஆண்டுகளாக மன்றாடினார்கள் பகுதி விவசாயிகள்.
""சமீபத்தில் "கல்லாறு என்ற கோரையாற்றில் சின்னமுட்லு எனுமிடத்தில் 135 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் (சிறிய அணை) கட்டப்படும். இதன் ஆய்வுக்காக இதோ 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது' என்று அறிவித்தது எடப்பாடி அரசு.
அடுத்த சில நாட்களிலேயே சின்னமுட்லு பகுதி நில உரிமையாளர்கள் சிலர், இத்திட்டத்தை முடக்குவதற்கான வேலைகளில் தீவிரமானார்கள். இந்த எதிர்ப்பாளர்களுக்கு தலைமை தாங்கி நடத்துபவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் அவர் கணவர் சரவணனும்தான்'' என்கிறார்கள் விவசாய சங்க பிரமுகர்கள்.
பெரம்பலூருக்கு மேற்கே பச்சைமலையில் எட்டெருமைப்பாழி எனும் கொட்டும் அருவியே கோரையாறு என்றழைக்கப்படும் கல்லாறாக பெருகி அரும்பாவூர், கிருஷ்ணாபுரம், வெண்பாவூர் வழியே பயணித்து திருவாலந்துறை எனும் இடத்தில் வெள்ளாற்றில் இணைகிறது.
இந்தக் கல்லாற்றில் சின்னமுட்லுவில் கட்டப்படும் நீர்த்தேக்கத்திற்கு தருமபுரி ஆட்சியர் மலர்விழியும் கணவர் சரவணனும் ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்?
""நீர்த்தேக்கம் அமைப்பதற்காக சின்னமுட்லுவில் 225 ஏக்கர் பட்டா நிலமும் 30 ஏக்கர் அரசு நிலமும் கையகப்படுத்தியாக வேண்டும். இதில் 60 ஏக்கர் நிலம் தருமபுரி ஆட்சியர் மலர்விழிக்கும் அவர் கணவருக்கும் சொந்தமானது. "நிலத்தைக் கொடுக்காதீர்கள்' என்று மற்றவர்களைப் போராடத் தூண்டுவதோடு, மற்ற வழிகளிலும் முட்டுக்கட்டை போடுகிறார். அதனால், "இத்திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் கிடப்பில் போட்டுவிடாதீர்கள்... நிறைவேற்றுங்கள்' என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம்'' என்கிறார்கள் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் செல்லத்துரையும் உழவர்மன்றத் தலைவர் பூலாம்பாடி வரதராஜனும்.
சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படுமா? முட்டுக்கட்டை போடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் இதுபற்றிக் கேட்பதற்காக பலமுறை போன் செய்தோம். போனை எடுத்த பர்சனல் கிளார்க், ""மேடத்திடம் கேட்டுச் சொல்கிறேன்'' என்ற பதிலைத்தான் பலமுறையும் சொல்கிறார்.
-எஸ்.பி.சேகர்